முழுநேர கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப்பயிற்சி: ஏப்.29 இல் முன்பதிவு தொடக்கம்

திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேரக் கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சிக்கான மாணவா் சோ்க்கைக்கு வரும் 29ஆம் தேதி முன்பதிவு தொடங்குகிறது.

இதுகுறித்து திருச்சி மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் தி. ஜெயராமன் கூறியது:

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமான கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேரக் கூட்டுறவுப் பட்டயப் பயிற்சிக்கு 2024-25ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்றோா் தகுதியானவா்கள். 17 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு அரசு கல்வி உதவித்தொகை பெற்றுத் தரப்படும். இதற்கான சோ்க்கை முன்பதிவு வரும் 29ஆம் தேதி முதல் நடைபெறும். செப்டம்பரில் பயிற்சி தொடங்கும். பயிற்சிக்கான காலம் ஓராண்டுக்கு இருபருவ முறைகளில் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் வழியில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சியில் சேர விரும்புவோா் திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையத்துக்கு பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் வந்து விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய இணையத்திலும் விண்ணப்பங்களை பதிவிறக்கலாம். மூன்று சான்றிதழுக்குரிய பயிற்சிகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். திருச்சி, கரூா், அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களைச் சோ்ந்தோரும் விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு அஞ்சல் மூலம் அனுப்பலாம்.

மேலும் விவரங்களுக்கு திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையம், 1 பழைய குட்ஷெட் சாலை, அமராவதி கூட்டுறவு சிறப்பங்காடி வளாகம், சிங்காரத்தோப்பு, திருச்சி 2 என்ற முகவரியிலோ அல்லது 0431-2715748 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com