கல்யாண சந்தையிலே...

"கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்' என்பது பழைய திரைப்படங்களில் தவறாது ஒலிக்கும் வசனம். இன்றைய நாளில் இளைய
கல்யாண சந்தையிலே...

"கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்' என்பது பழைய திரைப்படங்களில் தவறாது ஒலிக்கும் வசனம். இன்றைய நாளில் இளைய தலைமுறையினர் இதற்கு அளிக்கும் மரியாதை வேறுவிதமாக இருக்கிறது.

 பத்தாண்டுகளுக்கு முன்புவரை வரன் தேடுவது என்றால் முதலில் குடும்ப உறவுகளில் தேடுவது, பிறகு ஊரில் தேடுவது, அங்கும் தகுந்த வரன் கிடைக்காவிட்டால் அயலில் தேடுவது என்றுதான் இருந்தது. நல்ல குடும்பமா, பெண்ணை நன்றாக வைத்துக் காப்பாற்றுவார்களா, போய் வருவதற்கு ஏற்ப அருகில் இருக்கிறவர்களா என்றெல்லாம்தான் பார்த்தார்கள்.

 படிப்படியாக இதில் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் முக்கியமான மாற்றம் உயர் கல்விப் படிப்பால் ஏற்பட்டுவிட்டது. பெண் குழந்தைகள் நன்கு படித்துவிட்டால் அந்த படிப்புக்கேற்ற வரன்தான் வேண்டும் என்ற எண்ணம் அந்தப் பெண் வீட்டாருக்கு ஏற்பட்டுவிடுகிறது. அதை மற்றவர்களும் ஏற்க வேண்டியதாகிறது. எனவே நல்ல குணம், குடும்பப் பின்னணி, ஓரளவுக்கு வசதியான சூழல் இருந்தாலும் உயர் படிப்பு அதிலும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்பு இல்லையெனில் நல்ல வரன்கள்கூட நிர்த்தாட்சண்யமாக நிராகரிக்கப்படுகிறது.

 அடுத்த கட்டமாக உயர் படிப்புப் படித்தவர்கள் வேறு சாதியாக இருந்தாலும் பரவாயில்லை என்று புதிய இடங்களில் சம்பந்தம் செய்யப்படுகிறது. மணமகன் அல்லது மணமகளைத் தேர்வு செய்யும் உரிமை பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு இப்போது  கைமாறிவிட்டது.

 ஏதோ இந்த அளவுக்கு நம்மை சாட்சியாக வைத்து நம் பிள்ளை திருமணம் செய்துகொள்கிறதே என்ற திருப்தியோடு பெற்றோரும் அவர்கள் இழுத்த இழுப்புக்குப் போக வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் ஒன்று அல்லது 2 குழந்தைகள்தான் என்பதால் பெற்றோரால் தங்கள் விருப்பத்தை வலிந்து திணிக்க முடியாமல் போகிறது. இதனால் திருமணத் தொடர்பு நிலையங்களை நாட வேண்டியுள்ளது. ஜாதகம் பொருந்தி பெண், பிள்ளை வீட்டார் ஓரிரு முறை நேரில் பார்த்து, அவரவர் குடும்பம் குறித்து ஓரளவுக்குத் தெரிந்துகொண்டாலும் தகவல்கள் முழுமையாக இருப்பதில்லை; விடை தெரியாத ஆயிரம் கேள்விகள் அலையலையாக எழுந்துகொண்டே இருக்கின்றன. படித்தவர்கள், பண்பாளர்கள் என்ற எண்ணம் ஒரு நாளும், இவர்களை நம்ப முடியாதோ என்ற சந்தேகம் மறுநாளுமாக சாகசப் பயணமாக இவை தொடருகின்றன.

 ஜாதகம் பார்த்து, இருவீட்டாரும் பேசி நிச்சய தாம்பூலம் நடந்து முடிந்தாலும் பெண்ணும் பிள்ளையும் அன்றாடம் செல்போன், டுவிட்டர் என்று மாற்றி மாற்றிப் பேசி திடீரென்று கருத்து வேற்றுமைகளை வளர்த்துக் கொண்டு, ""இந்தக் கல்யாணம் வேண்டாம் - நிறுத்திவிடுங்கள்'' என்று சொல்லும்போது பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பை வாரிக் கொட்டுவதைப்போல உணர்கின்றனர்.

 இதற்குக் காரணம் படிப்பு, நல்ல வேலை, கைநிறையச் சம்பளம் இருந்தாலும் உலக அனுபவமும் பக்குவமும் இல்லாத இரு விடலைகளின் உணர்ச்சித் துடிப்பே. இதை "தான்' என்கிற அகந்தை என்றும் கூறுகின்றனர். கழுத்தில் தாலி ஏறுகிறவரையில் கல்யாணம்  நிச்சயமில்லை என்று அந்நாளிலேயே பெரியவர்கள் கூறுவர். இன்று அது அடிக்கடி நினைவுபடுத்தப்படுகிறது.

 படித்த பையன்கள் தங்கள் வாழ்க்கையில் தனக்குத் துணையாக மனைவி வேண்டுமா அல்லது இணையாக வேண்டுமா என்பதில் ஏற்படும் குழப்பத்தின் விளைவுதான் இது. மண மகள் என்றாலே எலுமிச்சை நிறம், திரைப்பட நாயகிகளைப் போல் கட்டழகு, நுனி நாக்கு ஆங்கிலம், நவீன வாழ்க்கையில் நாட்டம் இவை இருந்தாலே தகுதிகள் என்ற தவறான கண்ணோட்டம் மறைய வேண்டும்.

 மண மகன் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதைவிட எத்தனைவிதமான கெட்ட பழக்கங்களிலிருந்து விலகி நிற்கிறார் என்பதே முக்கியம்.

 கல்யாணக் கனவுகளுடன் துணையைத் தேடும் பருவவயதினர் அனைவருக்கும், துணையைத் தேடும்போது நிதானம் தேவை; அழகு என்பது முக அழகு மட்டுமல்ல, மன அழகும் சேர்ந்ததுதான். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி, விட்டுக்கொடுத்து, பரிவுகாட்டி அன்புமயமாய் வாழும் வாழ்க்கையே கடைசிவரை மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தரும். பெரியவர்களின் வழிகாட்டல் மற்றும் நல்லாசியோடு, உற்றவர்களின் வாழ்த்துகளோடு அடக்கமாய், அமரிக்கையாய் தொடங்க வேண்டியதே இல்வாழ்க்கை என்பதை இளைய தலைமுறை ஏற்றால் திருமணம் நல்லதொரு வாழ்க்கையின் தொடக்கமாக அமையும்.

நம்முடைய பிள்ளைகள் புத்திசாலிகள், பெற்றோர் தங்களுக்குத் தீமையானதாய் செய்யமாட்டார்கள் என்பதை உணர்ந்து அவர்களுடைய வழிகாட்டலை ஏற்றால் திருமணங்கள் சொர்க்கத்திலேயே நிச்சயிக்கப்பட்டு நடந்து முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com