இன்னும் தீரல...கனவாகிப் போன பறக்கும் மேம்பாலம்  

ஆரம்ப காலத்தில் சிறிய பகுதியாக இருந்தது மதுரவாயல். கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், கோயம்பேடு காய், கனி, பூ மார்க்கெட்

மதுரவாயல் தொகுதி...
 ஆரம்ப காலத்தில் சிறிய பகுதியாக இருந்தது மதுரவாயல். கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், கோயம்பேடு காய், கனி, பூ மார்க்கெட் தொடங்கப்பட்டவுடன் சென்னையின் பிரதானப் பகுதியாக மதுரவாயல் முக்கியத்துவம் பெற்றது. ஆனால், அடிப்படை வசதிக் குறைபாடுகள் காரணமாக, இத்தொகுதியின் பல பகுதிகள் கிராமப்புறத்தை நினைவூட்டுகின்றன.
 வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு வரும் குடிநீர், காரம்பாக்கத்தில் சுத்திகரிக்கப்பட்டு சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த நீரில் ஒரு சொட்டும்கூட இப்பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்படுவதில்லை. இதனால் தொகுதி முழுவதும் குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
 இப்பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லை. சமீபத்தில் திறக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் தவிர, பிற அனைத்து அரசு அலுவல்களுக்கும் மக்கள் அம்பத்தூர் செல்ல வேண்டிய நிலை. சென்னை மாநகராட்சியால் அமைக்கப்படும் பிரதான சாலைகள் தவிர, மற்ற அனைத்துச் சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளன.
 கூவம் ஆற்றில் பெரும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு வணிக வளாகங்கள், கல்லூரிகள், நவீன பங்களாக்கள் கட்டப்பட்டுள்ளன. அதேசமயம் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் வாடகைக் கட்டடத்தில் இயங்குகின்றன.
 இப்பகுதி மக்களின் கனவுத் திட்டமான, மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் மேம்பாலம் தடைப்பட்டதால், போக்குவரத்து நெரிசலில் மதுரவாயல் சிக்கித் தவிக்கிறது. இதனால் சாலையை பொதுமக்கள் கடக்க முடியாமல் திண்டாடுகின்றனர்.
 இத்திட்டம் தடைப்பட ஆளும் கட்சி தான் காரணம் என்ற குற்றச்சாட்டு இருப்பதால், அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
 இத்தொகுதியில் அரசு கலைக் கல்லூரி இல்லாததால், சாமானிய மக்கள் தங்கள் குழந்தைகளை மேற்படிப்பு படிக்க வைக்க பல்லாயிரக் கணக்கில் செலவழிக்க வேண்டியுள்ளது.
 சென்னையின் பிரதான ஏரியாக ஒருகாலத்தில் விளங்கிய போரூர் ஏரி ஆக்கிரமிப்புகளால் கபளீகரமாகி பரப்பளவு சுருங்கி வருகிறது.
 குடிநீர்ப் பிரச்னை, தடைப்பட்ட மதுரவாயல்- துறைமுகம் மேம்பாலம் ஆகியவை மதுரவாயல் தொகுதி மக்களின் பிரதானக் கோரிக்கைகள். புதிதாகத் தேர்வு செய்யப்படும் எம்எல்ஏ இவற்றுக்குத் தீர்வு காண்பாரா என்று, மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com