என்னவென்று சொல்வது?

என்னவென்று சொல்வது?

பணியிலிருந்து ஓய்வு பெறும் தொழிற்சங்கத் தலைவர்களைப் பாராட்டி, வழியனுப்புகிறோம் என்ற பெயரில் ஊழியர்களிடமிருந்து திரட்டப்பட்ட சங்கத்தின் பொது நிதியில் இருந்து லட்சக்கணக்கான ரூபாயைச் செலவழிக்கும் தொழிற்சங்கங்களின் தலையில் அண்மையில் ஒரு குட்டு வைத்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

பணியிலிருந்து ஓய்வு பெறும் தொழிற்சங்கத் தலைவர்களைப் பாராட்டி, வழியனுப்புகிறோம் என்ற பெயரில் ஊழியர்களிடமிருந்து திரட்டப்பட்ட சங்கத்தின் பொது நிதியில் இருந்து லட்சக்கணக்கான ரூபாயைச் செலவழிக்கும் தொழிற்சங்கங்களின் தலையில் அண்மையில் ஒரு குட்டு வைத்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

இது ஒரு வரவேற்கத்தக்க தீர்ப்பு எனச் சொல்லலாம். காலங்காலமாக சங்கத்திற்கு உழைத்த தலைவர்களைப் பாராட்டுவது தவறில்லை. ஆனால், அதற்காக மூன்று வருட இடைவெளியில் பணி நிறைவு அடையும் ஒவ்வொரு தொழிற்சங்கத் தலைவரையும் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் பிரம்மாண்ட விழா எடுத்து வழியனுப்பி வைப்பது என்பது முறையல்ல.

சங்கத்தின் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், சங்கத்திற்கு பல கோடி ரூபாய் கையிருப்பு இருப்பதாகவும், சங்கத்தின் கட்டடங்கள் வாடகைக்கு விடப்பட்டு அதில் கிடைக்கும் வருவாயே கணிசமான அளவில் தங்களிடம் இருப்பதாகவும் கூறிய தகவல் ஆச்சரியமாகவே உள்ளது.

தொழிற்சங்கங்களுக்கு எதற்கு கோடிக்கணக்கில் நிதி? தொழிற்சங்கம் நடத்துவதற்கு வங்கியே தனது கட்டடத்தில் அலுவலகம் ஒதுக்கித் தந்துள்ளது. ஊழியர்களிடம் வசூலித்த நிதியில் இருந்து கட்டடங்கள் கட்டி வாடகைக்கு விடுவதா தொழிற்சங்கங்களின் வேலை?

தொழிற்சங்கங்கள் தங்களின் அடிப்படையான பணிகளில் இருந்து விலகிச் செல்கின்றனவோ என்ற அச்சத்தை உருவாக்குகிறது. ஓர் ஊழியர் நிர்வாகத்தால் வஞ்சமாகப் பழிவாங்கப்பட்டால் அல்லது தேவையற்ற முறையில் பணியிட மாற்றல் செய்யப்பட்டால், வேலைநீக்கம் செய்யப்பட்டால் தொழிற்சங்கம் தலையிட்டு ஊழியரைப் பாதுகாப்பது முறை. கடந்த காலங்களில் நிர்வாகங்களினால் பழிவாங்கப்பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு தாற்காலிகமாக சங்கத்தின் மூலம் பண உதவி செய்யப்பட்டது. அதற்காக நிதி தேவைப்பட்டது.

ஆனால், தற்போது சூழல் எவ்வளவோ மாறிவிட்டது. பழிவாங்கப்பட்ட செயல் எதுவும் இல்லை. ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து, வேலை வாங்கும் நவீன உத்திகளை நிர்வாகம் கைக்கொண்டு விட்டது. "எப்படியாவது அளவுகோலை எட்டிவிடு. அதற்கு உண்டான வெகுமதியை வாங்கிக்கொள்' என்பது தான் தாரக மந்திரம். அதிக விவசாய நகைக் கடன்கள் கொடுத்தால், கொடுத்த அதிகாரிகளுக்கும், கிளை மேலாளர்களுக்கும் தங்க நாணயங்கள் பரிசளிக்கப்பட்டதும் உண்டு. தற்போது தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

எதிர்மறைப் போக்கை, நிர்வாகங்கள் தற்போது கடைப்பிடிப்பது இல்லை. பெரிய அளவில் ஊழியர்கள் - நிர்வாகம் மோதல் போக்குகள் என்பதெல்லாம் இல்லை. ஊழியர்களுக்கு முன்பைவிட பணிப்பளு கூடியிருக்கிறது என்பது என்னவோ உண்மை.

முன்பு போல, பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு பண உதவி செய்வது போன்ற நிலை தற்போதைய தொழிற்சங்கங்களுக்கு இல்லை. எனவே, கோடிக்கணக்கில் கையிருப்பு வைத்திருப்பதும் தேவையற்ற ஒன்று. அது நிர்வாகச் சீர்கேட்டிற்கே வழிவகுக்கும். ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது ஊழியர்களுக்கு கணிசமான தொகை, சிலருக்கு லட்சத்தில்கூட, நிலுவைத்தொகை வர வாய்ப்பு இருக்கிறது.

கையில் வாங்கும் தொகையில் மூன்று சதவீதத் தொகையை சங்கத்திற்குக் கொடுத்து விட வேண்டும். சரியாகச் சொல்வது எனில் சங்கத்திற்குக் கொடுக்க வேண்டிய லெவியான 3% பணத்தை பிடித்தம் செய்த பின்பு மீதியையே ஊழியர்கள் கணக்கில் வைப்பார்கள்.

சங்கத்திற்கு கோடிக்கணக்கில் ஏற்கெனவே பணம் கையிருப்பு இருக்கையில் ஊதிய ஒப்பந்தத்தின் மூலம், மேலும் லட்சக்கணக்கில் சேரவே வாய்ப்பு இருக்கிறது.

தற்போது இளம் தலைமுறை ஊழியர்கள் வங்கிகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். அவர்களுக்கு இந்த நடைமுறை, அதிர்ச்சியையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது என்பதே உண்மை.

இது ஊழியர்கள் மத்தியல் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தும். சங்கத்தைப் பகைத்துக் கொண்டால் எங்கேனும் மாற்றி விடுவார்கள் என்றும் நினைக்கின்றனர்.

இப்படிப்பட்ட அசாதாரண சூழலில் அண்மையில் வழங்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது.

தலைவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே. அதற்காக அவர்களுக்கு மோதிரங்களும், குளிர்பதனப்

பெட்டியும், மடிக் கணினியும் அன்பளிப்பாக அள்ளிக் கொடுத்து, அவர்களது தியாகங்கள் கொச்சைப்படுத்தப்பட வேண்டியதில்லை.

தொழிற்சங்கங்கள் தங்களது சங்கப் பணிகளை ஆற்றாமல், இப்படி கட்டடங்கள் கட்டி வாடகைக்கு விட வேண்டிய அவசியமும் இல்லை.

ஒரு பக்கம் நோக்கியா, பாக்ஸ்கான் மூடப்பட்டு, போராடி வரும் ஊழியர்கள் பணிப் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் இருக்கையில், இன்னொரு பக்கம் இதுபோன்றும் நிகழ்வுகள் நடைபெற்று வருவதை என்னவென்று சொல்வது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com