பெற்றோர் போற்றுதும்!

நாம் ஒவ்வொருவரும் ஒரு கட்டத்தில் பெற்றோராகிறோம் என்றாலும், அந்த நேரத்தில் நம்மைப் பெற்றோரை நினைத்துப் பார்க்கும் போதுதான் அவர்கள் பட்ட கஷ்டம் நமக்குப் புரிகிறது.
பெற்றோர் போற்றுதும்!

நாம் ஒவ்வொருவரும் ஒரு கட்டத்தில் பெற்றோராகிறோம் என்றாலும், அந்த நேரத்தில் நம்மைப் பெற்றோரை நினைத்துப் பார்க்கும் போதுதான் அவர்கள் பட்ட கஷ்டம் நமக்குப் புரிகிறது. வாழ்க்கையில் வயது கூடக் கூட பாசமும் பயமும் பக்குவமும் அதிகரிக்கும் என்பது பொதுவான விதி. தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக தங்களுடைய நிகழ்காலத்தின் சுமைகளைத் தாங்கும் உறவுகள் தாய், தந்தையைத் தவிர வேறு உண்டா? வாழ்க்கையில் எத்தனையோ வளர்ச்சிகளைப் பிள்ளைகளுக்கு உரித்தாக்கி அவற்றைக் கண்ணாரக் கண்டு மகிழ்வோர் பெற்றோர் மட்டுமே.

அறிவியல் வளர்ச்சி மனிதனை ஆகாயம் வரை உயர்த்தி விட்டது. அந்த அபார வெளிச்சத்தில் உறவு, பந்தம், பாசம், நேசம் அன்பு எல்லாம் பொசுங்கிப் போய் விட்டன. மனித நேயம் கொஞ்சம் கொஞ்சமாக மரித்துப் போய் விட்டது. ஆனால், இன்றளவும் அதற்கு விதி விலக்காக இருப்பது பெற்றோர் - பிள்ளைகள் உறவு மட்டும்தானே. தாயும், தந்தையும் தன் பிள்ளைகள் மேல் வைத்திருக்கும் அன்பையும் பாசத்தையும் எந்த அறிவியலால் பிரிக்க முடியும்?

பிள்ளைகள் உதட்டில் புன்னகையைப் பார்த்தால் பரவசப்படுவதும், கண்களில் கலக்கத்தைக் கண்டால் ஓடி வந்து தாங்கிப் பிடிப்பதும் ஈன்றெடுத்த தாயும், பேணி வளர்த்த தந்தையும்தானே.

உணவு - உடை - பண்பாடு - கலாசாரம் எல்லாம் மாறிப் போனாலும், தலைமுறைகளைக் கடந்தும் மாறாதவை அன்னையின் அன்பும் தந்தையின் பாசமும்தான். அந்தத் தூய்மையான அன்பிலும் கலப்படமில்லாத பாசத்திலும் திளைத்த பிள்ளைகள், தங்கள் பெற்றோரைக் கொண்டாட வேண்டாமா? விழா எடுத்து மகிழ வேண்டாமா? பெற்றோரைக் கொண்டாடப் பிள்ளைகளுக்குக் காரணம் தேவையில்லை என்றாலும், சமூகம் சில காரணங்களைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறது. மணி விழா, முத்து விழா, வைர விழா, அறுபதாண்டு விழா, எண்பதாண்டு விழா என, ஏதாவது ஒரு பெயரில் விழா எடுக்கலாம். பெயர் முக்கியமல்ல; பெற்றோரைப் போற்றுவதே முக்கியம்.

அடுத்த பிறவியிலும் இவர்களுக்கே மகனாகவோ, மகளாகவோ பிறக்க வேண்டும் என்று மனமுருகி வேண்ட வேண்டும். பெற்றோரின் மறைவுக்குப் பிறகு அவர்களுக்கு நினைவு நாள் கடைப்பிடிப்பது இவற்றையெல்லாம் விட, பெற்றோர் வாழும் போதே அவர்களைப் போற்றிக் கொண்டாட வேண்டும். காரணம், பெற்றோரைப் போற்றிக் கொண்டாடுவோரே நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவராவர்.

நம்மில் எத்தனை பேர் நம்முடைய பிறந்த நாள், திருமண நாள் மற்றும் பண்டிகை நாள்களில் நமது பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றிருக்கிறோம்? கட்சித் தலைவர்கள், திரைப்பட நடிகர்களின் கால்களில் கூச்சப்படாமல் விழுபவர்கள் கூட, பெற்றோர் காலில் விழுவதற்குக் கூச்சப்படுகிறார்கள் அல்லது தயங்குகிறார்கள்.

ஒரு கையை நீட்டி எந்தப் பொருள்களும் கொடுக்கக் கூடாது. அந்தக் கையை மறு கையால் பிடித்துக் கொண்டே கொடுக்க வேண்டும். பெரியவர்கள் முன்பாக கால் மேல் கால் போட்டபடியோ, கால் ஆட்டியபடியோ உட்காரக் கூடாது. பிறந்த நாள், பண்டிகைக் காலங்களில் பெற்றோர் காலில் விழுந்து ஆசி வாங்க வேண்டும். கோயிலுக்குப் போகும் போதும் பெரியவர்களைப் பார்க்கப் போகும்போதும் வெறுங்கையுடன் போகக் கூடாது. இவற்றையெல்லாம் பின்பற்றிப் பார்த்தால்தான் அருமை புரியும். தமிழர் பண்பாடே இப்படி என்றால் தமிழர்கள் பெற்றோரைப் பராமரிக்கும் விதம் எப்படி இருக்க வேண்டும்.

இது போன்ற நல்ல விஷயங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி நம்மை வாழ்க்கையில் வழி நடத்த அனுபவம் மிக்க நமது பெற்றோரால் மட்டுமே முடியும். அப்படிப்பட்ட பெற்றோரைப் போற்றி வாழ்ந்தால் நம் வாழ்க்கை இனிதாக அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com