கண் விழிக்குமா கல்வித்துறை!

நாமக்கல் மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு தொடக்கப்பள்ளி மூடு விழா கண்ட செய்தியால் கல்வியாளர்கள் ஆச்சர்யப்பட்டிருக்க மாட்டார்கள், எதிர்பார்த்தது தான். காரணம் நான் தொடக்கநிலைக் கல்வியில் ஆசிரியர்களுக்குப் பய
கண் விழிக்குமா கல்வித்துறை!

நாமக்கல் மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு தொடக்கப்பள்ளி மூடு விழா கண்ட செய்தியால் கல்வியாளர்கள் ஆச்சர்யப்பட்டிருக்க மாட்டார்கள், எதிர்பார்த்தது தான்.

காரணம் நான் தொடக்கநிலைக் கல்வியில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அலுவலராகக் கடலூர் மாவட்டத்தில் பணியாற்றியபோது மாணவர்களின் வருகைப் பதிவில் குறைவு ஏற்பட்டதைக் கண்கூடாகக் கண்டேன். ஏறக்குறைய 43 பள்ளிகள் அவ்வாறு அடையாளம் காணப்பட்டன. இந்த ஆய்வு மாவட்டத்தின் 14 வட்டார பயிற்சி மையங்களிலிருந்து பெறப்பட்ட புள்ளி விவரங்கள் மற்றும் நேரடி ஆய்வுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. அப்போதே நாங்கள், எங்கள் குழு செல்லும் பள்ளிகளுக்கும் ஆசிரியப் பயிற்சிகளின்போதும் சொல்லி எச்சரித்தோம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் நடைமுறையில் உள்ள கீழ்க்கண்ட செயல்பாடுகள் எதுவுமின்றி தனியார் மழலை மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவு கூடியதுதான்.

மாணவர்களின் வருகையை அதிகப்படுத்த அரசுப் பள்ளிகளில் பல அம்சத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

விழிப்புணர்வு பிரசார முறைகள், பெற்றோர் ஆசிரியர்கள் கூட்டம், மாணவர்களுக்கு இலவச புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்கல், வட்டாரப் பயிற்சி மையங்களை அமைத்தல், மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்துதல், இடைநிற்றலுக்கான காரணத்தைக் கண்டறிதல், பெண் கல்விக்கான சிறப்பு மாலை நேரப் பயிற்சிகள், இரவு நேர மாற்றுப் பள்ளிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள் என பல்வேறு திட்டங்கள் உலக வங்கி உதவியுடன் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டாலும் நாளுக்கு நாள் மாணவர்களின் சேர்க்கையில் குறைவு ஏற்பட்டதைப் பெரிதும் அதிர்ச்சியளித்த ஆய்வாகவே கருதினோம்.

இவை குறித்து ஆசிரியர்களின் கூட்டங்களில் பலமுறை எச்சரிக்கைகள் விடுத்தோம். ஏன், ஆசிரியர்களுக்குப் பதவி இறக்கம் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றெல்லாம் எச்சரிக்கை விடுத்தோம். எல்லாம் விழலுக்கு இறைத்த நீரானது என்று இப்போது வெளிவந்த செய்தி உறுதிப்படுத்தி உள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பே எனக்குத் தெரிந்து 3 பள்ளிகளில் மாணவர்கள் வருகை சராசரி 10 என்ற அளவில்தான் இருந்தது. நாங்கள் நினைத்திருந்தால் அப்போது மூடு விழா செய்திருக்கலாம். நமக்கேன் அந்தப் பாவம் என்று மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்ட அலுவலர்களாகிய நாங்கள் வாயை மூடிக் கொண்டோம்.

அடிப்படைக் காரணங்கள் பல இருந்தாலும் பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களின் செயல்பாடுகள்தான் முக்கிய காரணம். அவர்களின் ஆர்வமின்மை, பணியில் அலட்சியம் தான் காரணம். உதாரணமாக பண்ருட்டி அருகில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியரே பள்ளி நேரத்திலேயே குடித்துவிட்டு விழுந்து கிடந்ததை எங்களோடு ஆய்வுக்கு வந்த இணை இயக்குநர் கண்டு அதிர்ச்சியுற்று அந்தத் தலைமை ஆசிரியரைப் பணியிடை நீக்கம் செய்தார்.

ஒரு சில ஆசிரியர்களின் அலட்சியப் போக்கிற்கு உள்ளூர் அரசியல் வாதிகள், அமைச்சர், கல்வி அலுவலர்களின் ஆதரவு என்று வலை பின்னப்பட்டுள்ள சிக்கலான காரணங்கள்.

ஏற்கெனவே காளான் போல் பெருகிவிட்ட தனியார் மழலை மற்றும் மெட்ரிக் பள்ளிகள் இன்னும் குடை விரித்தாடும். அதேநேரத்தில் அரசுப் பள்ளிகளின் மூடு விழா தொடர்கதையாகும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.இனிமேலாவது கல்வித் துறை விழிக்குமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com