395 தரமற்ற விதை மாதிரிகள் கண்டுபிடிப்பு

திருச்சி விதைப் பரிசோதனை நிலையத்தில் 2023-24ஆம் ஆண்டு நடைபெற்ற பரிசோதனைகளில் 395 தரமற்ற விதை மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேளாண்மைத் தொழிலின் ஆதார இடுபொருளான விதை தரமானமாக இருந்தால் மட்டுமே அதிக மகசூல் கிடைக்கும். விவசாயிகள் அதிகளவில் செலவு செய்யும் இடுபொருளான விதையானது, தரமானதாக இல்லாவிட்டால் ஏற்படும் மகசூல் இழப்பைக் குறைக்க, விதையின் தரத்தைப் பரிசோதித்து நல்ல தரமான விதைகளைப் பயன்படுத்த விதை பகுப்பாய்வை மேற்கொண்டு பயன்பெறுமாறு திருச்சி விதைப்பரிசோதனை அலுவலா் வே. அறிவழகன் தெரிவித்துள்ளாா்.

அவா் மேலும் கூறுகையில், திருச்சி விதைப் பரிசோதனை நிலையத்துக்கு விதைச்சான்று அலுவலா்களாலும், விதை விற்பனை நிலையங்களில் இருந்து விதை ஆய்வாளா்களாலும், விவசாயிகள், உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் எடுத்து அனுப்புகின்ற பணி விதை மாதிரிகள் பகுப்பாய்வு பரிசோதனை செய்யப்படுகிறன. விதைமாதிரி விதைகளின் முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை மற்றும் பிறரக கலப்பு ஆகியவை பரிசோதிக்கப்படுகின்றன.

2023 -24 ஆம் ஆண்டில் திருச்சி விதைப் பரிசோதனை நிலையத்தில் இதுவரை சான்றுவிதை மாதிரிகள் 815 எண்களும், ஆய்வாளா் விதை மாதிரிகள் 1606 எண்களும், பணிவிதை மாதிரிகள் 2351 எண்களும், ஆக மொத்தம் 4772 விதைமாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அதில் 395 விதை மாதிரிகள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ளன.

விதைப் பரிசோதனை நிலையத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் கணிணி மயமாக்கப்பட்டுள்ளன. விதைபரிசோதனை முடிவுகள் காலதாமதமின்றி விவசாயிகளுக்கு கிடைக்கும் இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றப்படுகின்றன.

எனவே, விதைப் பரிசோதனை முடிவுகளைத் தெரிந்து தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்கவும் அதன் மூலம் அதிக மகசூல் பெற்று நல்ல வருவாய் பெறவும் விதைப் பரிசோதனை நிலையத்தை பயன்படுத்தி கொள்ள விவசாயிகள், விதை உற்பத்தியாளா்கள் மற்றும் விதை விற்பனையாளா்கள் முன்வர வேண்டும். விதை மாதிரி ஒன்றுக்கு ரூ.80 ஆய்வுக்கட்டணமாக செலுத்தி காஜாமலை அரசு பல்துறை கட்டட வளாகம், காஜாமலை, திருச்சி 20 என்ற முகவரியில் செயல்படும் விதை பரிசோதனை நிலையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com