திருமணங்களா, திருவிழாக்களா?

 இப்போதெல்லாம் பெரிய மனிதர்கள் வீட்டுத் திருமணங்கள், திருவிழாக்களைப் போலவே நடத்தப்படுகின்றன. திருமணம் என்பது குடும்ப நிகழ்ச்சியாகும். இந்தக் குடும்ப நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து பதின
திருமணங்களா, திருவிழாக்களா?

 இப்போதெல்லாம் பெரிய மனிதர்கள் வீட்டுத் திருமணங்கள், திருவிழாக்களைப் போலவே நடத்தப்படுகின்றன. திருமணம் என்பது குடும்ப நிகழ்ச்சியாகும். இந்தக் குடும்ப நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து பதினாயிரக்கணக்கில் மக்களை வரவழைத்து, அத்தனை பேருடைய உழைக்கும் சக்தியை, சிந்திக்கும் ஆற்றலை, சம்பாதித்த பணத்தை விரயப்படுத்துவது பகுத்தறிவுக்கும் புறம்பானதேயாகும்; சிந்தித்துப் பார்த்தால் இவ்விரயம் வளர்ச்சிக்கு எதிரானதேயாகும்.

 பண்டைய காலத்தில் மகாராஜாக்கள் நடத்தியதுபோலவே பெருநகரங்களில் தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் மாப்பிள்ளை அழைப்பு, நிச்சயதார்த்தம், திருமணம், வரவேற்பு, கறி விருந்து என்கிற பெயரில் மதுபான விருந்து என்று ஐந்து நாள்களுக்குப் பணத்தை வாரியிறைத்துத் தாங்கள் பெருமையைப் பறைசாற்றிக் கொள்கிறார்கள்.

 எவ்வளவுதான் பணக்காரர் என்றாலும், ரூபாய் நோட்டுக்கட்டுகளைத் தெருவிலே தீ வைத்துக் கொளுத்துவதை மற்றவர்கள் மெüனமாகப் பார்த்துக் கொண்டிருப்பது சரியாகுமா? இப்படிப் பணத்தைச் சூறைவிடுவதினால் சமுதாயத்துக்கு ஏதாவது நன்மையுண்டா? சில அரசியல்வாதிகள் நேர்மையற்ற வழியில் சம்பாதித்த காசை நாலுபேருக்குச் செலவு செய்து பாவம் போக்கிக் கொள்கிறார்கள் என்று சொல்லலாம். இதைப்பார்த்து மற்றவர்களும் கெட்டுப் போகிறார்களே?

 உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டுத்திருமணம் என்றால் சக நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு, குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கிறார்கள். வழக்காடிகளுக்கும் அழைப்பு அனுப்பினால் என்ன அர்த்தம்?

 மருத்துவர் வீட்டுத் திருமணம் என்றால் அவருடைய நோயாளிகளுக்கெல்லாம் அழைப்பு. பொதுப்பணித்துறை நிர்வாகப்பொறியாளர் வீட்டுத் திருமணம் என்றால் அவரது ஆளுகையில் உள்ள ஒப்பந்தக்காரர்கள் அனைவருக்கும், பணியாற்றும் ஊழியர்கள் எல்லோருக்கும் அழைப்பு அனுப்பி அலுவலகங்களில் சம்பளப் பட்டுவாடாவின்போதே "அன்பளிப்புக்கு' வசூல் செய்கிறார்கள்.

 மின் வாரியப்பொறியாளர், அவரது அலுவலகத்திலிருந்து மின் இணைப்புபெற்ற தொழிலதிபர்கள், திரைப்பட அரங்கினர், அரிசி ஆலை - இதர ஆலை முதலாளிகளுக்கு பத்திரிகை அனுப்புவது, அவர்களை வரவழைத்து மொய்ப்பணம் வசூலிப்பது இழிவு என்று அவர்களுக்குத் தோன்றுவதில்லை.

 இதிலே என்ன வேடிக்கை என்றால், இதை எதிர்க்க வேண்டிய தொழிற்சங்கத் தலைவர்கள், செயலாளர்கள் சில பேர், அவர்களே முன் நின்று நன்கொடை வசூல் செய்து திருமணப்பரிசு கொடுத்து அதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்கி விடுகிறார்கள்.

 முன்பெல்லாம் பெரிய அதிகாரிகள் வீட்டுத் திருமணங்களுக்குப் வெளியார்களுக்கு அழைப்பு கொடுக்கவே அச்சப்படுவார்கள் - ஏனெனில் திருமணத்தில் அன்பளிப்பு என்று எதையாவது கொடுத்து நம்மை தருமசங்கடப்படுத்தி விடுவார்கள் என்று தவிர்த்து விடுவார்கள். வருமானவரித்துறை அதிகாரிகள் கூட இத்திருமண நிகழ்ச்சிகளை தங்கள் மதிப்பீட்டு ஆய்வுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

 பெரியவர்கள் நடத்தும் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து சராசரி குடும்பத்துப் பெண்களும், ஆண்களும் கடன் வாங்கி, திருமணத்தை ஆடம்பரமாக நடத்துகிறார்கள். பிறகு வாழ்நாளெல்லாம் அந்தக் கடனை அடைக்கிறார்கள். இவர்களைப் பார்த்து விவசாயிகள், சிறுவியாபாரிகள் போன்றோர் வருமானம் இல்லையானாலும் கடன் வாங்கிக் கல்யாணம் செய்து, அந்தக் கடனைத் திரும்பக்கொடுத்து முடிக்குமுன் வளைகாப்புச் செலவு பிறகு பிள்ளைப்பேறு, குழந்தைக்கு மொட்டையடித்தல் பிறகு காதுகுத்து என்று தொடர்ந்து செலவு செய்து கடனாளியாகின்றனர்.

 இதையெல்லாம் இனி கைவிட்டு நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து கோயில்களில் சிக்கனமாகத் திருமணம் நடத்தி மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். சுயமரியாதை இயக்கத்தினர் மணமகன் மணமகளுக்கு புத்தாடை, 2 மாலைகளுடன் எளிய முறையில் முன்னர் செய்த திருமணங்களை மீண்டும் நடத்த வேண்டும்.

 இப்படியும் செய்யலாம்; ஒரு கிராமத்தில் ஓர் ஆண்டில் பத்து திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன என்றால், பத்து திருமணங்களையும், அனைவருக்கும் வசதியான ஒரே நாளில், ஒரே இடத்தில் வைத்து நடத்தி, திருமண விருந்துக்கு ஆகும் செலவை பத்து குடும்பத்தினரும் பங்கு பிரித்துக் கொள்ளலாம்; ஊர்க்காரர்கள் எல்லோரும் பங்கு கொள்ளலாம். பத்துத் திருமணங்களுக்கும் தனித்தனியாக விடுமுறை எடுக்க வேண்டியது இல்லை. பத்து நாள்கள் பயணங்கள், பயணச்செலவு, பணிகள் பாதிப்பு, தனித்தனித் திருமண மண்டபங்கள், மேள தாளங்கள், பந்தல் அமைப்பு, ஒலி ஒளி பெருக்கி, வீடியோ, விருந்து வைபவம் வாணவேடிக்கைச் செலவுகள் என்று எல்லாம் கணிசமாகக் குறையும்.

 நம்முடைய மக்கள் நல்ல செயலுக்கு ஒன்றுசேரத் தெரியாதவர்கள், ஒன்று சேர்ந்து சிந்திக்கத் தெரியாதவர்கள், ஒன்றாகச் செயல்படத் தெரியாதவர்கள். படித்தவர்கள், பணக்காரர்கள், பதவியில் உள்ளோர் சிந்திக்க வேண்டும், பாமரர்களை வழி நடத்திட முன்வரவேண்டும்.

 கடன்படாத வாழ்க்கையே கண்ணியமான வாழ்வு; எளிய வாழ்வு, எடுத்துக்காட்டான வாழ்வு. வீண் விரயம் தவிர்த்த எளிய திருமணங்கள் ஏளனத்துக்கு உரியவை அல்ல. இது புது இயக்கமாக வளர வேண்டும். வாழ்நாள் சேமிப்பை ஒரே நாளில் சூறைவிடுவது நடுத்தரக் குடும்பங்களுக்கு நல்லதல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com