நீச்சலும் ஒரு தற்காப்புக்கலையே

நீச்சல் என்பது வெறும் பொழுதுபோக்கோ, விளையாட்டோ அல்ல; ஆபத்து காலங்களில் உயிரைக் காக்கும் தற்காப்புக் கலை. ஆனால் அதற்குரிய முக்கியத்துவம் தரும் நிலையில் தமிழ்நாட்டவர்களில் பெரும்பாலோர் இப்போது இல்லை.
நீச்சலும் ஒரு தற்காப்புக்கலையே

நீச்சல் என்பது வெறும் பொழுதுபோக்கோ, விளையாட்டோ அல்ல; ஆபத்து காலங்களில் உயிரைக் காக்கும் தற்காப்புக் கலை. ஆனால் அதற்குரிய முக்கியத்துவம் தரும் நிலையில் தமிழ்நாட்டவர்களில் பெரும்பாலோர் இப்போது இல்லை.

முன்பெல்லாம் தமிழ்நாட்டில் ஏராளமான நீர் நிலைகள் இருந்தன, அவற்றில் ஆண்டின் பெரும்பாலான நாள்களில் தண்ணீர் நிரம்பியிருந்தது. எனவே வீடுகளில் குளிப்பதைவிட ஆறு, குளம், ஏரி, ஊருணி - ஏன் சில சமயங்களில் குட்டைகளில்கூட குளிப்பதுண்டு.

நடப்பது, ஓடுவது போல நீச்சலடிப்பதும் எல்லோருக்கும் பழக்கமாக இருந்தது. சிறு வயதில் குழந்தைகளுக்குப் பெரியவர்கள் நீச்சல் கற்றுத்தந்ததைவிட சம வயதுத் தோழர்கள் கற்றுத்தந்ததே அதிகம்.

நீச்சல் கற்றுக்கொள்கிறவர்களின் இடுப்பில் சுரைக்குடுக்கையைக் கட்டி தண்ணீரில் மூழ்காமல் பார்த்துக்கொள்வார்கள். பத்து வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களாக இருந்தால், நீச்சல் ஓரளவுக்குத் தெரிந்ததும் "பம்புசெட்' கிணற்றின் மீதிருந்தும் ஏரி மதகிலிருந்தும் குதித்து "டைவ்' அடிக்கவும் கற்றுத் தருவார்கள்.

நவீன காலத்தில் சொல்லப்படும் 'ப்ரீ-ஸ்டைல்', "பட்டர்-பிளை', "பேக் ஸ்டிரோக்', "பிரெஸ்ட் ஸ்ட்ரோக்' என்றெல்லாம் பெயர் சூட்டாவிட்டாலும் எல்லாவகை நீச்சல்களையும் கற்றுத் தேர்ந்தார்கள். நீச்சல் தெரியாதவர்களிடம் உனக்கு நீச்சல் தெரியுமா என்று கேட்டால், "தெரியும் - கடப்பாரை நீச்சல்' என்று குறும்பாக பதில் அளிப்பார்கள்.

எல்லா ஊர்களிலும் உள்ள நீர் நிலைகளில் குளிக்க நீச்சல் மிகவும் பயன்பட்டது. கோயில்களுக்குச் செல்லும் யாத்ரிகர்கள் கோயில்களிலேயே அமைந்த குளங்களில்தான் நீராடினர். எனவே நீச்சல் என்பது இயல்பான பயிற்சியாகவே இருந்தது.

வீடுகளில் குளிக்கத் தொடங்கிய பிறகு நீச்சல் படிப்படியாக குறைந்து இப்போது அறவே 2 தலைமுறைகளுக்கு மறந்துவிட்டது. இப்போது நீச்சல் பழக விரும்பினாலும் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் அதற்கு ஏற்றபடி நீர்நிலைகள் இல்லை. நீருள்ள இடங்களிலும் பாதுகாப்பான படித்துறைகளோ, சுகாதாரமான தண்ணீரோ கிடையாது. எனவே கரையோரம் பத்திரமாக குளித்து மீள்வதே சாதனையாகிவிட்டது.

பெரிய நகரங்களில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளிலும், நட்சத்திர ஹோட்டல்களிலும் இப்போது நீச்சல் குளங்கள் கட்டப்படுகின்றன. அங்கு நீச்சல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மார்போடு அணியும் லைஃப் பெல்டுகள், ரப்பர் டயர்கள் என்று சாதனங்களும் நவீனமாக இருக்கின்றன.

நீச்சல் என்பது சைக்கிள் ஓட்டுவதைப் போன்றது. உடல் எடையைக் குறைக்கவும், மூச்சுப் பயிற்சியை சீராக மேற்கொள்ளவும், தேவையற்ற உடல் கொழுப்பைக் கரைக்கவும், சுவாச உறுப்புகளைப் பலப்படுத்தவும் உதவக்கூடியது. ஆறுகள், ஏரிகள், கடல் போன்றவற்றில் சிக்கித் தவிப்போரை மீட்க நீச்சல் பயிற்சி மிகவும் உதவும். நீச்சல் நன்றாகத் தெரிந்தால் தீயணைப்புப் படை, காவல்துறை, ராணுவம் அதிலும் குறிப்பாகக் கடற்படை போன்றவற்றில் பணிபுரிய வசதியாக இருக்கும். நீச்சலடிப்பதால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நன்மை ஏற்படுவதால் தங்களுடைய குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சியை அனைவரும் கட்டாயம் அளிக்க வேண்டும். எத்தனை வயதானாலும் நீச்சல் கற்றுத் தரும் நிபுணர்களும் இருக்கிறார்கள். எனவே வயதானவர்களும் கூச்சத்தைவிட்டு நீச்சல் அடிக்க கற்றுக்கொள்ளலாம்.

மிகப்பெரிய நீர்நிலைகளுக்கு குறிப்பாக வட தேச யாத்திரையின்போது கங்கை, பிரம்மபுத்திரா போன்ற நதிகளைப் பார்க்கும்போது அச்சப்படாமல் கரையோரம் குளிக்கவாவது நீச்சல் பயிற்சி மிகவும் உதவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com