வருமுன் காப்போம்!

நாற்பது வயதை நெருங்கும்போது சர்க்கரை நோயும், ரத்த அழுத்த உயர்வும் ஏற்படுவது தெரிந்ததுதான்.
வருமுன் காப்போம்!

நாற்பது வயதை நெருங்கும்போது சர்க்கரை நோயும், ரத்த அழுத்த உயர்வும் ஏற்படுவது தெரிந்ததுதான். ஆனால், இந்த வயதில் கண்ணில் ஏற்படும் கண் நீர் அழுத்த உயர்வு குறித்து பலருக்குத் தெரியவில்லை. எப்படி, நம் உடலில் ரத்த அழுத்தம் ஒரு குறிப்பிட்ட அளவில் பராமரிக்கப்படுகிறதோ, அதேபோல நம் கண்ணிலும் ஓர் அழுத்தம் பராமரிக்கப்பட்டு வருகிறது. முன் கண் ரசம் பற்றி நாம் சிறு வயதில் படித்திருக்கிறோம். கண், கோள வடிவில் இருப்பதற்கும் கண்ணில் உள்ள அழுத்தத்திற்கும் இந்த முன் கண் ரசமே காரணம்.

முன் கண் ரசம் உற்பத்தியாவதில் ஏற்படும் பிரச்னை அல்லது அதன் சுழற்சிப் பாதையில் ஏற்படும் தடை காரணமாக, கண் நீர் அழுத்தம் உயரலாம். உடலில் 120 / 80 மி.மீ. பாதரச அழுத்த அளவுக்கு மேல் அழுத்தம் உயர்ந்தால் அது உயர் ரத்த அழுத்தம். இதேபோல் கண்ணில் அழுத்தம் சாதாரணமாக 10-லிருந்து 20 மி.மீ. பாதரச அழுத்தத்துக்குள் இருக்க வேண்டும். 20 மி.மீ. பாதரச அழுத்தத்தைவிட அதிகரித்தால் அது கண் நீர் அழுத்த உயர்வு (கிளாக்கோமா).

இந்நோய் பொதுவாக பெரியவர்களுக்கே ஏற்பட்டாலும் கணிசமான அளவில் குழந்தைகளையும் தாக்குகிறது. பலரும் இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கத் தவறி விடுகிறார்கள் என்பதுதான் வருத்தமான செய்தி. 80 விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் பாதிப்பு ஏற்பட்டு, பார்வை இழப்பு ஏற்பட்ட பிறகே மருத்துவமனைக்கு வருவதாக ஆய்வில் கண்டறிந்துள்ளார்கள்.

கண் நீர் அழுத்த உயர்வைப் பொருத்தவரை சாதாரணமாக எந்தவித அறிகுறியும் தெரியாது. இருந்தபோதிலும் தலைவலி, மின்சார விளக்கைச் சுற்றி வானவில் போன்ற ஒளிவட்டங்கள் தெரிவது, ஸ்டீராய்டு வகை மருந்துகளை எடுத்துக் கொண்டவர்கள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கிட்டப்பார்வை உள்ளவர்கள், வீட்டில் யாருக்கேனும் கண் நீர் அழுத்த உயர்வு இருப்பவர்கள், பக்கப் பார்வையில் தடுமாற்றம் இருப்பவர்கள் ஆகியோர் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கண்ணாடி அணிந்திருக்கும் ஒருவருக்கு குறுகிய காலத்தில், அடிக்கடி கண்ணாடி பவர் மாறினால் கண் நீர் அழுத்த அளவை சோதித்துப் பார்ப்பது நல்லது.

பொதுவாக, இந்நோய் நாற்பது வயதுக்கு மேல் ஏற்படுவதால் இந்த வயதுக்கு மேல், ஆண்டுக்கு ஒரு முறை, கண்ணில் பிரச்னை இருந்தாலும் இல்லாவிட்டாலும் கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அதுவும் முழுமையான கண் பரிசோதனை.

கண் மருத்துவமனைக்குச் சென்றால் டெஸ்ட், டெஸ்ட் என்று தேவையில்லாமல் ஒரு நாள் முழுவதையும் வீணடித்து விடுகிறார்கள் என்று சிலர் கண்ணாடிக் கடைக்குச் சென்று, கண்ணாடி பரிசோதனை மட்டும் செய்து கொண்டு கண்ணாடி போட்டுக் கொள்கிறார்கள். அதுவும், குறிப்பாக நாற்பது வயதில் வெள்ளெழுத்துப் பிரச்னை உள்ளவர்கள் இப்படிச் செய்கிறார்கள். இப்படிச் செய்வதால் கண் நீர் அழுத்தப் பரிசோதனை, விழித்திரை பரிசோதனை போன்ற முக்கியமான பரிசோதனைகளை செய்து கொள்ளும் வாய்ப்பினை இழக்க நேரிடும். ஒருவேளை கண் நீர் அழுத்த உயர்வு இருந்தால் அதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியாமல் போய்விடும். எனவே, மருத்துவமனைக்கு சென்று முழுமையான கண் பரிசோதனை செய்து கொள்வதே நல்லது.

கண் நீர் அழுத்த உயர்வு ஏற்படும் காரணத்தைப் பொருத்து கண் சொட்டு மருந்து, லேசர் மருத்துவம் அல்லது அறுவை மருத்துவம் செய்து அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. நம் கண்ணில் உள்ள பார்வை நரம்புகள்தான் நாம் பார்க்கும் காட்சியை மூளைக்கு எடுத்துச் செல்கின்றன.

கண் நீர் அழுத்த உயர்வில், இந்த பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டு நசிந்து போவதால் பார்வை பாதிக்கப்படுகிறது.

இந்தப் பார்வைப் பாதிப்பு, ஒரு நிரந்தர பார்வையிழப்பாகும் என்பதாலும், இழந்த பார்வையை வேறு எந்த மருத்துவத்தாலும் சரி செய்ய முடியாது என்பதாலும், ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதுதான் பார்வையைப் பாதுகாக்க ஒரே வழி.

அண்மைக் காலமாக கண் நீர் அழுத்த உயர்வினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிப்பதால், 40 வயதுக்கு மேல் கண் நீர் அழுத்த பரிசோதனையை அனைவரும் கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். சர்க்கரை, ரத்த அழுத்தம் சோதித்துப் பார்க்கும் பட்டியலில் இனி கண் நீர் அழுத்தத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். வருமுன் காப்பதுதானே நல்லது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com