மறைந்துபோன முகவரிகள்

சமீபத்தில் பழைய திருமண பத்திரிகைகள் சிலவற்றை பார்க்க நேர்ந்தது. அன்புடையீர் என ஆரம்பித்து ஆங்கில வருடம், தமிழ் வருடம், தேதி, கிழமை, நட்சத்திரம் என அனைத்தும் குறிப்பிட்டு இருந்தது. மாப்பிள்ளை பெயர், அவ

சமீபத்தில் பழைய திருமண பத்திரிகைகள் சிலவற்றை பார்க்க நேர்ந்தது. அன்புடையீர் என ஆரம்பித்து ஆங்கில வருடம், தமிழ் வருடம், தேதி, கிழமை, நட்சத்திரம் என அனைத்தும் குறிப்பிட்டு இருந்தது.

மாப்பிள்ளை பெயர், அவரின் தந்தை பெயர், மாப்பிள்ளையின் பாட்டனார் பெயர், பூர்வீக ஊர் என அனைத்தும் குறிப்பிட்டு இன்னாரது பேரன், இன்னாரது மகன் எனத் தெளிவாக அச்சிடப்பட்டு இருந்தது.

இதேபோல் மணப்பெண்ணின் பெயரும் அவருக்குச் சொந்தங்கள் என உள்ளோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக "சுற்றமும் நட்பும்' என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.

பத்திரிகையின் பின்பக்கம் பார்த்தால் பெண்ணுக்குரியோர், பிள்ளைக்குரியோர் என ஒரு பட்டியலே இருந்தது.

இதைப்போல் இப்போது பத்திரிகைகளை அச்சடிப்பவர்கள் குறைவாகத்தான் உள்ளனர். திருமணம் என்று வந்துவிட்டால் ஒரு குடும்பத்தின் திருவிழாவாக இருந்த நிலை மாறி இன்று மூன்று மணி நேர சினிமா காட்சி அளவுக்கு குறைந்து வெறும் சம்பிரதாய சடங்காக மாறிவிட்ட நிலையே காணப்படுகிறது.

சமீபத்தில் ஒரு நண்பர் திருமண பத்திரிகையை கொடுத்தார். அதை அழைப்பிதழ் என்று சொல்வது பொருத்தமாகாது. ஒரு "விசிட்டிங் கார்டு' அளவுக்குத்தான் அது இருந்தது. அதற்கும் ஓர் அலங்கரிக்கப்பட்ட மேலுறை இருந்தது.

பிரித்துப் பார்த்தால், ""எனக்கும் என ஆரம்பித்து பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டு இன்னாருக்கும் இன்ன தேதியில் திருமணம் என்றும் திருமணத்திற்கு வருமாறும்'' பத்திரிகை அழைத்தது.

இன்னாரது மகன் என்றோ, இன்னாரது மகள் என்றோ இல்லை. பெண்ணின் ஊர் பெயர்கூட இல்லை. மணமகன் பெயர், மணமகள் பெயர் மட்டுமே இருந்தது.

ஆனால், ஒரு மாற்றம் உடனடியாக உறைத்தது.

மணமகனின் பெயருக்குப் பக்கத்தில் படிப்பு அச்சடிக்கப்பட்டிருந்தது. பெண்ணின் பெயருக்குப் பக்கத்திலும் படிப்பு அச்சடிக்கப்பட்டிருந்தது. முக்கியமாக மாப்பிள்ளை வேலை பார்க்கும் நிறுவனத்தின் பெயரும் பெண் வேலை பார்க்கும் நிறுவனத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுவும் அரசுத் துறையாக இருந்தால் சற்று பெரியதாகவே அச்சிடப்பட்டிருக்கும்.

சென்ற தலைமுறையில் தமது முகவரியாக தமது முன்னோர்களையே முன்மொழிந்தனர். ஆனால், இன்றோ படிப்பையும் பதவியையுமே முன்மொழிகின்றனர்.

ஆனால், படிப்புக்கும் பதவிக்கும் உறுதுணையாய் இருந்தவர்கள் அவர்கள்தான் என்பதை எளிதாக மறந்து விடுகிறோம். அவர்கள்தான் நமது சமூக அந்தஸ்து என்பதை புறந்தள்ளிவிட்டு, நிறுவனத்தையும் நமது படிப்பையுமே அந்தஸ்து என தூக்கிப் பிடிக்கிறோம்.

திருமணத் தேதி குறித்துவிட்டால் குடும்பத்தில் தொற்றிக்கொள்ளும் திருவிழாக்கோலம் இன்றில்லை. ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு பொறுப்பாக தன் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு ஈடுபாட்டுடன் செய்த காலமும் மலையேறிவிட்டது.

பங்காளிகள் அனைவரையும் அழைத்து குல தெய்வத்திற்கு பொங்கலிட்டு முதல் பத்திரிகை வைக்கும் வழக்கமும் காலாவதியாகிவிட்டது.

இப்போது திருமணத்தேதி குறிப்பது மட்டுமே நமது வேலை. மற்றபடி அனைத்தையும் பார்த்துக் கொள்ள நிறுவனங்கள் வந்துவிட்டன. சுற்றத்திற்கும் வேலையில்லை, நட்புக்கும் வேலையில்லை.

திருமணம் என்று வரும்போது இருப்பவர்கள் செலவழிக்கிறார்கள். இல்லாதவர்கள் கடனாளி ஆகிறார்கள். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதோ இல்லையோ, நகைகளும் ரொக்கங்களுமே அவற்றை நிச்சயிக்கின்றன. திருமணங்கள் எளிமையாய் நடத்தப்பட வேண்டும். வீண் ஆடம்பரங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

இன்றைய காலகட்டத்திலும் நகைகளும் பணமும் திருமணத்தை நிர்ணயிக்கும் சக்தியாக இருப்பது களையப்பட வேண்டும். திருமணங்கள் குடும்பத்தின் திருவிழாவாக போற்றப்பட வேண்டும். சுற்றமும் நட்பும் கூடி நின்று வாழ்த்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com