கோடை விடுமுறை தேவையில்லையா?

ஆங்கிலேயர் ஆரம்பித்ததுதான், ஆனாலும் நமது பள்ளிகளுக்கான கோடை விடுமுறை  என்பது நமது மண்சார்ந்த வகையில் - பள்ளி மாணவர் உளவியலும்
கோடை விடுமுறை தேவையில்லையா?

ஆங்கிலேயர் ஆரம்பித்ததுதான், ஆனாலும் நமது பள்ளிகளுக்கான கோடை விடுமுறை  என்பது நமது மண்சார்ந்த வகையில் - பள்ளி மாணவர் உளவியலும் உடல்நிலையும் சார்ந்த வகையில் - சரியானது தானே? அப்புறம் ஏன் தமிழகத்தின் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான நம் பிள்ளைகளுக்கு மட்டும் கோடை விடுமுறை மறுக்கப்படுகிறது?

தனியார் பள்ளி விடுதிகளில் தங்கிப் படிக்கும் நமது தமிழகப் பிள்ளைகளில் 9,11-ஆம் வகுப்புப் பிள்ளைகள் மட்டும் அவர்களின் ஆண்டு இறுதித்தேர்வு முடிந்ததும் கோடை விடுமுறை ரத்து செய்யப்பட்டு அடுத்த ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.

ஏன் இப்படி?

பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தை வகுத்தவர்கள் - ஒருநாளைக்கு இவ்வளவு நேரம் பாடம் நடக்க வேண்டும், விளையாட்டு, மற்றும் கலை வகுப்புகள் நடக்க வேண்டும் எனத் திட்டமிட்டுத் தந்தவர்கள் என்ன முட்டாள்களா? அறிவியல் ரீதியாக அவர்கள் சொன்னதை மீறி, சிறப்பு வகுப்பு நடத்துவதே மாணவர் உளவியலுக்கு எதிரானது. குதிரை கீழேதள்ளி குழியும் பறித்த கதையாக,  கோடை விடுமுறையையே மறுத்துத் தொடர்வகுப்புகள் நடத்துவது குழந்தைகள் மீது நடத்தும் வன்முறை அல்லவா? யார் இதைக் கேட்பது?

பல்லாயிரக்கணக்கான குழந்தைகள், லட்சக்கணக்கிலான பெற்றோர் சார்பில் தமிழக அரசுதான் தலையிட்டுக் கேட்க வேண்டும். உடனே இதைத் தடுத்து நிறுத்தவும் வேண்டும்.

தமிழ்நாட்டின் அனைத்து மெட்ரிக்-பள்ளிகளிலும், பெரும்பாலான தனியார் பள்ளிகளிலும் 9,11-ஆம் வகுப்புகளை  நடத்தும் வழக்கமே இல்லை; இந்த வியாதி பல பள்ளி மாணவரும் ஒரே ஆசிரியரிடம் தனிப்பயிற்சி படிப்பதால் தொற்றிக்கொள்ளும் வியாதி - இப்போது அரசுப் பள்ளிகளுக்கும் விடம்போலப் பரவி, குறைந்தது அரையாண்டுக்குப் பிறகாவது அடுத்த வருடப் பாடத்தைத் தொடங்கிவிடுவது என்னும் கைங்கரியம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆக, அரசுப்பள்ளிகளில் 9,11-ஆம் வகுப்புகளுக்கு அரைப் படிப்புத்தான்; மெட்ரிக், தனியார் பள்ளிகளில் அதுவும் இல்லை என்னும் நிலைமை.

மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் பலவற்றில், எட்டாம் வகுப்பு ஆண்டுத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவ-மாணவியர், 9-ஆம் வகுப்பில் சேர்ந்தவுடனேயே, 10-ஆம் வகுப்புப் பாடப்புத்தகங்களும் சேர்த்துத் தரப்படுகின்றன. தரப்படுவது என்ன, மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் - ஆங்கில வழியில் - படிக்கும் மாணவர்கள் 9,10-ஆம் வகுப்புப் பாடநூல்கள் இரண்டையும் ஒரே நேரத்தில் வாங்கிவிட வேண்டும்; மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில்தான் வெளியில் புத்தகங்களை வாங்க முடியாதே? வாங்கவும் கூடாது. அப்படி வாங்கிய 9-ஆம் வகுப்புப் பாடப்புத்தகங்கள் சில, ஒரு சில வாரங்களே நடத்தப்படும்.

பெருந்தன்மையான சில பள்ளிகளில் காலாண்டு வரை நடப்பதுண்டு. அதற்குமேல் நிச்சயமாக 10-ஆம் வகுப்புப் பாடங்கள் துவங்கிவிடும்; அதிலிருந்து அந்த மாணவர்கள் 10-ஆம் வகுப்புப் பாடங்களையே இருமுறை - அதாவது சுமார் ஒண்ணே முக்கால் ஆண்டுகளும் படிக்கிறார்கள்; இதே கதை (கதி) தான் 11-ஆம் வகுப்பு (1) மாணவ-மாணவிகளுக்கும்; இதில் கூத்து என்னவென்றால், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளைப்போலவே  பெரும்பான்மையான அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11-ஆம் வகுப்பின் அரையாண்டுத் தேர்வுக்குப் பிறகு 12-ஆம் வகுப்புப் பாடங்களைத் தொடங்கிவிடுவது இப்போதெல்லாம்  சாதாரணமாகிவிட்டது என்பதுதான்.    

இப்படியான பள்ளிகளில், மாணவர்கள் மனப்பாட எந்திரமாக மாற்றப்படுவதன்றி வேறு வழியென்ன? பாடமும் புரியாமல், மனப்பாடமும் செய்ய முடியாமல் மாணவர்கள் படும் அவதியும், முடியாத மாணவர்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாவதும் பள்ளிக் கூடத்தையே வெறுப்பதும், வாழ்க்கையே வெறுத்துப் போவதுமான நிலைமை தொடர்கதையாவதும் இப்படித்தானே?

மொழிப்பாடங்களில் செய்யுள்-உரைநடை-இலக்கணம், மொழிப்பயிற்சி மற்றும் கட்டுரை ஆகிய அனைத்தையும் ஒரே தேர்வில் எழுதிவந்த மாணவர்க்கு, 9 ஆம் வகுப்பில்தான் இரண்டு தேர்வுத் தாள்களாகப் பிரிக்கப்படுகிறது.

தமிழ் முதல் தாள்,  இரண்டாம் தாள் என்பது போலவே, ஆங்கிலத்திலும் 9-ஆம் வகுப்பிலிருந்துதான் இரண்டு தாள்களுக்கும் தனித்தனித் தேர்வுகள் வைக்கப்படுகின்றன. அப்போதுதான் மொழிப்பயிற்சி சற்று மேம்படும் என்பதே இதன் நோக்கம். பல மெட்ரிக் பள்ளிகளில் கட்டுரை ஏடு என்னும் ஒன்றை மாணவர்கள் பார்த்ததே இல்லை; அப்புறம் எப்படி மொழிவளம் கிடைக்கும்?

14 வயதில் -ஒன்பதாம் வகுப்பில்- இந்த மொழிப்பயிற்சிகள் விரிவாகத் தொடங்கப் படுவதற்கு அந்த வயதிற்கான கல்வி உளவியலே முக்கியமான காரணமென்பது கல்வியாளர் கருத்து.

இப்படி, முறையே 9, 11 வகுப்பில் 10,12-ஆம் வகுப்புப் பாடங்களை நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் அதையே தமது பாடக் குறிப்பேடுகளில் எழுத முடியாது; அப்போதுதான், பூனை வெளியே வந்துவிடுமே? இந்த நிலையை மாற்றி, முறைப்படுத்துவதன் மூலமாக ஆசிரியர்கள் அந்தந்த வாரமும் மாணவர்களுக்கு நடத்துவது ஒன்று, ஏடுகளில் எழுதிவைப்பது ஒன்று என்னும் ஏமாற்று வேலைக்கும் இடந்தரவேண்டியதில்லையே?

கல்வியாளர் கருத்தையும், மாணவர் உளவியல் சார்ந்த உடல் நலனையும் பற்றிக் கவலைப் படாதவர்கள்தான் இந்தப் புதிய வகையிலான "டபுள் ப்ரமோஷனை' நடத்துகிறார்கள். விடுதிகளில் தங்கிப்படிக்கும் பல்லாயிரக் கணக்கான 9, 11-ஆம் வகுப்பு மாணவரையும் பாடாய்ப்படுத்தி, பெற்றோரிடமும் கோடைக்கால சிறப்புத் தொடர்வகுப்பு என, லட்சக்கணக்கில் கட்டணத்தைக் கொள்ளையடிக்கவும் செய்கிறார்கள்.

இந்தச் செயல் சரிதான் எனில், 9,11 ஆம் வகுப்பையே கல்வித்துறை எடுத்துவிடலாமே?

மாணவர்கள் 9,11-ஆம் வகுப்புகளை இழப்பதன்மூலம் அந்தந்த  வருட அமைதியை இழக்கிறார்கள். அடுத்த வருடம்தான் அரசுத்தேர்வு எனும் நினைவு தரும் மனஅமைதி  போய்விடுகிறது.

இதிலிருந்து மீள, தமிழகக் கல்வித்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ""அந்தந்த ஆண்டு மாணவர்களுக்கு அந்தந்த ஆண்டுக்குரிய பாடங்களை மட்டுமே முழுமையாக நடத்த வேண்டும், அடுத்த வகுப்புக்குரிய பாடங்களை முன்கூட்டியே நடத்தக்கூடாது, கோடை விடுமுறை மறுக்கப்படக்கூடாது, அப்படி மீறி நடந்தால் பள்ளிக் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்'' என்று முதலில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

இதனால் மாணவர்களும் தப்பித்துக்கொள்வார்கள், கல்வியின் கெüரவமும் காக்கப்படும். சுற்றறிக்கை அனுப்பினால் மட்டும் போதாது, கண்காணிப்பும் தொடர் நடவடிக்கைகளும் அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com