ராமகிருஷ்ண மூர்த்தி : கர்நாடக இசையுலக திராவிட்

கலிஃபோர்னியாவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவுடன் என்ன செய்வீர்கள்? கூகுள் அல்லது ஆப்பிள் நிறுவனத்தில் வேலை கிடைக்குமா என்று தேடுவீர்கள். மாறாக ராமகிருஷ்ண மூர்த்தி என்ற இந்த
ராமகிருஷ்ண மூர்த்தி : கர்நாடக இசையுலக திராவிட்

கலிஃபோர்னியாவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவுடன் என்ன செய்வீர்கள்? கூகுள் அல்லது ஆப்பிள் நிறுவனத்தில் வேலை கிடைக்குமா என்று தேடுவீர்கள். மாறாக ராமகிருஷ்ண மூர்த்தி என்ற இந்த இளைஞர் சங்கீத தேவதைகளின் அனுக்ரஹம் தேடினார். நெற்றியில் பளிச் என்ற திருநீறு, மரபு வழுவா உயர்தர பாடாந்தரம், உச்சரிப்பில் நேர்த்தி, முகபாவனையில், அசைவுகளில் , டெம்போ என சொல்லப்படும் லயத்தில் அப்படியே இசை மேதை பாலக்காடு கே விநாராயணசுவாமியை நினைவு படுத்துகிறார்.

மேல்நாட்டவர் ஒருவர் KVNஐச் சந்தித்து ”நீங்கள் முறைப்படி எனக்கு சங்கீதம் கூட கற்று தரவேண்டாம். தம்புரா மட்டும் பிடிக்க சொல்லி கொடுத்தால் போதும். அந்த ஆதார ஸ்ருதியுடன் லயிக்க வேண்டும்; அது ஒரு யோக நிலை; அது மட்டுமே தனக்கு போதுமானது” என்று கூறி அதை மட்டுமே அவரிடம் பயின்றார். அப்படிப்பட்ட ஒரு ஸ்ருதி சுத்தம் ஆர் கே மூர்த்தியிடம் இருக்கிறது.

கிறிஸ்துமஸ் தாத்தா கொடுத்தப் பரிசுப் பெட்டிகளை எல்லாம் பிரிப்பதனால்தானோ என்னவோ 26 டிசம்பரை பாக்ஸ்சிங் டே என்று குறிப்பிடுகிறார்கள். சரஸ்வதி கடாக்ஷத்துடன் ஆர் கே மூர்த்தி மியூசிக் அகாடெமியில் திறந்த பெட்டியில் முதலில் கிடைத்தது ‘பவனாத்மஜா ‘என்னும் நாட்டை ராக கீர்த்தனை. தீட்சிதர் அருளுடன் சிட்டை ஸ்வரங்களுடன் பிரமாதமாகக் களை கட்டியது. அடுத்து பேகட துவங்கியவுடன் தியாகராஜரின் ‘பக்துனிசரித்திர இருக்கலாமோ’ என்று ரசிகர்கள் யோசித்து கொண்டு இருக்கும்போது அதிகம் பாடப்படாத ‘லோகா வனசதுராவை’ எடுத்துக் கொண்டு உலகத்தைக் காக்கின்ற உத்தமனே ராமா என்னை காப்பாற்ற மாட்டாயா என்று கரைந்து கேட்டார் .சாகேத திப சரச குண அப்ரமேயா என நிரவலில் நெகிழ்ந்த போது ரசிகர்களும் த்சொ த்சொ என்று மனம் உருகினர்.

வைரமங்கலம் லக்ஷ்மிநாராயணன், செங்கல்பட்டு ரங்கநாதன் போன்ற இசை வல்லுனர்கள் மட்டுமல்ல, தலை சிறந்த வயலின் கலைஞர் டெல்லி சுந்தர்ராஜன் பட்டறையிலும் தீட்டப்பட்ட இந்த இளைஞர் மூர்த்திக்கு இன்னும் பெரும் கீர்த்தி காத்திருக்கிறது.

கே வி நாராயணசுவாமி பிரபலபடுத்திய சிந்தாமணி ராக  ‘தேவி ப்ரோவ சமயமிதே’. கருணா ரசம் மிக்க இந்த ராகம் மெதுவாக பாடினால் தான் அழகு. மிக நேர்த்தியாகக் கையாண்டு அரங்கத்தின் சிந்தனையை எங்கும் சிதறாமல் சிந்தா(மல்) மணி ஆக்கினார். பின்னர்  'தோலி நின்னே ஜெசி பூஜ’ என்று ரசிகர்களை நிமிரவைத்து விறுவிறுப்பைக் கூட்டினார்.

மிக கச்சிதமான தோடி ஆலாபனை தான் அன்றைய விசேஷ மற்றும் முதல் தர உருப்படி .நாபிக் கமலத்தில் இருந்து செதில் செதிலாக ‘எந்துகு தய ராதுவை’  கை தேர்ந்த ஒரு சிற்பி போல செதுக்கினார்.

‘கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து’ – உசேனி ராக திருப்பாவை, உசேன் போல்டை விட வேகமாக வந்தது. கிடைத்த இரண்டு மணி நேரத்தில் ராகம் தானம் பல்லவியும் பாட வேண்டுமே. நேர அவகாசம் இருக்குமோ என்ற ஆதங்கமோ அல்லது ”அப்படி என்னடி தூக்கம் என் கண்ணனின் நினைவு அல்லாது என்று ஆண்டாள்  கோபிகையை எழுப்புவதில் காட்டின வேகமோ தெரியவில்லை .

பூர்வி கல்யாணியில் நச் என்று ஒரு ஆர் டி பி. ’அபூர்வ பல தாயிணி கல்யாணி பாஹிமாம் பரம பாவனி’ என்று அம்பாளை பக்திசெறிவுடன் அழைத்தது அழகு.

நிறைவில் ‘செடியாய வல்வினை தீர்க்கும் திருமாலே’ என்ற குலசேகர ஆழ்வாரின் பாசுரத்தில் யமுனா கல்யாணி, நாதநாமக்ரிய, சிந்து பைரவி ராகங்களை மாலிகை ஆக்கினார்.

அனுசரணையாக வயலின் வாசித்த ராஜீவ் ஆகட்டும், அற்புதமான  சொல்கட்டு மற்றும் அமக்களமான குமுக்கிகளுடன் சொகசொகமான மிருதங்கத்தில் பரத்வாஜும் சரி,கடம் வாசித்த வாழபள்ளி கிருஷ்ணகுமாரும் பக்காவாக இணைந்து 'இதுவல்லவோ பக்கவாத்யம்' என்று இளைஞர் சக்தியை வெளிப்படுத்தியது அருமை மற்றும் பெருமை.

அன்றைய கச்சேரியில் 30 வயதுக்கு குறைவான நிறைய இளைஞர்களை  ஐ - பேடுடன்  ஸ்ரத்தையாக காண முடிந்தது. அரங்கம் நிரம்பி வழிந்தது. பிர்கா சங்கீதத்திற்கும், நன்கு விளம்பர படுத்தப்பட்ட கலைஞர்களுக்கும் கூட்டம் வருவதில்ஆச்சர்யம் இல்லை. ராமகிருஷ்ண மூர்த்தி போன்று மரபு வழி மாறாமல் உயர்ந்த மனோதர்மம் கூடிய கச்சேரிகளுக்கு மிகுந்த வரவேற்பு கிடைப்பது மகிழ்ச்சிக்கு உரியது. ஆரோக்யமானதும் கூட.  அதிரடி சேவாக் மற்றும் அலங்கார சச்சின் நடுவில் கவனிப்புடன் , இலக்கணம் மாறாமல், நேர்த்தியுடன் எந்த வித ஆடுகளத்திலும் பாரம்பரிய கிரிக்கெட் மரபை விட்டு வழுவாதவர் ராகுல் திராவிட். அது போன்று ராமகிருஷ்ண மூர்த்தி நம் பாரம்பரிய கர்நாடக இசையை மேலும் பெருமைக்குரியது ஆக்கிப் பேணி காப்பதில் ஒரு கர்நாடக இசையுலக திராவிட்டாக  வளரட்டும். வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com