பாடதாரிகளாகும் பட்டதாரிகள்

தமிழ் நாட்டில் மீண்டும் மேலவை வரவிருக்கிறது. அந்த மேலவையில் 78 உறுப்பினர்கள் இருப்பர் எனத் தலைமைத் தேர்தல்  அதிகாரி தெரிவித்துள்ளார். அவர்களில் 26 பேர் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பாடதாரிகளாகும் பட்டதாரிகள்

தமிழ் நாட்டில் மீண்டும் மேலவை வரவிருக்கிறது. அந்த மேலவையில் 78 உறுப்பினர்கள் இருப்பர் எனத் தலைமைத் தேர்தல்  அதிகாரி தெரிவித்துள்ளார். அவர்களில் 26 பேர் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். 26 பேர் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள். 7 பேர் பட்டதாரிகளாலும், 7 பேர் ஆசிரியர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுவர். மீதி 12 பேர் நியமன உறுப்பினர்கள். இதற்கான  தேர்தல்கள், நியமனங்கள் எல்லாம் வரவிருக்கின்றன.

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மேலவையின் பங்கைக் குறைத்து மதிப்பிட முடியாது. நிதி மசோதா போன்றவற்றில் மக்களவைகளின் முடிவே இறுதியானது. ஆள்வதற்கு மக்களவைகளில் பெரும்பான்மை வேண்டும். பெரும்பான்மையை இழந்துவிட்டால் ஆளும்கட்சி அரசுக் கட்டிலிலிருந்து வீழ்ந்துவிடுகிறது. ஆளும் தகுதியை நிர்ணயிக்கும் உரிமையை மக்களவைதான் பெறுகிறது. பின் எதற்கு மேலவை?

நாட்டில் வெள்ளையர் ஆட்சியிலிருந்தபோது, 1937க்கு முன் இருந்த அவை மேலவை மட்டும்தான். தில்லியில் மத்திய சட்ட மன்றம்; பிராந்தியங்களில் மேலவைகள். 1935 அரசிலமைப்புச் சட்டத்தின்படி, 1937 முதல் பிராந்தியங்களில் வரி கட்டுபவர்கள், பட்டதாரிகள் என்று குறிப்பிட்ட மக்கள் என்றில்லாமல் பொது மக்களால் மக்களவைக்கு உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பான்மைக் கட்சி ஆட்சியை அமைத்தது. தென்னிந்தியாவில் ராஜாஜி பிரதம அமைச்சரானார். அப்போது முதல் மக்களவை, மேலவை என்று பிராந்தியங்களில் இரு அவைகள் கொண்ட அமைப்பு உருவானது. 1986 வரை தமிழகத்தில் மேலவை நீடித்தது.

ஆளும் கட்சியின் ஆளும் உரிமையை நிலைநிறுத்தும் உரிமை மேலவைக்கு இல்லாவிட்டாலும் அந்த அவை சில நலன்களைக் காக்கிறது. முதலாவது, ஆளும் கட்சி-எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் தம் கட்சியில் தோற்ற பிரபலங்களுக்கோ, தேர்தலில் நிற்காத பிற பிரபலங்களுக்கோ இடமளிக்க மேலவை கை கொடுக்கிறது. அந்தப் பிரபலங்கள் அமைச்சர்கள் ஆகும் வாய்ப்பையும் வழங்குகிறது. மேலவையில் அவை முன்னவர் என்கிற தகுதிக்கு ஒரு மூத்த மேலவை உறுப்பினர் அமைச்சர் தேவைப்படுகிறாரே! அடுத்தது, மேலவை என்பது பிரபலங்களின் அவை. அறிவுஜீவி, விவரமறிந்தவர், சாதனையாளர், அனுபவஸ்தர் போன்ற காரணங்கள் மேலவை நியமன உறுப்பினராவதற்கு தகுதிகள் ஆகும். நாடாளுமன்ற மேலவையிலும் இம்மாதிரியான பிரபலங்கள் பலர் இருந்தனர். நர்கீஸ் மறைவுக்குப் பிறகு நம்மூர் சிவாஜிகணேசனை இந்திரா காந்தி ஆர்வமுடன் நாடாளுமன்ற உறுப்பினராக்கினார் என்பது ஓர் உதாரணம்.

சீனிவாச சாஸ்திரி, டி.எஸ்.எஸ். ராஜன், ராஜாஜி, டாக்டர் பி.வி. செரியன், லட்சுமணசாமி முதலியார், டாக்டர் கிருஷ்ணா ராவ், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ஆர்.கே. சண்முகம், ஆதித்தனார், ம.பொ.சி. இ.எச். பரமேஸ்வரன், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, ஆர். வெங்கட்ராமன், பேராசிரியர் அன்பழகன், எம்.ஜி.ஆர். மாணிக்கவேலர், அண்ணாதுரை, முதல்வர் கருணாநிதி, எம்.ஏ. முத்தையா செட்டியார் போன்ற பிரபலங்கள் சென்னையிலிருந்த மேலவையை அலங்கரித்து, இதமாக விவாதித்துப் பெருமை சேர்த்தவர்கள். ஒரு முன்னாள் ஆளுநர்கூட (சர். முகமது உஸ்மான்) நமது மேலவை உறுப்பினராக இருந்தார்.

தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் மேலவை வேண்டாம் என்று உளமார நினைத்தவர்கள் இல்லை (கம்யூனிஸ்டுகள் தவிர). 1986-ல் மேலவை கலைக்கப்பட்டதற்கும் உள்ளார்ந்த விருப்பம் காரணமில்லை என்பதை நாடறியும். மேலவையை "கப்-சாஸரி'ல் தேநீர் குடிக்கும்  போக்கிற்கு அண்ணாதுரை உதாரணம் காட்டினார். சூட்டைக் குறைத்துக் குடிப்பதற்கு "சாஸரு'ம், சூடாகக் குடிப்பதற்கு "கப்'பும் விளங்குகிறது என எடுத்துக் காட்டினார் அண்ணாதுரை. சமயத்தில் மேலவையிலும் சூடாக விவாதம் நடைபெறும். மத்தியிலுள்ள மாநிலங்களவை விவாதங்கள் பலமுறை சூடாக நடைபெறுவதை நாம் காண்கிறோம். மக்களவையில் தப்பிவிடும் சில விஷயங்கள் மேலவையின் கவனத்தைப் பெற்று, மக்களின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பை மேலவை விவாதங்கள் பெறுவதுண்டு.

திறமைசாலியான ஒருவரின் சேவை அமைச்சரவைக்குத் தேவையாயிருப்பின் (சமயத்தில் முதலமைச்சராகவும் பெறுப்பேற்க) மேலவை உறுப்பினர் தகுதி கை கொடுக்கிறது. இது ஒன்று போதும், மேலவையின் தேவைக்கு-அரசியல் அமைப்புச் சட்டத்தின் நிபந்தனையை இது பூர்த்தி செய்கிறது. இந்த மாதிரி மேலவை உறுப்பினராகும் வாய்ப்பை மனதார நிராகரித்தவர் ஈ.வெ.ரா. பெரியார் ஒருவர்தான். 1940-ல் அமைச்சரவை அமைக்க அவரை ஆளுநர் வேண்டிக்கொண்டும் அவர் அதை ஏற்கவில்லை.

வரவிருக்கும் நமது மேலவை மக்களின் ஒரு பிரிவினராகிய  ஆசிரியர்களுக்கும்  பட்டதாரிகளுக்கும் அரியதோர் வாய்ப்பை வழங்கக் காத்திருக்கிறது. குறைந்தபட்சம் இந்தக் காரணத்துக்காவது நாம் மேலவையை வரவேற்க வேண்டும். ஆசிரியர்களும் பட்டதாரிகளும் கொடுத்துவைத்தவர்கள். சட்டமன்றத்துக்குத் தம் பிரதிநிதிகளை அனுப்ப அவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஒன்று சட்டமன்ற மக்களவைக்கு மக்களோடு மக்களாக இருந்து சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்தெடுக்கும் வாய்ப்பை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பெறுகின்றனர். அடுத்து பொதுமக்களிடமிருந்து வேறுபட்டு மேலவைக்கு தம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பெறுகின்றனர் இவ்வாறு வாக்களிக்கும் பெருமை கிடைக்கிறது. அதுபோன்று பொறுப்பும் இரண்டு மடங்கு கூடுகிறது. பொறுப்புடன் சிறந்த வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அல்லவா?

இவ்வாறாகத் தேர்ந்தெடுக்கப்படும் மேலவை உறுப்பினர்கள் ஒரு வகையில் நேரிடையாகத் தேர்வாகும் மக்கள் பிரதிநிதிகள் போன்றவர்களே. மற்ற மேலவை உறுப்பினர்கள் தேர்வுக்கும் இவர்களின் தேர்வுகளுக்கும் இடையே இது ஒரு முக்கிய வேறுபாடு. இந்தக் கூடுதல் பொறுப்பை ஆசிரியர்களும் பட்டதாரிகளும் உணர்ந்து நிறைவேற்றுவார்கள் என நம்புவோம்!

சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் கட்சி அபிமான அடிப்படையில் வாக்களித்து தமது மேலவைப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பர். ஆனால், ஆசிரியர் பட்டதாரிகளுக்கு அவ்வாறான நிர்பந்தம் இல்லை. ஆசிரியர்களுக்கிடையே தொழிற்சங்கங்களின் அபிமானம் வாக்குகளை தம்போக்குக்குத் திருப்ப வாய்ப்புள்ளது. ஆனால், பட்டதாரிகளுக்கு அவ்வாறான தர்மசங்கடம் இல்லை. தம் மனதுக்குச் சரி எனப் படும் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்புடன் கூடிய வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவிருக்கிறது. சமீப காலத்தில் தேர்தல் "சர்வே' என்று மக்கள் மத்தியில் கருத்துக் கணிப்புகளைப் பத்திரிகைகளும், சில நிறுவனங்களும்  நடத்துகின்றன. பட்டதாரிகள் தம் மனசாட்சிப்படி சிந்தித்து சிறந்த வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க முற்பட்டால், அவர்களின் மனப்போக்கு ஆட்சியாளர்களை சரியான சமயத்தில் தட்டி எழுப்பும். அவர்களின் வாக்கு அந்தச்சூழலில் ஒரு கருத்துக் கணிப்பாகத் திகழும்.

ஆளும் கட்சி செல்லும் பாதையில் சறுக்கல் இருந்தால் பட்டதாரிகளின் தேர்வு ஆட்சியாளரை நிமிர்ந்து உட்காரச் செய்யும்; தம்மைச் சுதாரித்துக் கொள்ள ஒரு வாய்ப்பாகவும் அமையும். ஏனெனில், தற்போது தமிழகத்தில் 13 லட்சம் பட்டதாரிகள் உள்ளனராம். இந்த எண்ணிக்கை கூடுதலாக இருக்கவாய்ப்புண்டு. மக்கள் தொகையில் ஆண்டுதோறும் பட்டதாரிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டு வரும். பட்டதாரிகள் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் இரு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க இருப்பதால் அந்தத் தேர்தல் ஒரு கருத்துக் கணிப்பாகவே இருக்கும். ஒவ்வொரு பட்டதாரி தொகுதியும் நான்கைந்து மாவட்டங்களை உள்ளடக்கியது. இப்பரந்த  தொகுதி ஒரு சிறந்த "சர்வே' க்குத் தேவையான மாதிரி எண்ணிக்கையைத் தருகிறது.

மேலவையின் சூடான விவாதத்தை விடவும் இந்த ஒரு தேர்தல்கூட பிறபகுதி மக்களின் கவனத்தை ஈர்க்க உதவும். நல்ல வாய்ப்பு... பட்டதாரிகள் அரசுக்குப் பாடதாரிகளாகும் வாய்ப்பு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com