உலகமயமாதலும் உள்நாட்டு மொழிகளும்

உங்கள் கையில் உள்ள செல்போனைப் பாருங்கள். உலகமயமாதல், உள்நாட்டு மொழிகளின் நிலை என்பனவற்றிற்கு அதைவிட நல்ல எடுத்துக்காட்டு இருக்க முடியாது. உலகின் எங்கோ ஒரு மூலையில் உருவாகத் தொடங்கியது செல்போன். இன்று
உலகமயமாதலும் உள்நாட்டு மொழிகளும்

உங்கள் கையில் உள்ள செல்போனைப் பாருங்கள். உலகமயமாதல், உள்நாட்டு மொழிகளின் நிலை என்பனவற்றிற்கு அதைவிட நல்ல எடுத்துக்காட்டு இருக்க முடியாது.

உலகின் எங்கோ ஒரு மூலையில் உருவாகத் தொடங்கியது செல்போன். இன்று உலகம் அனைத்தையும் அது ஆட்சி செய்கிறது. தான் மட்டுமா, தன் பெயரான செல்போன் என்ற சொல்லையும் ஆட்சி செய்ய வைத்துள்ளது.

கணினி ஒரு தொழில்நுட்பக் கருவி; இன்று வணிகப் பொருளும் கூட. உலகில் அது நுழையாத பகுதி இல்லை. தான் நுழைந்த இடமெல்லாம் ஆங்கிலம், ஜப்பானியம் போன்ற செல்வாக்குமிக்க மொழிகளையும் எடுத்துச் செல்கிறது.

எங்கேனும் ஒரு அறிவியல், தொழில்நுட்பக் கருத்து உதயமாகிறது. அது வெளியாவது செல்வாக்குமிக்க சில மொழிகள் வழியாகத்தான்.

இப்படியாக உலகமயமாகியுள்ள கருத்துகள், கருவிகள், அவற்றின் விளக்கங்கள், விளம்பரங்கள் எல்லாம் குறிப்பிட்ட சில, செல்வாக்குமிக்க மொழிகள் வாயிலாகத்தான் வெளியாகின்றன.

செல்வாக்கு ஒரு மொழிக்குக் கிடைக்க அரசியல், ஆட்சி, அதிகாரம், பொருளாதார பலம், பெருமளவு மக்கள் தொகை ஆகியன உதவுகின்றன.

செல்வாக்குமிக்க மொழிகள் சிலவற்றின் துணை கொண்டு சமுதாயத்தின் மேல்தட்டு மக்களிடமும், அதிகாரம் கொண்ட மக்களிடமும் சென்று சேரும் பொருள்கள், கருத்துகள் ஆகிய இரண்டும், பின்னர் பிறதளத்து மக்களிடமும் மற்றவர்களிடமும் பரவிச் செல்கின்றன. அவற்றுக்கு உதவுபவை உள்நாட்டு மொழிகள்.

மேன்மையான செல்வாக்குமிக்க மொழிகளும், உள்நாட்டு மொழிகளும் ஒன்றோடொன்று சந்திக்கும் சூழ்நிலை உலகமயமாதலின் பின்னணியில் உருவாகிறது. அதன் விளைவாய் மொழிக் கலப்பு நிகழ்கிறது. மொழிக் கலப்பு பின்னர் மொழி ஆதிக்கத்துக்கு வழிவகுக்கிறது. உள்ளூர், உள்நாட்டு மொழிகளுக்கு இடர்ப்பாட்டினையும் ஏற்படுத்துகிறது. இடர்ப்பாடு இறுதியில் மொழி அழிவுக்கும் இட்டுச் செல்கிறது.

மொழிக் கலப்புக்குச் சான்றாகப் பலவற்றைக் குறிப்பிடலாம். ஜெர்மானியர்கள் பேசும் மொழி நாம் நினைப்பது போல் ஜெர்மன் என்ற ஒன்று மட்டுமே அல்ல; "டொச்சு' என்பது ஒரு வகை ஜெர்மன் மொழியாகும். அந்த மொழியைப் பேசும் ஜெர்மானியர்கள் அதிகமாக ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுகிறார்கள். ஆகவே அந்த இரு மொழிகளின் கலப்பாக "டொங்கிலிஷ்' என்ற புதுமொழி உருவாகத் தொடங்கிவிட்டது. அதுபோன்றே தென் கொரியாவிலும் நிலை உருவாகியுள்ளது. கொரியாவும் இங்கிலீஷும் கலந்து "கொங்கிலீஷ்' என்ற புதுமொழி உருவாகி வருகிறது. தமிழ்நாட்டில் தமிழுடன் ஆங்கிலம் கலந்து "தமிங்கிலம்' அல்லது "தங்கிலீஷ்' உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மொரீஷஸில் பிட்கின் என்னும் உள்ளூர் மொழியும் பிரெஞ்சும் கலந்து கிரியோல் மொழி உருவாகிவிட்டது.

வணிகம், தொழில்நுட்பம் இரண்டும் சில முதன்மை மொழிகளிலேயே பெரிதும் இயங்குவதால் வேலைவாய்ப்புகள் அந்த மொழி தெரிந்தவர்களுக்கே செல்கின்றன. எனவே வேலை தேடும் இளைஞர்கள் அம் மொழிகளையே பெரிதும் விரும்பிக் கற்கிறார்கள். தம் தாய்மொழியில் ஆர்வம் காட்டத் தவறுகிறார்கள். அவர்களின் மொழி பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

விழிப்புணர்வு பெறும் மக்கள் தத்தம் மொழியைக் காப்பதில் முனைந்து செயல்படுகிறார்கள். சான்றுக்கு இலாட்விய மக்களைக் குறிப்பிடலாம். சோவியத் ஒன்றியம் சிதறுண்டபோது அதன் பிடியில் அகப்பட்டிருந்த இலாட்வியா தன் மொழி மேம்பாட்டில் கருத்துச் செலுத்தியது. ஊடகத்திலும், மக்கள் உரையாடலிலும் இரஷ்யனுக்குப் பதில் இலாட்விய மொழி ஒலிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. மீறியவர்களுக்குத் தண்டனை வழங்கியது. விளைவு, பத்தே ஆண்டுகளில் இலாட்விய மொழி வணிக மொழியாகவும், உயர்கல்வி மொழியாகவும் ஆகிவிட்டது.

பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் வெல்ஷ் மொழியைப் புழக்கத்திற்குக் கொண்டு வர விரும்பிய அப்பகுதியின் சட்டமன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, நெடுஞ்சாலைகளில் முதன்முறையாக ஆங்கிலத்துடன் வெல்ஷ் மொழியையும் அறிவிப்புப் பலகையில் எழுதி காரோட்டிகள் மூலம் அம்மொழிக்கு வாழ்வளித்தது.

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குள் நடந்த அந்த முயற்சிகள் மற்ற மொழிக்காரர்களுக்குச் சான்றாக நிற்பவை.

மொழிக் காப்பு நடவடிக்கையில் ஈடுபாடு காட்டாதோரின் மொழி விரைவில் அழியும் என்பது மொழியியலாரின் கருத்து. இப்போதே கூட, உலகின் பேச்சுமொழிகளாக உள்ள சுமார் 7,000 மொழிகளில், இருவாரத்துக்கு ஒரு மொழி என்ற விகிதத்தில் மொழிகள் பல அழிந்து வருவதாக மொழியறிஞர்கள் கூறுகிறார்கள்.

அச்சமூட்டும் அக்கூற்றின் விளைவாகவோ என்னவோ இப்போது நம்நாட்டிலும் பிறநாடுகளிலும் மொழி பற்றிய சில நிகழ்வுகள் நடைபெறுகின்றன. சான்றுக்குச் சிலவற்றைக் குறிப்பிடலாம்.

தமிழகத்தின் ஓசூருக்கு அருகேயுள்ள தனியார் தொழிற் பயிற்சி நிலையம் ஒன்றில், தமிழில் பேசியதற்காக மாணவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது என்று தெரிய வந்தபோது, சட்டமன்ற உறுப்பினர் தாய்மொழியில் பேசியதற்குத் தண்டனையா என்று தம் மனக்குமுறலை வெளியிட்டார். அது நடந்தது சில நாட்களுக்குமுன்.

ஒரு சில வாரங்களுக்கு முன், கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தரகன்னட மாவட்ட நிர்வாகம், வேளாண்மைத் துறை சார்ந்த, ஒரு கோடி மதிப்பிலான திட்டம் ஒன்றுக்கு ஆங்கிலத்தில் கருத்துரு தயாரித்த அலுவலர்களுக்கு | ஆயிரம் அபராதம் விதித்தது. கன்னட மொழி புறக்கணிக்கப்படக் கூடாது என்பது அந்த மாவட்ட நிர்வாகத்தின் கருத்து.

இருக்கும் மொழியைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற நம் மக்களின் மனோபாவம் போலவே, அழியும் நிலையில் உள்ள சில மொழிகளைக் காக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் சில வெளிநாட்டு மொழியறிஞர்கள் அண்மையில் செயல்பட்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசலப் பிரதேசத்தில் மொழி ஆய்வில் ஈடுபட்ட கிரிகோரி ஆன்டர்சன், டேவிட் ஹாரிசன் என்ற மொழியியலார் இருவர் அங்குள்ள மொழிகளில் ஒன்றான கோரோ அழியும் நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்கள். அம்மொழி அழிவுக்குள்ளானால் அதில் உள்ள கலாசாரப் பண்பாட்டுக் கூறுகள் மறையும் நிலை வாய்த்துவிடும் என்பது அவர்கள் கருத்து.

அதுபோன்றே சில மாதங்களுக்குமுன், கேம்பிரிட்ஜ் ஆய்வாளர் ஸ்டீபன் பேக்ஸ் லியோனார்டு வடதுருவத்திலுள்ள கிரீன்லாந்துக்குச் சென்று, அங்கு புதை படிவ நிலையில் உள்ள "இனுகுயிட்' மொழியைப் பதிவு செய்து, காப்பாற்றி, அந்த மொழியினருக்கே அதைத் திருப்பியளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

வழக்கொழியும் நிலையில் உள்ள மொழியானாலும், வழக்கில் இருந்தாலும் செல்வாக்கில்லாத நிலையில் உள்ள மொழியானாலும் அந்த இரண்டின் நிலையும் ஒன்றே. வணிகம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் சிறந்து நிற்கும் சில மொழிகளுக்கு முன்னே அவை, காலப்போக்கில் நிலைத்து நின்று தாக்குப் பிடிக்க முடியுமா என்பது ஐயமே.

மொழி அதன் கருத்தறிவிப்புத் திறன், தூய்மை, இலக்கிய வளம் முதலியவற்றைப் பொறுத்தே மதிப்புப் பெறுகிறது. ஆட்சி, வணிகம், அறிவியல், கல்வி, தகவல் தொடர்பு முதலான எல்லாத் துறைகளிலும் அது தற்காலச் சூழலுக்குத் தக்கதாய்த் தரம் உயர்த்தப்பட வேண்டும். அன்றாடம் மக்கள் பேசும் மொழியும், அனைவரையும் சென்றடையும் ஊடக மொழியும் தரமானதாக விளங்க வேண்டும்.

மொழி நலிவடையக் கூடாது. மொழி நலிவின் முதல் நிலை மொழிக் கலப்பு; இரண்டாம் நிலை சுயமொழிச் சொல் இழப்பு; மூன்றாம் நிலை ஒரு மொழியின் சொற்பொருள் சுருங்குதல்; நான்காம் நிலை பேச்சு, எழுத்து வழக்கு ஒழிதல்; இறுதியான ஐந்தாம் நிலை இலக்கிய இலக்கணம் மறைதல்.

உலக மயம் என்ற பேராழியில் உள்நாட்டு மொழிகள் எந்த அளவுக்குப் பாதிக்கப்படும், ஒரு சில செல்வாக்குமிக்க மொழிகள் மட்டும் எந்த அளவுக்கு தழைத்து ஓங்கும் என்பதைக் காலம்தான் காட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com