திமுகவும், அதிமுகவும் தோல்வி பயத்தில் உள்ளன: ஜி.கே.வாசன் காரசார பேச்சு

தமிழகத்தில் புதிய அணி, புதிய ஆட்சி தேவை என மக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். இதனால் திமுகவும், அதிமுகவும் தோல்வி பயத்தில் உள்ளன என தமிழ் மாநில
திமுகவும், அதிமுகவும் தோல்வி பயத்தில் உள்ளன: ஜி.கே.வாசன் காரசார பேச்சு

சிதம்பரம் :  தமிழகத்தில் புதிய அணி, புதிய ஆட்சி தேவை என மக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். இதனால் திமுகவும், அதிமுகவும் தோல்வி பயத்தில் உள்ளன என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

சிதம்பரம் காந்திசிலை அருகே தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த கே.பாலகிருஷ்ணனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று பேசினார். அவர் பேசியது: 50 ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் மாறி ஆண்டு வந்தனர். இதற்கு யார் காரணம். பொதுமக்கள் கிடையாது. அரசியல்தலைபர்கள் தான் என எங்களையே நான் குற்றம் சாட்ட விரும்புகிறேன். காரணம் 50 ஆண்டுகால வரலாற்றிலேயே இவ்வளவு சிறப்பான மக்கள் வரவேற்கும் பிரபலமான கூட்டணி உருவானது கிடையாது. இதுதான் முதல் முறையாக உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கூட்டணி. திமுக, அதிமுகவின் ஊழல் சாம்பிராஜ்யத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கூட்டணியாக, 6 தலைவர்கள் கொண்ட மக்கள் நலக்கூட்டணி உருவாகியுள்ளது. 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஏற்படுத்தாத வளர்ச்சிகளை இந்த அணி ஏற்படுத்தும்.

நல்ல, நாணயமான வேட்பாளரான கே.பாலகிருஷ்ணனை அறிமுகம் செய்யும் போது நினைவுக்கு வருவது பெருந்தலைவர் காமராஜர்தான். காமராஜர் ஆட்சியில் கல்வி புரட்சி, விவசாய புரட்சி, சுகாதார புரட்டி என இந்தியாவின் முதல் நிலை மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது. குறைந்த வருவாயில் அதிக நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர் காமராஜர். அதற்கு காரணம் அவரது பொதுநலம், தொலைநோக்கு பார்வை. ஆனால் திராவிட ஆட்சிகளில் அதிக வருமானம், திட்டங்கள் மிக்குறைவு. அதற்கு காரணம் அவர்கள் பொதுநலத்தோடு செயல்படவில்லை. சுயநலத்தோடு செயல்பட்டனர் என்பதுதான் உண்மை நிலை.

இன்று மதுக்கடைகளை மூடுவோம் என அனைத்து கட்சிகளும் கூறுகின்றன. மதுக்கடைகளை அறிமுகப்படுத்திய வேதனையான சாதனை செய்தது திமுக, மதுக்கடைகளை பிரபலப்படுத்திய சாதனை செய்தது அதிமுக. காமராஜர் கிராமங்கள் தோறும் பள்ளிகளை திறந்தார். திராவிட ஆட்சிகளில் கிராமம் தோறும் மதுக்கடைகளை திறந்தார்கள் என பெண்கள் வேதனையுடன் கூறுகின்றனர். இதுதான் உண்மை நிலை. தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவோம் எனக்கூற பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அருகதை கிடையாது. காரணம் அவர்கள் ஆளும் பெரும்பானையான மாநிலங்களில் மதுக்கடைகளை திறந்துள்ளனர்.

அதிமுக, திமுக மீண்டும் மக்களை ஏமாற்ற தொடங்கி இருக்கின்றனர். மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று இலவசங்களை கொடுத்து ஏமாற்றி உங்கள் வரிப்பணத்தை கோடிக்கணக்கான சுருட்டியவர்கள் திமுகவும், அதிமுகவும். திமுகவும், அதிமுகவும் கருத்து கணிப்பு கொடுத்து குழப்ப ஆரம்பித்து உள்ளனர். அந்த கருத்து கணிப்பு என்பது கருத்து திணிப்பாகும். மே.16-ம் தேதி தேர்தலின் போது ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் வாக்களிக்கப்போவதுதான் உண்மையான கருத்து கணிப்பு. எனவே கருத்து கணிப்பை பார்த்து மக்கள் வாக்குகளை சிதற விடாதீர்கள் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com