மனிதப்பிறவியின் தர்மம்

மனிதப்பிறவியின் தர்மம்

அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே ரத்த வங்கிகள் இயங்கிக் கொண்டிருந்த காலம்... தனியார் ரத்த வங்கிகள் அதிகமாக அங்கீகாரம் பெறாத காலம்... ரத்தம் வேண்டுமா? என்று ரத்தத்தை விற்க மக்க

அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே ரத்த வங்கிகள் இயங்கிக் கொண்டிருந்த காலம்... தனியார் ரத்த வங்கிகள் அதிகமாக அங்கீகாரம் பெறாத காலம்... ரத்தம் வேண்டுமா? என்று ரத்தத்தை விற்க மக்கள் ரத்த வங்கிக்கு வெளியே காத்திருந்த காலம்...

ஆண்டுகள் நகர்ந்தன. ரத்த தான விழிப்புணர்வு மக்களுக்கு சிறிது சிறிதாக ஏற்பட ஆரம்பித்தது. தானாக முன்வந்து ரத்ததானம் செய்யும் மனம் மக்களுக்குள் கசிந்தது.

தந்தையின் இறந்த நாளன்று யாருக்காவது ஏதாவது வாங்கித் தர வேண்டும் என்று ஆசைப்பட்ட ஏழை ஆரம்பப்பள்ளி கிராம ஆசிரியர் ஒருவர் ரத்த வங்கிக்கு வந்து, ""என்னால் யாருக்கும் பண உதவி செய்ய முடியாது. என் ரத்தத்தை தானமாகத் தருகிறேன். அது யாருக்காவது பயன்படட்டும். என் அப்பாவின் ஆன்மா சாந்தி அடையும்'' என்று சொல்லி ரத்த தானம் செய்தபோது அந்த இளைஞனின் முகத்தையும் அதில் தோன்றிய மகிழ்ச்சி கலந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடும்... இன்றுவரை எங்களால் மறக்க முடியாது.

மேலும் ஆண்டுகள் நகர்கின்றன. ரத்த வங்கிகளில் வந்து ரத்த தானம் செய்த பழக்கமானது இன்னும் முன்னேற்றமடைந்து தேசிய திருநாட்களில் வெளியிடங்களில் முகாம் அமைத்து ரத்த தானம் செய்யும் பழக்கம் ஏற்பட ஆரம்பித்தது. காந்தி ஜயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம் இதுபோன்ற நாள்களில் முக்கியத்துவம் பெற்றன.

ரத்த வங்கிக்குள் வந்து ஒருவர் ரத்ததானம் செய்துவிட்டுச் செல்லும்போது வெளி உலகத்துக்கு அது தெரியாமலேயே போய்விடும். அதனால் மற்றவர்களை ஊக்குவிக்க இந்த செயல் உதவுவதில்லை.

ரத்த தான முகாம்களில் ஒருவர் ரத்தம் கொடுப்பது தெரியும்போதும் நாம் அருகில் இருந்து பார்க்கும்போதும்தான் நமக்கும் தோன்றுகிறது. நாமும் ஏன் கொடுக்கக்கூடாது என்று. மனித மனத்தின் இந்த குணத்தினால்தான் இன்று ரத்ததான முகாம்கள், பெரிய அளவில் ரத்த வங்கிக்கு வெளியே மிகப் பெரிய தொழில் நிறுவன வளாகங்களில், தொழில் பட்டறைகளில், பள்ளிகளில், கல்லூரிகளில், அலுவலகங்களில் என்று பரவலாக நடத்தப்படுகின்றன.

முகாம்களை ஏற்பாடு செய்யும்போது, ரத்தம் கொடுக்க நூறு பேரைத் தயார் செய்கிறோம். நீங்கள் அவர்களுக்கு என்ன தருவீர்கள் என்று கேட்கும்போக்கு நிலவுகிறது. இதற்குப் பெயர் தானமா? பண்டமாற்றுதல் அல்லவா? இதைத் தடுக்க வேண்டும்.

ரத்தம் கொடுத்தவுடன் கொடுக்கும் குளிர்பானமும் தின்பண்டமும் அவருக்கு மிகவும் தேவை. கொடுத்த ரத்தத்திற்கு ஈடாக எந்தப் பொருளையும் கொடுப்பது தானம் செய்தவரை இழிவுபடுத்தியது போலாகும்.

தானாக மனமுவந்து ரத்ததானம் செய்வதால்தான் இதற்கு தானம் என்று பெயர்.

ரத்ததானம் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பிறருக்காகச் செய்ய வேண்டும். இது மனிதப் பிறவியின் தர்மம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com