என்னவாகும் எதிர்காலம்?

எதிர்கால இந்தியா இளைஞர்கள் கைகளில் இருக்கிறது என்று நம்பினார் காந்தியடிகள். "நூறு இளைஞர்களை என்னிடம் கொடுங்கள் இந்தியாவை மாற்றி அமைத்துக் காட்டுகிறேன்' என்றார் விவேகானந்தர்.

எதிர்கால இந்தியா இளைஞர்கள் கைகளில் இருக்கிறது என்று நம்பினார் காந்தியடிகள். "நூறு இளைஞர்களை என்னிடம் கொடுங்கள் இந்தியாவை மாற்றி அமைத்துக் காட்டுகிறேன்' என்றார் விவேகானந்தர். இவையெல்லாம் இளைஞர்கள் மீதும் அவர்கள் தம் ஆற்றல் மீதும் வைத்த நம்பிக்கை வாசகங்களாகும்.

இந்த எதிர்பார்ப்பில்தான் "இளைய பாரதத்தினாய் வா வா வா' என்றார் பாரதியார். வளரும் தலைமுறை நன்றாக வளர்க்கப்பட்டால்தான் வைய வாழ்வு சிறக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

உன்னை நீ அறிந்தால், உன்னை நீ அறிந்தால் உலகத்தில் போராடலாம்... என்றதொரு திரைப்பாடல் இளைஞர்களை ஊக்குவிக்கும் உன்னதமான பாடலாகும்.

உன்னை நீ அறிவாய்! என அறிவுரை கூறி இளைஞர்களை முன்னேற அழைத்தார் எம்.எஸ். உதயமூர்த்தி.

ஆனால், தற்கால இளைஞர்களின் போக்கு திசைமாறித் திரியும் பறவைகளாகப் பறந்து பாழாகின்றது.

எதிர்கால இந்தியாவைத் தலைமை தாங்கி வழி நடத்த வல்ல வாய்ப்புகள் பல இருந்தும் சில சுற்றுப் புறத் தீமைகளால் ஈர்க்கப்பட்டுச் சீரழியும் அவலத்தை என்னென்பது?

"இளமையில் கல்' என்ற ஒளவையாரின் அடிப்படை வாசகத்திலிருந்து "வையத் தலைமைகொள்' என்ற பாரதியின் வசனம் வரை இளைஞனை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் காலம்போய் இன்றைய இளைஞனின் எண்ணச் சிதறல்களே அவனைச் சீரழிக்கின்றன.

பள்ளிப் பருவமான விடலைப் பருவத்தில் எதைப் பார்த்தாலும் ஒருவித இனம் புரியாத பரவசம் ஏற்படும். இந்தக் காலக் கட்டத்தில் அவன் தன்னை நிதானப்படுத்திச் சரியான சகவாசம் வைத்துக் கொண்டாலொழிய தீயவற்றிலிருந்து தப்பிக்க முடியாது.

விடலைப் பருவத்திலிருந்து வாலிபப் பருவத்திற்கு மாறும் இந்த இளமைக் காலத்தை நிதானமாகக் கடக்க வேண்டும். இல்லையேல் தடுமாற்றத்தால் முன்னேற்றம் தடைப்பட்டு விடும். இன்றையச் சூழலில் ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்துப் பயிலும் நிலையில் கட்டுப்பாடற்ற சூழல், பெற்றோர் தரப்பிலும் சமூக நிலையிலும் கண்டும் காணாததாக நிலவுவதால் இதிலிருந்து தப்பிக்க எச்சரிக்கை தேவை. தன்னைத் தானே உணரும் சுய சோதனையையும் வேண்டும்.

பாலியல் பலாத்காரம் போன்ற பாவங்களைக் கல்வி நிலையங்களிலிருந்தே தொடங்கும் அவலங்கள் இளைஞர்களின் நெஞ்சில் வேரோடி வருகின்றன.

கல்வி கற்கும் சூழல் ஒருபுறமிருக்க வீட்டிலோ தொலைக்காட்சியில் சிக்கித் தவிக்கும் சீரழிவை என்னென்பது! கல்வித் தொடர்பான எதையும் காண இளைஞனின் உள்ளம் விரும்புவதில்லை. மூளைச் சலவை செய்யும் முட்டுக் கட்டையான உணர்ச்சிகளின் உந்துதலை மேலும் மேலும் காணத்துடிக்கிறார்கள்.

பொழுதுபோக்கு என்ற வகையில் 24 மணி நேர ஒளிபரப்பென்பது நம்பொருட்டா?  தேவைக்கானதை மட்டும் காணும் வரையறை கை கடந்த சூழலில் இளைஞன் தனக்குத் தானே கேடு விளைவித்துக் கொள்கிறான். இது எதிர்கால வளர்ச்சிக்கான கேள்விக் குறியாகவே தொடர்கிறது.

வீட்டைத் தாண்டிய வெளியுலகிலோ ஆர்ப்பாட்ட அற்ப அலைக்

கழிப்பான சுவரொட்டி விநோதங்கள் ஆபாசத் திரைப்படக் காட்சிகளைச் சுமந்த விளம்பரங்கள் இளைஞனின் அழிவுக்கு வரவேற்புக் கம்பளம் விரிக்கின்றன. இவற்றையும் தாண்டி விற்பனையாகும் போதைப் பொருள் மயக்கில் தன்னைத் தொலைத்துக் கொள்கிறான். இப்படியாகப் பல்வேறு நிலையில் தள்ளப்படும் இளைஞனின் சக்தி, அவனைச் சுற்றியுள்ள சூழலை மையமாக வைத்து நோக்கினால் அவன் அடைய வேண்டிய இலக்குக்குக் கடுமையாகப் போராட வேண்டியதாகவே உள்ளது.

தள்ளாட்டத்தாலும் அலைக்கழிப்பாலும் தவிக்கும் தவிப்பிலிருந்து இளைஞனை மீட்டெடுக்கப் பெற்றோரும் சமூகமும் சரியான வழிகாட்டியாக இல்லாததால் இளைஞனின் எதிர்காலம் கேள்விக் குறியாகவே தெரிகிறது.

கேள்விக் குறி - நிமிர்ந்து நிற்கும் வியப்புக் குறியாக வேண்டாம்!

முதலில் வியப்புக்கான வழிமுறையைத் தேர்ந்தெடுக்கும் கெட்டிக்காரத்தனம் வேண்டும். நாம் வாழும் யுகம் தகவல் சாதன யுகம். உலகத்தையே உள்ளங்கைக்குள் காணும் கருவிகள் வந்துவிட்டன.

அவற்றை பக்குவமறிந்து பயன்படுத்த வேண்டும். கைபேசிப் பயன்பாட்டின் விபரீதங்கள் எத்தனை? இணைய தள இழிவுகள்தாம் எத்தனை?

ஆக, சமையல் நன்றாக அமைய வேண்டுமானால் அதற்குத் தேவையான பொருள்கள், சேர்மானங்கள் முதலியவற்றால் சுவை கூடுதலாவதைப் போல, இன்றைய இளைஞனுக்குத் தான் ஒரு பிள்ளை நிலாவாக இன்றைக்கிருந்தாலும் அந்தப் பிறை வளர்ச்சிக்குள் பூரணச் சந்திரன் ஒளிந்துள்ளான் என உணரும் பக்குவம் வந்துவிட்டால், அவனது எதிர்காலம் ஒளிமயமாகுமன்றோ!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com