பார்வை பாதுகாப்பா? பறிப்பா?

சில மாதங்களுக்கு முன்னர் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் கண் சிகிச்சை முகாம்களில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு பார்வை இழப்பு ஏற்பட்ட செய்தியை வழக்கம்போல சில நாள்களில் மறந்துவிட்டோம்.
பார்வை பாதுகாப்பா? பறிப்பா?

சில மாதங்களுக்கு முன்னர் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் கண் சிகிச்சை முகாம்களில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு பார்வை இழப்பு ஏற்பட்ட செய்தியை வழக்கம்போல சில நாள்களில் மறந்துவிட்டோம். பஞ்சாபில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமில் 16 பேருக்கு பார்வை பறி போன துயர நிகழ்வு ஏற்பட்ட சில நாள்களிலேயே அடுத்த துயரம் ஹிமாசலப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

எந்தவோர் அறுவைச் சிகிச்சையிலும் பக்க விளைவு தவிர்க்க முடியாததுதான் என்று, இந்த விஷயத்தை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. 1970-களில் அரசு இலவச கண் சிகிச்சை முகாம்களை கிராமங்களில் நடத்தியது. 600, 700 பேருக்கு ஒரே நாளில் கண்புரை (இஹற்ஹழ்ஹஸ்ரீற்) நீக்க அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதுவும் அறுவைச் சிகிச்சை அரசு மருத்துவமனையில் நடைபெறவில்லை. கிராமங்களில் உள்ள பள்ளிக்கூடங்களும், திருமண மண்டபங்களும் தாற்காலிக அறுவைச் சிகிச்சைக் கூடங்களாக மாற்றப்பட்டு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இன்றைய தலைமுறையினருக்கு இது வியப்பாக இருக்கும். அதுவும் இன்றைய நாளில் உள்ளதுபோல நவீன உபகரணங்கள், மருந்துகள், அறுவைச் சிகிச்சை வசதிகள் எதுவும் அன்று கிடையாது. தற்போது செய்யப்படும் அறுவைச் சிகிச்சையுடன் ஒப்பிடும்போது, அன்றைய நாள்களில் செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையில்தான் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருந்தது. ஆனாலும் 600, 700 அறுவைச் சிகிச்சை நடைபெற்றபோதும் இது மாதிரி பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

மத்திய அரசு, பார்வை இழப்புத் தடுப்புத் திட்டத்தை பரவலாக்கியதன் மூலம் பார்வை இழப்புத் தடுப்புத் திட்டத்தை மாவட்ட ஆட்சியரின் கீழ் செயல்படும் மாவட்ட பார்வை இழப்புத் தடுப்பு சங்கம் (District Blindness Control Society) மூலமாக நடைமுறைப்படுத்தியது. அடுத்தக் கட்டமாக கண்புரையைக் கட்டுப்படுத்துவதற்காக, தேசிய அளவிலான திட்டத்தைத் தொடங்கி கண் சிகிச்சை வசதிகளை மேம்படுத்தியது. நவீன மருத்துவ உபகரணங்கள் மூலம் I.O.L. (Intra Ocular Lens)எனப்படும் லென்சை கண்ணுக்குள் பொருத்தி, அறுவைச் சிகிச்சை செய்யும் புதிய உத்தியும் புகுத்தப்பட்டது.

அறுவைச் சிகிச்சையின் தரத்தை மேலும் உயர்த்துவதற்காக, கிராமங்களிலேயே அறுவைச் சிகிச்சை செய்யாமல் நோயாளிகளை மருத்துவமனையில் தங்க வைத்து அறுவைச் சிகிச்சை செய்யும் வழக்கமும் ஆரம்பமானது.

பார்வை இழப்பில் 80 விழுக்காடு கண்புரையினாலேயே ஏற்படுகிறது. ஆனால், அதனை ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம் என்பது ஆறுதலான விஷயம். கண்புரையினால் ஏற்பட்டுக் கொண்டிருந்த பார்வையிழப்பை விரைந்து கட்டுப்படுத்த வேண்டி மத்திய அரசு, தனியார் கண் மருத்துவமனைகளையும் கண் சிகிச்சை முகாம் நடத்த அனுமதித்ததுடன், தேவையான நிதி உதவியையும் செய்து வருகிறது. முகாம் நடத்துவதற்கு முன் சம்பந்தப்பட்ட மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்திடம் உரிய அனுமதி பெற்றாக வேண்டும். சம்பந்தப்பட்ட தனியார் கண் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்வதற்கு போதிய வசதிகள் இருக்கிறதா, தேவையான உபகரணங்கள் இருக்கிறதா, மருத்துவர் உள்ளிட்ட பணியாளர்கள் இருக்கிறார்களா என்று மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் மாவட்ட திட்ட மேலாளர் ஆய்வு செய்த பிறகே உரிய அனுமதியை வழங்குவார்.

மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் நேரடிப் பார்வையில் அரசின் வழிகாட்டுதலின்படி, கண் சிகிச்சை முகாம் நடைபெற்றாலே போதும். எந்தப் பிரச்னையும் எழ வாய்ப்பு இல்லை. பணம் செலுத்தினால், என்ன மருத்துவ வசதி கிடைக்கிறதோ அதே தரத்தினாலான மருத்துவ வசதி இலவச முகாம்களிலும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு, உடனடியாக தேசிய பார்வை இழப்புத் தடுப்புத் திட்டத்தை ஒரு முழு ஆய்வுக்கு உள்படுத்தி எதிர்காலத்தில் இதுபோன்ற துயரங்கள் நிகழாமல் இருப்பதற்கான வழிவகைகளை ஆராய வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும்போது அறிக்கை கேட்பதோ, மருத்துவர்கள் மீது அப்போதைக்கு ஏதோ ஒரு நடவடிக்கை எடுப்பதோ பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாகாது.

கண்புரைக்கு உரிய நேரத்தில் அறுவைச் சிகிச்சை செய்யாவிட்டால் பார்வையை இழக்க நேரிடும். சரி! "கண்புரைக்கு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டால் பார்வை கிடைக்கும்' என்று நம்பி இலவச முகாமிற்கு செல்லும் ஏழை மக்கள், நிரந்தரமாகவே பார்வையை இழந்தால் அதை "பார்வை பறிப்பு' என்றுதானே சொல்ல முடியும்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com