விடிவுகாலம் பிறக்காதா?

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த 14-12-10 அன்று பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. நல்லவிஷயம்தான். இவ்வுலகம் தோன்றி நாகரிகம் பெற்ற காலத்துக்கு முன்பும், பின்பும் மதுப்பிரச்னை இருந்துகொண்டே
விடிவுகாலம் பிறக்காதா?

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த 14-12-10 அன்று பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. நல்லவிஷயம்தான்.

இவ்வுலகம் தோன்றி நாகரிகம் பெற்ற காலத்துக்கு முன்பும், பின்பும் மதுப்பிரச்னை இருந்துகொண்டே வந்திருக்கிறது. இது உலகப் பிரச்னையாகிவிட்டது. இதை அவ்வளவு எளிதில் நிறுத்த முடியுமா? அண்ணாதுரை ஆட்சிக்கு வந்தார். ராஜாஜியின் துணையுடன் மதுவிலக்கைக் கொண்டு வந்தார்.

கருணாநிதி ஆட்சியில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. எம்.ஜிஆர். ஆட்சியில் இரண்டரை ஆண்டுகள் பூரண மதுவிலக்கு இருந்தது. பின்பு அவரே அதை வாபஸ் பெற்றுக்கொண்டார். அதன் பின்னணி என்னவோ?  ஜெயலலிதா ஆட்சியில் விலக்குவதும், தளர்த்துவதும் என்ற கண்ணாமூச்சி ஆட்டம் காட்டினர்.

மீண்டும் கருணாநிதி ஆட்சியில் ஒரேயடியாகக் கட்டவிழ்த்து விட்டார். வருமானம் உயர்ந்தது. இலவசங்கள் பெருகின. வோட்டும் குவிந்தது. இன்று அதை ஒருவேளை தளர்த்திவிட்டால், தமிழ்நாட்டின் பட்ஜெட் உதைக்குமே! போட்ட திட்டங்கள் நிறுத்தப்படுமே! இலவசங்கள் முடங்குமே! அப்புறம் எப்படி 2011 தேர்தலை எதிர்கொள்வது?

மதுவால் ஆண்டு வருமானம் ரூ. 10,000 கோடி. கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேர்களின் குடும்பங்கள் இதனால் பயன் பெறுகின்றன. மக்களின் மனோபாவமே மாறிவிட்டது.

பணக்காரர்கள், பெண்கள் உள்பட ஜாலிக்காக மது அருந்துகின்றனர். நடுத்தர வர்க்கத்தினர் வாரத்தில் ஓரிரு நாள்கள் மது அருந்துகின்றனர்.

பாட்டாளி வர்க்கத்தினர் உழைத்த களைப்பைப் போக்கக் குடிக்கின்றனர். இதில் எந்த பேதமும் இன்றி குடிக்கு அடிமையானவர்கள் மட்டும் நாட்டில் 25 சதவீதம் என்றும், குடியைப் பற்றி தெரிந்தும் குடிக்காதவர்கள் 25 சதவீதம் பேர்களே என்றும் சுகாதாரச் செய்தியொன்று தெரிவிக்கிறது.

அப்படியானால் 75 சதவீத மக்கள் தெரிந்தும், தெரியாமலும் குடிக்கிறார்கள் என்பதுதானே உண்மை!

"குடி குடியைக் கெடுக்கும்' என்று தெரியாமல் குடிப்பவர்கள் யாருமே இல்லை. எல்லோருமே தெரிந்துதான் குடிக்கிறார்கள். இந்த நிலையில் பூரண மதுவிலக்கை நாட்டில் அமல்படுத்த முடியுமா?

எத்தனை காட்சி ஊடகங்கள், செய்திகள், அனுபவங்கள். குடியின் கோரத் தன்மையைக் காட்டினாலும் அவைகளையும் மிஞ்சிக் குடிப்பது என்பது மக்களின் இன்றியமையாத வாழ்க்கை முறையாகிவிட்டது என்பதே நிஜம்.

இந்த லட்சணத்தில் குடியைத் தடுக்க போராட்டங்கள் செய்தால் பலன் தருமா?

தரும்... ஆனால் தராது. அமைப்புகள், அரசு, மக்கள் ஆகியோர் இணைந்து தொடர்ந்து போராடினால்தான் பலன் இருக்கும்.

ஆனாலும், ஊத வேண்டிய சங்கை ஊதித்தானே ஆக வேண்டும். குடியின் கொடூரத்தை ஊதுவோம். ஒரு சிலருக்காவது விடியாதா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com