குடும்ப அட்டையா? இடும்பை அட்டையா?

மக்கள் அனைவரும் பகுத்துண்டு வாழ வேண்டுமென்ற எண்ணத்தில் மத்திய அரசு குடும்ப அட்டை மூலம் அரிசி, கோதுமை முதலான பொருள்களை வழங்கி வருகிறது.
குடும்ப அட்டையா? இடும்பை அட்டையா?

மக்கள் அனைவரும் பகுத்துண்டு வாழ வேண்டுமென்ற எண்ணத்தில் மத்திய அரசு குடும்ப அட்டை மூலம் அரிசி, கோதுமை முதலான பொருள்களை வழங்கி வருகிறது. நோயுற்றோர், முதியோர், இயலாதவர்கள் வயிறார உண்டு வாழ வழி செய்கிறது. ஆனால், இன்று குடும்ப அட்டை பெறுவதற்கு மக்கள் படும் பாட்டை என்னவென்று சொல்வது?

குடும்ப அட்டை பெறுவதற்காக நாள்தோறும் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலைமோதும் மக்கள் படுகின்ற இன்னல்களுக்கு அளவே இல்லை. பலர் பல மாதங்களாகத் தவமாய்த் தவமிருந்து குடும்ப அட்டை பெற வேண்டிய நிலை. கூடுதல் வருமானம் உள்ளவர்கள், கட்சிக்காரர்கள் பல தந்திரங்கள் மூலம் காரியத்தைச் சாதித்துப் பெறுகிறார்கள். குடும்ப அட்டை பெறுவதற்கு எளிதான வழிமுறைகளை வகுக்க வேண்டும்.

குடும்ப அட்டை குடிமைப் பொருள் பெறுவதற்காக அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இன்றோ அரசின் பல்வேறு நலத் திட்டங்களைப் பெறுவதற்குரிய பதிவேடாக அது பயன்படுகிறது. ஏழை மக்களுக்கு வழங்கும் மிக்சி, கிரைண்டர் போன்றவற்றைப் பதியவும், விழாக் காலங்களில் வழங்கும் வேட்டி, சேலைகள் பற்றிக் கணக்கிடவும் பயன்படுகின்றது. புதிது புதிதாக அரசு வழங்கும் உதவிகளைப் பெறவும் குடும்ப அட்டை தேவை. ஆனால், அரசு வகுத்துள்ள கடுமையான சட்ட திட்டங்களால் பெரும்பாலோர் இவற்றைப் பெற முடியாமல் புலம்புகிறார்கள்.

2015 முதல் எரிவாயு உருளையை மானிய விலையில் பெற வேண்டுமானால் ஒவ்வொரு குடும்பமும் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டுமென்று புதிய அரசு வலியுறுத்துகிறது. அத்துடன் ஆதார் அட்டையும் கட்டாயம் பெற வேண்டுமென்று ஆணையிட்டுள்ளது. இரண்டும் இருந்தால்தான் மானிய விலையில் எரிவாயு உருளை கிடைக்குமென அரசு ஆணையிட்டது. அது மட்டுமா? எரிவாயு உருளைக்குரிய முழுத்தொகையையும் செலுத்த வேண்டும் என்றும் கூறியது.

அத்துடன் கட்டாயம் ஆதார் அட்டையைப் பெற்று அதை வங்கிக் கணக்கில் இணைக்க வேண்டும். குடும்ப அட்டை இருக்கும்போது ஆதார் அட்டை எதற்கு? அதைப் பெறவும் வட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டம். இப்படி சென்ற இரண்டு மாதங்களாக எரிவாயு உருளை பெறும் இடத்திலும் வட்டாட்சியர் அலுவலகத்திலும், வங்கிகளிலும், விண்ணப்பம் பெறும் இடங்களிலும், நகல் எடுக்கும் கடைகளிலும் திருவிழாக் கூட்டம்தான்.

இதற்காகப் புதிய படிவங்கள் வழங்கப்பட்டன. அவை ஆங்கிலத்தில் மட்டும் இருந்ததால் நிறைவு செய்ய படித்தவர்களைத் தேடிப் போக வேண்டியதாயிற்று. ஒரு ஒழுங்கு முறை இல்லை. மக்கள் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டனர். பலர் கீழே விழுந்து காயமடைந்தனர். இவ்வளவு அல்லல்பட்டு வாங்கும் ஆதார் அட்டையில் நிழற்படம் தெளிவாக இல்லை. நகல் எடுக்கும்போது கருப்பாகத் தெரிவதால் வங்கியில் ஏற்க மறுக்கிறார்கள். இவையெல்லாம் கற்பனையல்ல. நேரில் கண்டவை; அனுபவித்தவை.

ஆதார் அட்டையை முந்தைய மத்திய அரசு அறிமுகம் செய்தது. அப்போதே எதிர்ப்பு கிளம்பியது.

அதனால், அப்போதைய அரசு ஆதார் அட்டையை வலியுறுத்தவில்லை. ஏற்கெனவே ஆதார் அட்டைக்காக அரசு பல கோடி செலவழித்திருந்தது. மத்திய அரசில் செல்வாக்குப் பெற்ற ஒருவரிடம் ஒப்பந்தம் செய்திருந்தது. எனவே, அதனைத் தொடர புதிய அரசு தயங்கியது. பல குழப்பங்களுக்கிடையே மீண்டும் ஆதார் அட்டையை நடைமுறைக்குக் கொண்டு வந்தது.

அதற்காக அரசு ஒரு தந்திரத்தைக் கடைப்பிடித்தது. ஆதார் அட்டையுடன் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். அதை எரிவாயு வழங்கும் கடையில் காட்ட வேண்டும். மூன்று இடங்களிலும் பெயர் ஒன்று போல் இருக்க வேண்டும். இல்லையேல் எரிவாயு உருளை மானிய விலையில் கிடைக்காது. பெயர் மாற்றம் செய்வதில் பல குழப்பங்கள். "குமார்' என்பது "குமரன்' என்று இருந்தால் ஏற்க மறுப்பார்கள். நிழற்படங்கள் மூன்று இடங்களிலும் உள்ளன. அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தாலே போதாதா?

வங்கிக்கும், எரிவாயு உருளை வழங்குமிடத்திற்கும், வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் அலைந்து அலைந்து மக்கள் நொந்து போனார்கள். அலைச்சல் இன்னும் தீரவில்லை. அதிலும் குறிப்பாக, முதியோர் பட்டபாடு கொஞ்சமல்ல. அரசு அலுவலர்களுக்கும் அதிக வேலைப் பளு. அதனால் நுகர்வோரிடம் எரிந்து விழுந்தனர். நாள்தோறும் வேலைக்குச் செல்பவர்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு மூன்று இடங்களிலும் நெரிசலில் சிக்கித் தவித்தனர்.

அரசின் இந்த மாற்றத்தால் முறைகேடுகள் நீக்கப்படும் என்றனர் அலுவலர்கள். முறைகேடுகள் நீங்கும் என்பது சரி. அதற்காக மக்களைத் தெருத் தெருவாக அலைய வைப்பது கொடுமையிலும் கொடுமையல்லவா? குடிமைப் பொருள் வாங்குவோரைக் குறைக்க வேண்டுமென்பதே அரசின் நோக்கம் போலும்.

இதனைக் கருதியே புதுச்சேரி அரசு குடும்ப அட்டைதாரர்க்கு மானியம் இன்றி மாதம் ரூ.300 வழங்குவதென முடிவு செய்துள்ளது.

மக்கள் குடிமைப் பொருள்களை எளிதாகப் பெற்று வாழ்வது என்பது இன்று முடியாது. பல நாள் ஊதியத்தையும், மன நிம்மதியையும் இழந்து குடும்ப அட்டையைப் பெறுவது துன்பம் தரும் செயல். இவ்வளவு துன்பப்பட்டு வாங்குவது குடும்ப அட்டையா? இடும்பை (துன்பம்) அட்டையா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com