இந்த முறை சரிதானா!

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த காலத்தில் ஓர் உண்மையை வெளிப்படையாகத் தெரிவித்தார். அதைக் கேட்ட பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
இந்த முறை சரிதானா!

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த காலத்தில் ஓர் உண்மையை வெளிப்படையாகத் தெரிவித்தார். அதைக் கேட்ட பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்தியாவில் இயங்கிவரும் பல பல்கலைக்கழகங்கள் வணிகநோக்கில் செயல்பட்டுவருவதாகவும் அவை வழங்கும் பட்டச் சான்றிதழ்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் நம் இளைஞர்கள் அவமதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அதற்குப் பிறகுதான் மாநிலக் கல்வி நிறுவனங்கள் மீது மத்திய அரசுக்கு ஒருவிதமான சந்தேகம் வரத் தொடங்கியது. "தேசிய குழந்தைகள் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்' 2009-ல் இயற்றப்பட்டிருந்தது. அதை 2010 ஏப்ரல் 1 முதல் மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வந்தது.

அப்போது அச்சட்டத்தின் "பிரிவு 23' வலியுறுத்துகிறபடி தகுதியுடைய ஆசிரியர்களை மட்டுமே பள்ளிகளில் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியது. அதன் அடிப்படையில்தான் தமிழக அரசு இனிவரும் காலங்களில் அரசுப் பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களைத் தகுதித் தேர்வுகள் மூலமாக நிரப்பத் தொடங்கியது. இதுவரை 2 முறை தேர்வு நடந்துள்ளது.

இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. தகுதித் தேர்வு "வெறும் தகுதித் தேர்வு மட்டுமே' என்பதுதான் அது.

அந்தத் தீர்ப்புக்குப் பிறகு பட்டதாரி ஆசிரியர்கள் இனி "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மாநில அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைக் கேட்டதும் ஒவ்வொரு பட்டதாரிகளின் மனதிலும் எழும் கேள்விகள் ஏராளம்.

தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ்தான் இயங்குகின்றனவா? ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பை முழுமையாக முடிக்க முடியாத மாணவனை வேறொரு பல்கலைக்கழகம் அதே படிப்பில் மீண்டும் முதலாம் ஆண்டிலிருந்து சேர்ந்து படிக்குமாறு கூறுவதன் காரணம் என்ன?

ஓவ்வொரு பல்கலைக்கழகத்தின் கீழும் பல கல்லூரிகள் இயங்கிவருகின்றன. இந்தக் கல்லூரிகள் யாவும் ஒரே மாதிரியான தேர்வு முறையையும் மதிப்பீட்டு முறையையும் கடைப்பிடித்து வருகின்றனவா? அப்படி கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் சமீபத்தில் முதுகலை ஆசிரியர்களைத் தேர்வு செய்ய தமிழ்நாடு தேர்வு வாரியம் நடத்திய போட்டித்தேர்வில் வெற்றிபெற்று, சான்றிதழ் சரிபார்த்தலின்போது, புதுகையைச் சேர்ந்த ஒரு கல்லூரியின் முதுகலை கணித மாணவர்களின் பட்டம் "தகுதிக்குறியது அல்ல' என்று நிராகரித்தது ஏன்?

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து இளநிலைக் கல்வியியல் ஆசிரியர் (பி.எட்) கல்லூரிகள் யாவும் கடந்த 2 ஆண்டுகள் மட்டுமே தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டின் கீழாக ஒரே பாடத்திட்டம், தேர்வு அட்டவணை, தேர்வு முறைகளின் கீழ் இயங்கி வருகின்றன. 2010-ஆம் ஆண்டுக்கு முன்பு வருட பாடத்திட்டத்தையும் பயிற்சிக் காலத்தையும், தேர்ச்சி விழுக்காட்டையும் தீர்மானிக்கும் சக்திகளாக அந்தக் கல்லூரிகளே இருந்தன.

அப்படி இருக்கையில் இளநிலைப் பாடத்திலும் இளநிலைக் கல்வியியல் பாடத்திலும் அவர்கள் எடுத்திருக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் தலா 15 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பது எந்த வகையில் சரியானது?

பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்ணுக்கு 10 மதிப்பெண் வழங்கப்படும் என்பதே முரண்பட்டதாகத் தெரிகிறது. ஒரே வாரியத்தின் கீழ், ஒரே பாடத்திட்டம், ஒரே மதிப்பீட்டு முறையில் நடந்தாலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டத்தில் மாறுதல் செய்யப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு மாநில அளவில் முதல் 3 இடங்களை 3 பேர் மட்டுமே பிடித்தனர். இப்போது 10 பேர் பிடிக்கின்றனர். 5 ஆண்டுகளுக்கு முன்பு 1,200-க்கு 750 மதிப்பெண் எடுத்தால் அரசுக் கல்லூரியில் கேட்கும் பாடப்பிரிவு கிடைத்துவிடும். இப்போது உத்தரவாதம் இல்லை. காலமாற்றத்தில் கற்றல், கற்பித்தல், பாடத்திட்டம், தேர்வுமுறை, மதிப்பீட்டு முறை, மறுகூட்டல் ஆகியவற்றில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.

முன்பு வினாத்தாள்களைப் படிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டிருக்கவில்லை. கடந்த 5 வருடங்களாக வினாத்தாளைப் படிக்க தனியாக 10 நிமிஷங்கள் தரப்படுகின்றன. மறுகூட்டல் வசதிகள் அன்றைய மாணவர்களுக்கு இல்லை. இவ்வாறு ஒரே தேர்வு வாரியத்தின் கீழாக மதிப்பிடும் மதிப்பெண்களே பல முரண்பாடுகளைக் கொண்டி

ருக்க பல்வேறு தேர்வு முறையின் கீழ் செயல்படும் கல்லூரிகளின் மதிப்பெண்கள் எவ்வாறு ஒரே தன்மையுடையதாகவும் நம்பகத்தன்மையுடையதாகவும் இருக்க முடியும்?

கல்விநிலையங்கள் வழங்கும் மதிப்பெண்கள் மீது சந்தேகம் வந்ததால்தானே தகுதித் தேர்வே நடத்தப்படுகிறது.

பிறகு மீண்டும் அவர்கள் வழங்கியிருக்கும் மதிப்பெண்களுக்கு மகுடம் சூட்டும்விதமாக "வெயிட்டேஜ்' மதிப்பெண்கள் கொடுப்பது எப்படி சரியாக இருக்கும்?

அரசுப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாகவும் தனியார் பள்ளிகளில் சொற்ப சம்பளத்திலும் பணியாற்றி வருகிறவர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தை மதிப்பிட்டு "வெயிட்டேஜ்' மதிப்பெண்கள் கொடுக்கப்படாதது ஒருவித ஏமாற்றத்தைத் தருகிறது. வேறு துறைக்குச் செல்லாமல் பணி நிரந்தரமாகிவிடும் என்ற நம்பிக்கையில் குறைந்த சம்பளத்தில் வேலைசெய்த அவர்களுடைய சேவையை அரசு அங்கீகரிப்பது அவசியம்.

இளநிலை பட்ட மதிப்பெண்களுக்கு வெயிட்டேஜ் கொடுப்பது வருங்காலத்தில் மாணவர்கள் நன்கு படித்து மதிப்பெண் பெற ஊக்குவிப்பாக இருக்கும் என்றாலும் மதிப்பெண் வழங்கும் அதிகாரத்தை அந்தந்த கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகத்துக்கும் கொடுத்ததன் பிறகு மதிப்பீட்டு முறையில் புறவயத் தன்மையை எவ்வாறு நிலைநாட்ட முடியும்?

அஞ்சல்வழிக் கல்வி பயிலும் மாணவன், அவன் இருக்கும் ஊருக்கு அருகில் உள்ள பல்கலைக் கழகத்தில் அவன் விரும்பும் பாடம் இருந்தாலும் தொலைவில் உள்ள பல்கலைக்கழகத்தை நாடுவது ஏன்? பாடத்திட்டத்திலோ தேர்வு முறையிலோ மதிப்பீட்டிலோ வேறுபாடுகள் இருப்பதால்தானே? அப்படிப்பட்ட வேறுபாடுகளைக் கொண்ட மதிப்பெண்களுக்கு "வெயிட்டேஜ்' தருவது சரியான முறைதானா என்பதை அரசு ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com