இன்னும் தீரல...திருத்தணி தொகுதி போக்குவரத்து நெரிசலும் குடிநீர்ப் பிரச்னையும்...

திருத்தணி தொகுதியில் திருத்தணி நகராட்சி, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை பேரூராட்சிகள், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு

திருத்தணி தொகுதியில் திருத்தணி நகராட்சி, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை பேரூராட்சிகள், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய மூன்று ஒன்றியங்கள் அடங்கியுள்ளன. இதுதவிர, திருவாலங்காடு ஒன்றியத்தில் 7 ஊராட்சிகளும் அடங்கியுள்ளன.
 இத்தொகுதியில் நெசவாளர்கள், விவசாயிகள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். நெசவுப் பூங்கா அமைக்கப்படும், திருத்தணி நகராட்சியில் குடிநீர்ப் பிரச்னை முழுமையாகத் தீர்க்கப்படும். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க புறவழிச்சாலை அமைக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் அளித்துத்தான் வேட்பாளர்கள் ஓட்டு கேட்கின்றனர். ஆனால், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை.
 திருத்தணியில் உள்ள வட்டார தலைமை மருத்துவமனையில் போதிய படுக்கைகள் இல்லை. இன்று வரை மருத்துவமனையில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.
 புறவழிச்சாலை இல்லாததால், திருத்தணி நகரத்தில், போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க நந்தி, குசதஸ்லை ஆறுகளில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற தொகுதி மக்களின் பல்லாண்டுக் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.
 குடிநீர்ப் பற்றாக்குறை: திருத்தணி நகரில் 50,000-க்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நகரைச் சுற்றியுள்ள நூறுக்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் 20,000-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். கடந்த 40 ஆண்டுகளாக நகரில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவி வருகிறது.
 நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் அருங்குளம் குசஸ்தலை ஆற்றில் உள்ள 7 கிணறுகளும் வற்றிவிட்டன. மணல் திருட்டால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. திருப்பாற்கடலில் இருந்தும், அரக்கோணம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலமாக திருத்தணிக்குக் கொண்டு வரப்பட்ட குடிநீர் முழுமையாகக் கிடைக்கவில்லை. இதனால், வாரம் ஒருமுறை கூட குடிநீர் வழங்க முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.
 வாகன நெரிசல் தீருமா? அறுபடை வீடுகளில் ஒன்றான சுப்பிரமணிய சுவாமி கோயில் திருத்தணியில் உள்ளது. இங்கு வெளியூர்களில் இருந்து, தினசரி 60,000 வாகனங்கள் வந்து செல்கின்றன.
 போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். குறிப்பாக, விழா நாள்களில் அரக்கோணம் சாலை, ம.பொ.சி. சாலை, காந்தி சிலை ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
 இதைத் தவிர்க்க ரூ. 48 கோடி செலவில் புறவழிச் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதில் முதல் தவணையாக, நிலம் கையகப்படுத்த ரூ. 11.61 கோடியை மாநில அரசு ஒதுக்கீடு செய்தது. ஆனால் நிலம் கையகப்படுத்தும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
 சென்னைக்கு கூடுதல் ரயில்கள்: திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டை, கனகம்மாசத்திரம், பள்ளிப்பட்டு, சிவாடா, அருங்குளம், அதைச் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தினசரி 35,000 பேர் சென்று வருகின்றனர்.
 திருத்தணியில் இருந்து, அதிகாலை 5 மணி, காலை 5.40 மணி, காலை 6.20 மணி, காலை 7 மணி ஆகிய நேரங்களில்தான், சென்னை சென்ட்ரலுக்கு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இதிலும் காலை 7 மணிக்கு செல்லும் ரயில், திருப்பதியில் இருந்து வருவதால், திருத்தணி ரயில் நிலையம் வரும்போது, பெட்டிகளில் கால்வைப்பதற்கு கூட இடம் இருப்பதில்லை.
 விரிவுபடுத்தப்படாத பேருந்து நிலையம்: திருத்தணி நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் அண்ணா பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தினசரி 30,000 பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் பேருந்து நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.இதனை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை 30 ஆண்டுகளாக நிறைவேறாமல் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com