மனித உயிர்களுக்கு மதிப்பற்ற சாலைகள்!

சமீபத்தில் சாலையில் ஒரு காட்சியைக் கண்டேன். ஒரு பெண் தனது கைக்குழந்தையை வைத்துக்கொண்டு இரு சக்கரவாகனத்தின் பின்புறம் அமர்ந்திருக்க அவளுக்குப்பின்னே மற்றுமொரு சிறுவயது பையன் எதிர்த்திசையில் உட்கார்ந்திருக்க மற்றுமொரு மூன்று வயது சிறுமி ஓட்டுபவரின் முன்பாக அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.
மனித உயிர்களுக்கு மதிப்பற்ற சாலைகள்!

சமீபத்தில் சாலையில் ஒரு காட்சியைக் கண்டேன். ஒரு பெண் தனது கைக்குழந்தையை வைத்துக்கொண்டு இரு சக்கரவாகனத்தின் பின்புறம் அமர்ந்திருக்க அவளுக்குப்பின்னே மற்றுமொரு சிறுவயது பையன் எதிர்த்திசையில் உட்கார்ந்திருக்க மற்றுமொரு மூன்று வயது சிறுமி ஓட்டுபவரின் முன்பாக அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். சாலையில் நடந்த ஒரு சர்க்கஸ் காட்சியாகவே அது காணக்கிடைத்தது. ஒரு நாள் சாலையில் இரண்டு இளைஞர்கள் ஓர் இரு சக்கர வாகனத்தில் மிக வேகமாக எல்லோரையும் இடிப்பது போல வளைந்து வளைந்து சென்றுகொண்டிருந்தார்கள். அவர்களுடைய வேகமான வண்டியின் ஒலியைக் கேட்டதும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு இடம் தருவது போல அனைவரும் அவ்விளைஞர்களுக்கு வழிவிட்டோம். அவர்கள் எவ்விதக் கூச்சமும் அடையாமல் எல்லோரையும் பயமுறுத்திக்கொண்டே சென்று கொண்டிருந்தார்கள். அலைபேசியை காதுகளுக்கும், தோள்பட்டைக்கும் இடையில் செருகிக்கொண்டு, தலையைச் சாய்த்துக் கொண்டும், இரு சக்கரவாகனத்தை ஓட்டிக்கொண்டும் பேசிச் செல்லும் நபர்களை தினம் தினம் பார்க்க முடிகிறது. இப்படிப் பேசுபவர்களில் நூற்றுக்கு தொன்னூற்றொன்பது பேர் பேசும் விஷயங்கள் மிகவும் அற்பமான விஷயங்களாகவே இருக்கும்.

சாலைகளில் ஓட்டுனர்களின் கவனக்குறைவால் நடக்கும் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகமாகிக்கொண்டே செல்கின்றன. மணல் அள்ளும், கட்டடங்களை இடிக்கும் பொக்லைன்கள் கூட சாலைகளில் மிகவேகமாக ஓட்டிவரப்படுகிறது. பல பேருந்து ஓட்டுனர்கள் பேருந்தை இயக்கிக்கொண்டே அலைபேசியில் பேசுவதை பார்த்திருப்போம். பயணம் செல்வதற்கு முன்னர் வண்டி என்ன நிலையில் உள்ளது என்பதை அறிந்துகொண்டு வண்டியை இயக்கவேண்டும். எப்போதாவது ஒரு குழந்தை வண்டியில் இருந்து தவறி விழும்போதோ அல்லது கட்டுப்பாடுகளை இழக்கும் கார்கள் லாரிகளில் மோதும்போதோ அல்லது ஆளில்லா ரயில்வே கேட்டுகளில் பள்ளி வாகனங்கள் தூள் தூளாக சிதறும்போதோ மட்டுமே நம்முடைய மனசாட்சி சில அனுதாப "இச்'களை பொழிவதற்கு உடன்படுகிறது. தொலைக்காட்சிகளின் அடுத்த காட்சி நகர்வுகள் நம்மை இது குறித்து சிந்திப்பதை தடுத்துவிடுகின்றன.

சாலை விபத்துகளை நாம் மிகவும் சர்வ சாதாரணமாகக் கடந்து விடுகிறோம். அது சாதாரண மனிதனிடம் ஏற்படுத்தும் சமூக, பொருளாதாரத் தாக்கத்தை அளவிடமுடியாது. பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறுவர், சிறுமியர் இரு சக்கரவாகனங்களை ஓட்டுவதும் விபத்தில் சிக்குவதும் அதிகரித்துவிட்டது. சமீபத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் பள்ளிக்கூட மாணவர்கள் கூட்டமாக இருந்ததைப் பார்த்து விசாரித்தபோது அவர்களது பள்ளிக்கூட நண்பன் ஒருவன் இரு சக்கர வாகனம் ஓட்டிசென்றபோது விபத்து ஏற்பட்டதாகவும் அவன் இறந்து போய்விட்டதாகவும் தெரிவித்தனர்.

சாலை விபத்துகள் நடந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களின் நிலையோ மேலும் பரிதாபகரமானது. ஒரு முறை போலீஸ் உயரதிகாரி ஒருவர் தான் செல்லும் வழியில் விபத்தில் சிக்கியிருந்தவர்களை தனது காரில் ஏற்றிச் செல்லும் செய்தியையும்,புகைப்படத்தையும் ஒரு நாளேடு பிரசுரித்திருந்தது. ஆனால், பெரும்பாலான விபத்துகளில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் 108-ஐ மட்டுமே உதவிக்கு எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.விபத்தில் சிக்கிய நேரத்திற்கும் மருத்துவமனையை அடையும் நேரத்திற்கும் இருக்கும் கால இடைவெளிதான் விபத்தில் சிக்கியவரின் வாழ்வைத் தீர்மானிக்கிறது. சமீபத்தில் நான் வழக்கமாகச் செல்லும் சாலை சந்திப்பில் வழக்கமில்லாத அளவுக்கு சாலைகளில் வேகத்தடைகள் போடப்பட்டிருந்தன. முந்தைய தினம் அவ்விடத்தில் நடந்த சாலைவிபத்தில் ஒரு பெண் இறந்து போனதும் அவரது மகள் படுகாயமடைந்ததுமே காரணம். போக்குவரத்துக் காவலர்கள் சிலர் அவ்விடங்களில் நின்றுகொண்டிருந்தனர். புதிதாகப் போடப்பட்டிருந்த வேகத்தடையின்மீது வெண்மை மற்றும் கருமை நிற வண்ணங்கள் பூசப்பட்டிருந்தன. வேகத்தடைக்குப் பக்கத்திலேயே காய்ந்துபோன ரத்தத்தின் மீது மண்போட்டு மூடப்பட்டிருந்தது. நாம் விரும்பாத நிகழ்வுகளும் இப்படித்தான் நம்மைக் கடந்து போய்க்கொண்டே இருக்கின்றன. சாலையில் வாகனங்களை ஓட்டும்போது வேகக்கட்டுப்பாடு அவசியம் என்பதையும், சாலை விதிகள் கட்டாயம் மதிக்கப்படவேண்டும் என்பதையுமே இத்துயரச்சம்பவங்கள் நமக்கு போதிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com