ஒரு நாடு இன்னொரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுதல்

ஒரு நாடு இன்னொரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுதல்

தலையீடு(Intervention)
வரையறையும் பொருள் விளக்கமும்

    ஒவ்வொரு நாட்டிற்கும் தன் நாட்டு உள்விவகாரங்களை தானே நிர்வகித்துக் கொள்வதற்கான முழு உரிமை உண்டு. சில நேரங்களில் மற்ற நாடு அல்லது மற்ற நாடுகளின் கூட்டணியால் ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் குறுக்கீடு செய்யப்படலாம். அத்தகைய குறுக்கீடே தலையீடு எனப்படும்.
    தலையீடு என்பது, ஒரு நாட்டின் நடப்பு நிலைமைகளை மாற்றுவதற்கு அல்லது பராமரிப்பதற்காக அந்நாட்டின் விவகாரங்களில் மற்றொரு நாடு செய்யும் சர்வாதிகாரமான குறுக்கீடு  என ஒப்பன்ஹீய்ம் வரையறுக்கின்றார். அவர் மேலும், கொள்கை அளவில் சர்வதேசச் சட்டம் தலையீட்டை தடை செய்கிறது. தலையிடாமை அல்லது தலையீட்டின் மீதான தடை என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் இருக்கும் இறையாண்மை, ஆள்நில ஒற்றுமை, அரசியல் தற்சார்பு ஆகியவற்றுக்கான உரிமையின் இயற்கையான விளைவாகும் என்று கூறுகிறார்.
    சர்வதேசச் சட்டம் ஒரு நாட்டின் மீது மற்றொரு நாடு  மேற்கொள்ளும் தலையீட்டை தடை செய்கிறது. இருந்த போதிலும் ஒரு நாடு இராணுவ பலத்தின் மூலம் மற்றொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடும் போது அதற்கு எதிர்வினையாக அந்நாட்டில் தலையிடுவதை சர்வதேசச் சட்டம் அனுமதிக்கிறது. அத்தகைய தலையீடு, சட்டப்பூர்வமான தலையீடு ஆகும்.

ஐ.நா. பிரகடனத்தில் தலையிடாமைக் கோட்பாடு
(Principle of Non-Intervention under U.N Charter)

    ஐக்கிய நாடுகள் சபை பிரகடனத்தின் ஷரத்து 2(4) இன்படி, அனைத்து உறுப்பு நாடுகளும் தங்களது சர்வதேச உறவுகளில் எந்தவொரு நாட்டின் ஆள்நில ஒருமைப்பாடு அல்லது அரசியல் தற்சார்பிற்கு எதிராக அச்சுறுத்தலையோ ஆயுத பலத்தையோ பயன்படுத்தக் கூடாது. இத்தலையிடாமைக் கோட்பாடு, 1965 ஆம் ஆண்டின் ஐ.நா. பொதுச்சபைத் தீர்மானம் எண்.2131-இல் மறு உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளும் ஐ.நா.வின் தலையிடாமைக் கோட்பாட்டை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருந்தாலும் நடைமுறையில் அதைப் பின்பற்றுவதில்லை என்பதே உண்மை நிலவரமாகும்.

தலையீட்டின் வகைகள்( Kinds of Intervention)

தலையீட்டில் மூன்று வகைகள் உள்ளன. அவை, (i) உள்விவகாரங்களில் தலையீடு (ii) வெளி விவகாரங்களில் தலையீடு (iii) தண்டிக்கும் தலையீடு ஆகியனவாகும்.

(i) உள்விவகாரங்களில் தலையீடு (Internal Intervention) 
                              ஒரு நாட்டின் எல்லைக்குள் நடக்கும் உள்நாட்டுப் போர் அல்லது கிளர்ச்சியில் அந்த நாட்டின் சட்டப் பூர்வமான அரசாங்கத்தைப் பாதுகாக்கவோ கிளர்ச்சிக்காரர்களைப் பாதுகாக்கவோ மற்றொரு நாடு தலையிடுவது உள் விவிகாரங்களில தலையீடு ஆகும். 1936 இல் நடைபெற்ற ஸ்பெயினின் உள்நாட்டுப் போரில் பல நாடுகள் தலையிட்டதைக் கூறலாம். 1950 இல் தென்கொரியாவிற்கு ஆதரவாக அமெரிக்காவும், வடகொரியாவிற்கு ஆதரவாக சீனாவும் தலையிட்டதையும் கூறலாம்.

(ii) வெளி விவகாரங்களில் தலையீடு (External Intervention)
                ஒரு நாடு மற்றொரு நாட்டின் சர்வதேச அரசியல் உறவுகளில் தலையிடுவது வெளிவிவகாரங்களில் தலையீடு ஆகும். இது பல சமயங்களில் அந்நாட்டின் மீது போர் தொடுத்தலுக்குச் சமமானதாகும். இரண்டாம் உலகப் போரில், பிரிட்டனுக்கு எதிராக ஜெர்மனியுடன் இத்தாலி, சேர்ந்து கொண்டது, பிரிட்டனின் வெளிவிவகாரங்களில் இத்தாலியின் தலையீடு ஆகும்.

(iii) தண்டிக்கும் தலையீடு (Punitive Intervention)
    உடன்படிக்கையை மீறிய அல்லது தனக்குத் தீங்கிழைத்த நாட்டிற்கு தண்டனை வழங்கும் நோக்குடன் தலையிடுவது தண்டிக்கும தலையீடு ஆகும். உடன்படிக்கையை நிறைவேற்றவதற்காக அல்லது சில சர்வதேசச் சட்ட விதிகளை மீறியதற்காக ஒரு நாட்டின் மீது பொருளாதாரத் தடை (Economic Blockade) விதிப்பது தண்டிக்கும் தலையீட்டிற்கு உதாரணமாகும். 

சட்டப்படியான தலையீடும் சட்ட விரோதமான தலையீடும் (lawful Intervention and Unlawful Intervention)
    தலையீட்டிற்கான காரணங்களின் அடிப்படையில் தலையீடு சட்டப்படியான தலையீடு எனவும் சட்ட விரோதமான தலையீடு எனவும் இரு வகையாகப் பிரிக்கலாம்.

(i) தற்காப்பு (Self-defence)
    ஒரு மனிதன் தன்னைத் தற்காத்து கொள்வது போல் ஒரு நாடும் தன்னைத் தற்காத்துக் கொள்ள தகுந்த நடவடிக்கைகளை எடுக்கலாம். மற்றொரு நாட்டில் தலையிடுவதற்கு தற்காப்பு என்பது ஒரு செல்லத் தக்க காரணமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் பாதுகாப்பும் தேச ஒருமைப்பாடும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது எனில், அந்நாடு மற்றொரு நாட்டில் தலையிடலாம். ஆனால், அந்த அபாயம் உடனடியானதாக இருக்க வேண்டும். பின் எப்போதாவது தனக்கு ஆபத்து வரலாம் என்பதற்காக இப்போது தலையிடுவதைத் தற்காப்பிற்காக தலையிட்டதாகக் கூறமுடியாது.

    The Caroline (1814) வழக்கில், அப்போது பிரிட்டனின் காலனி நாடாக இருந்த கனடாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக புரட்சியாளர்கள் ஆயுதப் போரட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் கரோலின் எனும் கப்பலில் அமெரிக்க எல்லைக்குள் இருந்த நயாகரா ஆற்றின் வழியே கொண்டு வரப்பட்டன. இதைத் தடுக்குமாறு பிரிட்டன், அமெரிக்காவிடம் புகார் செய்தது. ஆனால், அமெரிக்கா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பிரிட்டனின் கப்பல் படையின் ஒரு படைப்பிரிவு, அமெரிக்க எல்லைக்குள் நுழைந்து கரோலின் கப்பலைக் கைப்பற்றி அதை நயாகரா ஆற்றின் போக்கிலேயே கட்டுப்பாடின்றி மிதந்து செல்லுமாறு விட்டுவிட்டது. இதற்கு அமெரிக்கா கடும் ஆட்சேபனை தெரிவித்தது. ஆனால் பிரிட்டன், தனது தற்காப்பிற்காக அமெரிக்காவின் செயலாளராக இருந்த வெம்ஸ்டர், தற்காப்பிற்காக தலையிட வேண்டுமெனில், அந்த அபாயம் உடனடியானதாகவும், மிகப் பெரியதாகவும் வேறு எந்த வழியும் இல்லை என்பதுடன் பேச்சு வார்த்தை மூலம் தீர்ப்பதற்கும் அவகாசம் இல்லை என்ற சூழ்நிலை நிலவியதாக பிரிட்டன் நிரூபிக்க வேண்டும் என்று கோரியது. பிரிட்டனால் அந்தக் காரணங்களை நிரூபிக்க முடியவில்லை. எனவே, அது அமெரிக்காவிடம் மன்னிப்புக் கோரியது.

    அதே போல், Corfu Channel Case (1949) என்ற வழக்கில் வடக்கு கர்பூ கால்வாய் அல்பேனியாவிற்கும் கிரீஸுக்கும் இடையே சென்றது. 1946 க்கு முன்னதாக அக்கால்வாயில் வைக்கப்பட்டிருந்த கன்னி வெடிகளை அகற்றி பிரிட்டன் அதன் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டது. அதன்பிறகு அக்கால்வாயில் சென்ற பிரிட்டிஷ் கப்பல் மீது அல்பேனிய எல்லையில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சில காலம் கழித்து அல்பேனியா எல்லைப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கன்னி வெடியில் சிக்கி பிரிட்டிஷ் கப்பல் சேதடைந்தது. சில வீரர்களும் இறந்து போயினர். எனவே பிரிட்டிஷ் கடற்படை அல்பேனிய அரசாங்கத்தின் அனுமதியின்றி அல்பேனிய எல்லைக்குள் நுழைந்து கன்னி வெடிகளையும் வெடிபொருட்களையும் அகற்றியது. அல்பேனியா அரசாங்கம், பிரிட்டனின் நடவடிக்கை அந்நாட்டின் இறையாண்மையில் தலையிடும் செயல் என்று ஆட்சேபனை தெரிவித்தது. வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம். தன் எல்லையில் ஆபத்து விளைவிக்கும் கன்னிவெடிகள் இருப்பது பற்றி பிரிட்டிஷ் கப்பலுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டிய பொறுப்பு அல்பேனியாவிற்கு உண்டு. எனவே பிரிட்டனுக்கு ஏற்பட்ட  இழப்பிற்கு அல்பேனியா இழப்பீடு வழங்க வேண்டும். அதே சமயத்தில் பிரிட்டனின் நடவடிக்கை அல்பேனியாவின் இறையாண்மையில் தலையீடு செய்த சட்ட விரோதமான நடவடிக்கை ஆகும் என்று முடிவு செய்தது. 

(ii)  கூட்டுத் தலையீடு (Collective Intervention)
                                             ஐ.நா. சாசனத்தின்  கீழ் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைக் கொடுக்கும் வகையிலான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தக் கூட்டுத் தலையீடு செய்யப்படலாம். சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலோ பாதிப்போ ஏற்படுமானால் அல்லது ஒரு நாட்டின் மீது ஆக்கிரமிப்பு நடத்தப்படுமானால் ஐ.நா.சாசனம் VII-வது அத்தியாயத்தின் கீழ்கூட்டு நடவடிக்கை எடுப்பதற்கு  ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பாதுகாப்பு சபை, இராணுவ வலிமையைப் பயன்படுத்தாமல் வேறு அமைதியான வழிமுறைகளில் பிரச்சனையை தீர்க்க முயல வேண்டும். அது போதுமான பலனைத் தராத போது பாதுகாப்பு சபை, உறுப்பு நாடுகளின் இராணுவங்களைக் கொண்ட கூட்டுப் படையை உருவாக்கி, தவறிழைத்த நாட்டின் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் ஐ.நா வின் பெயரில் தனிப்பட்ட நாடு  ஒன்று மற்றொரு நாட்டில் தலையிடுவதற்கு உரிமை கிடையாது. 

    ஐக்கிய நாடுகள், 1950 இல் கொரியாவிலும் 1961 இல் காங்கோவிலும் கூட்டுப்படையின் மூலம் கூட்டுத் தலையீடு செய்தது குறிப்பிடத்தக்கதாகும். 1991 இல் ஈராக்கிலும் 1955 இல் வியட்நாமிலும் 1970 இல் கம்போடியாவிலும் அமெரிக்காவின் இராணுவத் தலையீடுகள் ஐ.நாவின் கூட்டுத் தலையீடு அல்ல என்று விமர்சிக்கப்பட்டது.

சட்டவிரோதமான தலையீடு ( Unlawful Intervention)
                                 சர்வதேசச் சட்டத்தின் இன்றைய நிலைப்படி, ஒரு நாடு தனது தற்காப்பிற்காக மற்றொரு நாட்டில் தலையீடு செய்யலாம். அல்லது ஐ.நா தனது கூட்டுப்படையின் மூலம் தலையீடு செய்யலாம். இவ்விரண்டு சட்டப்பூர்வமான தலையீட்டைத் தவிர வேறு எவ்வகையிலும் ஒரு நாட்டில் தலையிடுவது சட்ட விரோதமான தலையீடே ஆகும். ஐ.நா.சாசனத்திற்கு முந்தய காலங்களில் நடைமுறையில் இருந்த தலையீட்டிற்கான காரணங்களை  பின்வருமாறு வரிசைப்படுத்தலாம். 

(i) உடன்படிக்கை உரிமைகளை நிறைவேற்றுவதற்கான தலையீடு (Intervention to enforce treaty)
                                  ஒரு நாட்டுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் விளைவாக அந்நாட்டில் தலையிடுவதற்கான உரிமையைப் பெற்ற நாடு, அந்த உரிமையை நிலைவேற்றும் வகையில் தலையீடு செய்வது கடந்த காலங்களில் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஐ.நா. சாசனம் அத்தகைய தலையீட்டை அனுமதிக்கவில்லை. 1987 இல் இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக இந்திய அமைதிப்படை (IPKF) இலங்கைக்குச் சென்றது. ஆனால் இலங்கை அரசு வெளியேறுமாறு கூறிய போது, வடக்கு -கிழக்கு மாகாணங்களில் தேர்தல் நடந்து அதிகாரம் ஒப்படைக்கப்படும் வரை இந்திய அமைதிப்படை வெளியேற மறுத்தது. அப்போது முதல் அது ஒப்பந்த உரிமைப்படி அல்லாமல் ஆக்கிரமிப்பு இராணுவமாகிவிட்டது என்று நீதியரசர் V.R. கிருஷ்ணய்யர் போன்றோர் குறிப்பிட்டனர். பின்னர் 1990 இல் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்து வெளியேறியது. 

(ii) சட்டவிரோதமான தலையீட்டைத் தடுப்பதற்கான தலையீடு (Intervention to prevent Illegal Intervewntion)
                                      ஒரு நாடு மற்றொரு நாட்டில் சட்ட விரோதமாக தலையிடும் போது அதைத் தடுப்பதற்காக இன்னொரு நாடு அதில் தலையிடுவது கடந்த காலங்களில் பல நாடுகளில் நடைபெற்றன. ஆனால் ஐ.நா. சாசனம் அத்தகைய தலையீட்டை அனுமதிக்கவில்லை. 

(iii) மனிதாபிமான அடிப்படையிலான தலையீடு (Intervention on humanitarian Grounds)
    மனிதாபிமான அடிப்படையில் ஒரு நாட்டில் தலையிடுவது கடந்த காலங்களில் அனுமதிக்கப்பட்டிருந்தது. இன்று மனித உரிமைகள் பாதுகாப்பு என்பது ஐ.நா.வின் அமைதிப் பணிகளில் ஒன்றாக ஆகிவிட்டது. எனவே மனிதாபிமான அடிப்படையில் ஒரு நாட்டில் தலையிடுவதை ஐ.நா.சாசனம் அனுமதிக்கவில்லை. ஆனால் ஒரு நாட்டின் அரசால் செய்யப்படும் மனித உரிமை மீறல்களால் சர்வதேச அமைதியும் பாதுகாப்பும் பாதிக்கப்படும் போது ஐ.நா. கூட்டுப்படையின் மூலம் தலையிடலாம்.

(iv) அதிகாரச் சமநிலையைப் பராமரிப்பதற்கான தலையீடு (Intervention to maintain balance of Power) 
    உலகில் அல்லது பிராந்தியத்தில் நிலவும் அதிகாரச் சமநிலையைப் பராமரிப்பதற்காக ஒரு நாட்டில் தலையிடுவது வல்லரசு நாடுகளுக்கு முன்பு வழக்கமாக இருந்தது. ஆனால் இன்று உலகின் அதிகாரச் சமநிலை ஐ.நா. வின் கூட்டுத் தலையீட்டின் மூலமே பராமரிக்கப்படுகிறது. இருப்பினும் வல்லரசு நாடுகள் தங்களது தனிப்பட்ட நலன்களுக்காக இராணுவ உதவி அல்லது இராணுவ ஒப்பந்தங்களின் மூலம் அதிகாரச் சமநிலையைப் பராமரிப்பதற்காக ஒரு நாட்டில் தலையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன என்பதே யதார்த்த நிலைமையாகும். 

(v) குடிமக்களையும் அவர்களது சொத்துக்களையும் காப்பதற்கான தலையீடு (Intervention to protect citizens and properties) 
                           ஒரு நாடு மற்றொரு நாட்டில் இருக்கும் தனது குடிமக்களையும் அவர்களது சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக அந்நாட்டில் தலையிடுவது முன்பு சர்வதேசச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஐ.நா. சாசனத்திற்குப் பின்பு அத்தகைய தலையீடு அனுமதிக்கப்படவில்லை. 1983 இல் அமெரிக்கா, கிரனடாவில் (Granada) உள்ள தன் நாட்டுக் குடிமக்களைப் பாதுகாப்பதற்காக கிரனடாவின் உள்விவரகாரங்களில் தலையிட்டது சட்ட விரோதம் என்று ஐ.நா. சபை கண்டித்தது குறிப்பிடத்தக்கதாகும். 

(vi) உள்நாட்டுப் போரில் தலையீடு (Intervention in Civil War)
                                    ஒரு நாட்டின் சட்டப்பூர்வ அரசாங்கத்திற்கும் அந்நாட்டின் குடிமக்களுக்கும் அதாவது புரட்சிப் படைக்கும் இடையில் நடக்கும் உள்நாட்டுப் போரில் மற்ற நாடுகள் தலையிடுவது இதற்கு முன் வழக்கமாக இருந்தது. 1917 இல் இரஷ்யாவில் புரட்சி நடந்த போது ஜார் அரசாங்கத்திற்கு ஆதரவாக பிரிட்டன். பிரான்ஸ் உள்ளிட்ட வல்லரசு நாடுகள் தலையிட்டது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால், இன்று அத்தகைய தலையீடு, ஐ.நா.சாசனத்தில் அனுமதிக்கப்படவில்லை. ஒரு நாட்டின் உள்நாட்டுப் போர் சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் பாதிப்பதாக இருந்தால், ஐ.நா. தனது பாதுகாப்பு சபையின் முடிவின்படி கூட்டுப்படையின் மூலம் தலையிடலாம். உதாரணமாக, 1961 இல் காங்கோவின் உள்நாட்டுப் போரில் தலையிட்டு ஐ.நா. அமைதியை நிலைநாட்டியதை  குறிப்பிடலாம். 

மன்றோ கோட்பாடு (Doctrine of Monroe)

                மன்றோ கோட்பாடு,  அதை உருவாக்கிய அமெரிக்க ஜனாதிபதி மன்றோவின் பெயரால் அழைக்கப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில்தான், ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் காலனிகளாக இருந்த அமெரிக்க கண்டத்தின் நாடுகள் விடுதலை பெற்று சுதந்திர நாடுகளாகியிருந்தன. ஆனால் ரஷ்யாவின் ஜார் அரசாங்கம், அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியான அலாஸ்காவை அப்போதும் தன் வசம் வைத்திருந்தது. அது 1823 இல் அமெரிக்காவின் வடமேற்கு கடற்பகுதியில் ரஷ்ய கப்பல்களைத் தவிர வேறு நாட்டுக் கப்பல்களுக்கு அனுமதி மறுத்தது. அப்போதுதான் ஸ்பெயின் உள்நாட்டுப் போரில் புரட்சியாளர்களை ஒடுக்கி ஸ்பெயின் நாடுகள், அமெரிக்கக் கண்டத்தில் தங்கள் காலனி ஆதிக்கத்தை ஸ்பெயின் மூலமாக மீண்டும் நிலைநாட்ட ஒரு இராணுவக் கூட்டணியை ஏற்படுத்தின.

    இந்நிலையில் அத்தகைய கூட்டு நடவடிக்கைக்கு எதிர் நடவடிக்கையாக அப்போதய அமெரிக்க ஜனாதிபதி மன்றோ இக்கோட்பாட்டை அறிவித்தார். இதன்படி, ஐரோப்பாக் கண்டத்தின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடாது. அது போல அமெரிக்க கண்டத்தின் உள்விவகாரங்களில் ஐரோப்பிய நாடுகள்  தலையிடக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது. மன்றோ கோட்பாடு முக்கியமாக மூன்று பகுதிகளைக் கொண்டிருந்தது. அவை: 

1. அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளை இனிமேல் எந்தவொரு நாடும் காலனியாக்கக் கூடாது.
2. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர்களில் அமெரிக்கா தலையிடாது.
3. அமெரிக்க கண்டத்தின் உள்விவகாரங்களில் ஐரோப்பிய நாடுகள் தலையிடக் கூடாது. அவ்வாறு தலையிடுமானால் அதற்கு எதிராக அமெரிக்கா தக்க பதில் நடவடிக்கை எடுக்கும்.

மன்றோ கோட்பாடு அரசியல் ரீதியிலான கோட்பாடாக இருந்தாலும் அது சர்வதேசச் சட்டத்தின்படியான சட்டக் கோட்பாடாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இக்கோட்பாட்டிற்குப் பிறகும் ஐரோப்பிய நாடுகள் லத்தீன் அமெரிக்க நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டுக் கொண்டு தான் இருந்தன. இக்கோட்பாடு லத்தீன் அமெரிக்க நாடுகளின் பாதுகாவலனாகத் தன்னைக் காட்டிக் கொண்டு அந்நாடுகளில் தனக்கு ஆதரவான அரசுகளை அமைக்க அமெரிக்காவுக்கு சில காலம் உதவியது எனலாம். 

இக்கோட்பாட்டின் படி 1898 இல் ஸ்பெயினிடமிருந்து கியூபாவை விடுவிக்க அமெரிக்கா ஸ்பெயின் மீது போர் தொடுத்தது. முடிவில் கியூபாவில் தனக்கு ஆதரவான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தியது. அந்த அரசாங்கத்திற்கு எதிராக 1959 இல் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் கியூபா மக்கள் புரட்சி செய்து மக்கள் அரசை ஏற்படுத்தினர். இருப்பினும் அமெரிக்கா எல்லாக் காலங்களிலும் இக்கோட்பாட்டைக் கடைபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1982 இல் பிரிட்டனின் காலனியாக இருந்த மால்வினாஸ் (Malvinas) தீவுகளை திரும்ப பெற அர்ஜெண்டினா போர் தொடுத்தது. பாக்லாந்து அமெரிக்கா உதவிய செயலானது மன்றோ கோட்பாட்டிற்கு எதிரானதாக சர்வதேச அரசியல் நோக்கர்களால் கருதப்பட்டது. 

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com