அரசைப் போற்றுவோம்!

சுதந்திரத்தால் நான் என்ன பயன் பெற்றேன்?' என்று அன்றைய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவை வழிமறித்து கேள்வி கேட்டான் ஒரு சிறுவன்.
அரசைப் போற்றுவோம்!

சுதந்திரத்தால் நான் என்ன பயன் பெற்றேன்?' என்று அன்றைய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவை வழிமறித்து கேள்வி கேட்டான் ஒரு சிறுவன். அதற்கு பண்டித நேரு, அந்த சிறுவனின் கன்னங்களை வருடியபடி பதில் சொன்னார். நாட்டின் பிரதமரையே வழி மறித்து கேள்விக்கேட்கும் உரிமை உனக்கு வாய்த்திருக்கிறதே, அதுதான் பயன்.

அறுபத்து எட்டாவது சுதந்திர தினம் எங்கள் பள்ளியில் கொண்டாடப்பட்டது. ஒரு ஊர் பெரியவர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு அவருக்குப் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. பண்டித நேருவை வழி

மறித்து சிறுவன் கேள்விக் கேட்டதைப்போல அவர் பள்ளி ஆசிரியர்களிடம் கேள்வியொன்றைக் கேட்டார். இந்தப் பள்ளியில் இத்தனை ஆசிரியர்கள் இருக்கிறீர்கள். மாதந்தோறும் முப்பதாயிரம், நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறீர்கள். ஆனால், இப்பள்ளியின் தரத்தை தனியார் பள்ளி அளவிற்கு உங்களால் உயர்த்த முடியவில்லையே ஏன்?

பலரும் கேட்கும் கேள்வி இது. ஆனால், "தனியார் பள்ளியின் தரம் அளவிற்கு தமிழகம் முழுவதிலுமுள்ள அரசுப் பள்ளியை நம்மால் உயர்த்த முடியவில்லையே ஏன்' என அவர் கேட்டிருந்தால் அந்தக் கேள்விக்கான பதில் அங்கேயே கிடைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. நம்மூரில் இத்தனை பெரிய அரசுப் பள்ளிக்கூடம் இருந்தும் நாம் ஏன் நம்முடைய குழந்தையைத் தனியார் பள்ளியில் சேர்க்கிறோம் என கேட்டிருக்க வேண்டும்.

இந்திய அரசின் தகவல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் பி.எஸ்.என்.எல். அந்த நிறுவனம் வழங்குகிற சேவை மகத்தானது. எதாவது ஒரு குறுஞ்செய்தியை வாடிக்கையாளர்களுக்கு அர்த்த ராத்திரியில் அனுப்பி, இரவு பனிரெண்டு மணிக்கு மேல் அம்பது பைசா, ஒரு ரூபாய் பிடிக்கும் வேலையை அந்த நிறுவனம் செய்வதில்லை. வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கத்தில் கற்பனைக்கு அப்பாற்பட்ட சலுகையை அந்த நிறுவனம் வாரி வழங்குவதில்லை. முடிந்தளவு நல்ல சேவையைத்தான் அது கொடுத்து வருகிறது. இந்தியா முழுமைக்கும் குக்கிராமங்கள் வரை பரவலாக கோபுர வசதி செய்துக்

கொடுத்துள்ளது. தமிழகத்தில் அரசு பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயங்கி வருகின்றன. பரவலாக அதிகம் விபத்து எதிர்க்கொள்ளாதது அரசு பேருந்துதான். பாதுகாப்பான பயணம், கட்டுக்குள் அடங்கும் வேகத்தில் அதன் சேவை இருக்கிறது. ஆனால், தனியார் பேருந்து பயணிகளால் நிரம்பி வழிகிறது. மாவட்ட தலைமையிடங்களில் அரசு நிர்வகிக்கும் தங்கும் விடுதிகளும் தனியார் துறையினரின் தங்கும் விடுதிகளும் இருக்கின்றன. எத்தனைபேர் அரசு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்குகிறார்கள்?

நான் அரசுப் பள்ளி ஆசிரியர். மகப்பேறுக்காக என் மனைவியை அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தேன். முதல் குழந்தை சுயபிரசவம். இரண்டாவது குழந்தை சிசேரியன். தாய் - சேயைப் பார்க்க வந்த உறவினர்களும் நண்பர்களும் என்ன சொன்னார்கள் தெரியுமா? ஏன் நல்ல தனியார் மருத்துவமனையைப் பார்த்து சேர்த்திருந்திருக்கலாமே! ஏன்தான் இப்படி கஞ்சத்தனமாக இருக்கிறீர்களோ. இது எப்படி இருக்கு? அப்படியே அவர்கள் சொல்வதைப்போல தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் முதல் குழந்தையும் சிசேரியனில் பிறந்திருக்கும்.

நல்ல பள்ளி என்பது தனியார் பள்ளி என்கிற மாயத்தோற்றத்தைப்போல, நல்ல மருத்துவமனை தனியார் மருத்துவமனைதான் என்கிற சொல்லாடல் இன்று மக்கள் மத்தியில் புரையோடிக் கிடக்கிறது. அவர்கள் சொல்வதை வைத்துப் பார்க்கையில் தனியார் மருத்துவமனை நல்ல மருத்துவமனை என்றால், அரசு மருத்துவமனை என்பது மோசமான மருத்துவமனை என்றுதானே பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. தனியார் மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் செவிலியர்களில் பலர் தன் உடல் நலம் கருதி அரசு மருத்துவமனையில் குழந்தைப்பெற்றுக்கொள்ளும் ரகசியம் எத்தனைப்பேருக்குத் தெரியும்?

அரசுப் பள்ளி ஆசிரியர், அரசு ஊழியர்கள் என்றால் பணம் காய்க்கும் மரமா?

ஒரு பள்ளியில் பகுதி நேரம் பணியாற்றும் ஆயாவை விடவும், ஏழ்மையில் காலத்தை கழிக்கும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆசிரியரை விடவும் ஏழ்மையான தலைமை

யாசிரியர் இருக்கிறார்கள். ஆசிரியர்களை மேற்பார்வை செய்யும் அதிகாரிகளில் பலர் அவருக்கு கீழ் பணியாற்றும் ஆசிரியர்களிடம் செலவுக்கு பணம் பெற்று ஒரு குடும்ப விழாவையோ அல்லது ஒரு பண்டிகையையோ கொண்டாடி முடிக்கும் நிலைக்கு அரசு ஊழியர்களுக்கிடையேயான பொருளாதார ஏற்றத்தாழ்வு இருந்துகொண்டிருக்கிறது.

அரசு ஊழியர்களுக்கு அரசு கொடுக்கும் மாத ஊதியம் போதுமானதுதான். இதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களின் மனைவிகளின் மகப்பேறு தனியார் மருத்துவமனையில் பார்க்கும் அளவிற்கு எல்லா அரசு ஊழியர்களின் வாழ்க்கைத்தரமும் முன்னேறிவிட வில்லையே. அரசுப் பள்ளியின் தரம் தனியார் பள்ளியின் தரத்திற்கு முன்னேற வேண்டும் என்கிறார்கள். தரம் என்று எதைக் குறிப்பிடுகிறார்கள். கட்டட வசதியையா. கட்டட வசதி என்றால், கடந்த இருபது ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இன்றைய பள்ளிகளின் கட்டுமானம் மேம்பட்டதாக இருக்கிறதே. கல்வியின் தரம் என்றால் ஒன்பதாம் வகுப்பு வரை ஒரு மாணவன் தனியார் பள்ளியில் படித்துவிட்டு, அப்பள்ளியின் கட்டாயத்தால் சிலர் பத்தாம் வகுப்பு அரசுப் பள்ளியில் சேர்கிறார்களே ஏன்?

அரசுப் பள்ளிகள் ஒன்றிரண்டு தொடர்ந்து மூடப்பட்டு வருவதைப்போல, பல தனியார் பள்ளிகளும் மூடப்படும் அவலமும் நடந்தேறி வருகிறது. இன்று கழிப்பறை இல்லாத அரசு பள்ளிக்கூடம் இல்லவே இல்லை. இது தமிழக அரசின் மகத்தான சாதனை. ஆனால், கழிப்பறை பயன்படுத்துவதில் குறைபாடுகள் இருப்பதற்கு சமூகம்தான் பொறுப்பேற்க வேண்டும். கழிப்பறை இல்லாத வீட்டிலிருந்து வருகின்ற குழந்தைகள் பள்ளியில் உள்ள கழிப்பறையை பயன்படுத்தத் தெரியவில்லை. ஒரு முழுமையான கழிப்பறை பயன்பாடு என்பது வீட்டிலிருந்து தொடங்கப்படட்டும். அரசு அங்காடி கொடுக்கும் இலவச அரிசியை அரிசிக் கடையில் விற்றுவிட்டு, அதேக் கடையில் அதே அரிசியை அதிக விலைக்கொடுத்து வாங்கி உயர் ரகமான அரிசி இதுதான் என காலரை தூக்கிவிட்டுக் கொள்ளும் மடமை வாழ்க்கையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம் நாம். அரசு வழங்கும் சத்துணவு, மாவு, முட்டைகளை புறக்

கணித்து விட்டு குழந்தையின் ஆரோக்கியத்தைத் நாடி மருத்துவமனையில் நீளும் வரிசையில் நிற்கத் தொடங்கிருக்கிறோம்.

அரசு வழங்குகின்ற விலையில்லா புத்தகம், நோட்டு, கலர் பென்சில்களை உதாசீனப்படுத்திவிட்டு, அதே பொருள்களை விலை கொடுத்து வாங்கி தன் குழந்தைகளுக்கு கொடுக்கப் பழகியிருக்கிறோம். தரமான இலவசக் கல்வியை, புறக்கணித்து விட்டு தான் சமுதாயத்தில் மேம்பட்டவன் எனக் காட்டிக்கொள்ள அசையா சொத்துகளை விற்று குழந்தையை தனியார் பள்ளியில் சேர்க்கிறோம். தனியார் பள்ளியில் ஒவ்வொரு பெற்றோரும் கல்விக் கட்டணமாக கட்டும் தொகையில் பத்தில் ஒரு பங்கு தொகையை படித்த வேலையில்லா பட்டதாரியிடம் கொடுத்து வீட்டில் மாலை நேர வகுப்பு எடுக்கச் சொன்னால், அரசுப்பள்ளியில் தென்படும் குறைகள் களையப்பட்டுவிடுமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com