கூட்டுப்பாதுகாப்பு: பிராந்திய கூட்டுப் பாதுகாப்பும் - பிராந்திய ஒருமைப்பாடும்!

கூட்டுப்பாதுகாப்பு: பிராந்திய கூட்டுப் பாதுகாப்பும் - பிராந்திய ஒருமைப்பாடும்!

கூட்டுப்பாதுகாப்பு

கூட்டுப்பாதுகாப்பு என்ற எண்ணக் கரு சர்வதேச அரசியலில் “பேரம் பேசும் திறன்” என்பதற்குக் கிடைத்த முதல் வெற்றியாகும். ஒரு தேசம் அல்லது அரசு நீண்ட காலத்திற்குத் தனித்துச் செயற்படுவது அதனது பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தாது. பாதுகாப்பு என்பது ஒவ்வொரு அரசின் முதல் தேவையாக உள்ளது. பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த ஆயுதங்களைப் பயன்படுத்துதல், அதிகாரத்தினைத் தீர்மானிக்கக் கூடிய ஏனைய மூல வளங்களை உச்சப்படுத்துதல், அதிகாரச் சமனிலையினை எப்போதும் தனக்குச் சாதகமாக வைத்திருக்க முயற்சித்தல் போன்ற செயற்பாடுகளை அரசுகள் கையாளுகின்றன. ஆயினும், அரசுகள் பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்திக் கொள்ள கூட்டுப்பாதுகாப்பினைத் தமக்கிடையில் ஏற்படுத்தி தம்மை பாதுகாக்கவும் முயலுகின்றன.

லஸ்கி இதனை வலியுறுத்தவே “சம உரிமையுடன் தேசியவாதத்தினை வளர்ப்பது ஏற்ற பரிகாரமாக அமையும்” என்று கூறுகிறார். நடைமுறையில் இத்தத்துவத்தினை அரசுகள் ஏற்றுக்கொள்ளவே முயலுகின்றன. ஒன்றிற்கு மேற்பட்ட அரசுகள் ஒன்றாகச் சேர்ந்து பொதுவான சர்வதேச அமைப்புக்களை உருவாக்குகின்றன. இச்சர்வதேச அமைப்புக்களின் மூலம் யதார்த்தபூர்வமான உலக அரசாங்கத்தினை உருவாக்கிச் சர்வதேசப் பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்தச் சர்வதேச அரசுகள் முயலுகின்றன. கூட்டுப்பாதுகாப்பு, யதார்த்தபூர்வமான கூட்டுப்பாதுகாப்பு என்ற இரு வடிவங்களை அடையாளம் காண முடியும் எனவும் கூறப்படுகிறது. 

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம்

உலக சமாதானத்தினைப் பாதுகாப்பது, பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்துவது, அமைதியான சர்வதேச கூட்டுறவினை வளர்ப்பது என்பதற்காக இறைமை கொண்ட தேசிய அரசுகள் ஒன்றிணைந்து உருவாக்கிக்கொண்ட ஓர் அமைப்பே ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் ஆகும். இரண்டாம் உலகப் போரின் ஆக்கிரமிப்பாளர்களாகிய பாசிஸ்டுக்கள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் ஸ்தாபிக்கப்பட்டது. 1945 ஆம் ஆண்டு ஆனி மாதம் 26 ஆம் திகதி 51 தேசிய அரசுகள் கலந்து கொண்ட சான் பிரான்சிஸ்கோ மகாநாட்டில் ஐக்கிய நாடுகள் சாசனம் கையெழுத்திடப்பட்டது. ஆயினும் உத்தியோகப்பூர்வமாக 1945 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் நடைமுறைக்கு வந்திருந்தது. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் நோக்கத்தினையும், செயற்பாட்டுத் தத்துவத்தினையும், அதன் அங்கத்துவ நாடுகளின் செயற்பாட்டினையும், அமைப்பின் ஏனைய கிளைகளையும், அக்கிளைகளின் செயற்பாட்டினையும், அதிகாரத்தினையும், நிதி நிர்வாகம் போன்றவைகளையும் எடுத்துக் கூறுகின்றது. ஐக்கிய நாடுகள் தாபனத்தின் பிரதான கிளைகளாக, பொதுச்சபை, பாதுகாப்புச் சபை, தர்மகர்த்தா சபை, சர்வதேச நீதிமன்றம், செயலகம், சமூக, பொருளாதார சபை, என்பன காணப்படுகின்றன. இவற்றை விட சில விசேட துறைகளையும், துணை அமைப்புக்களையும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் கொண்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் நிரந்தர அங்கத்துவ நாடுகளாக ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டீஷ், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் உள்ளன. இந்நாடுகளுடன் தற்காலிக அங்கத்துவ நாடுகளாக பத்து நாடுகள் உள்ளன. இவைகளே பாதுகாப்பு சபையினை வழி நடத்தும் நாடுகளாகும். ஆயினும் ஐந்து நிரந்தர அங்கத்துவ நாடுகளுக்குச் சாசனத்தின் ஷரத்து 23 இன் படி வீடோ என்னும் நிராகரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஷரத்து 51 இன்படி கூட்டுப்பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்த சில ஒழுங்குகள் விசேஷமாகக் கூறப்பட்டுள்ளன. கூட்டுப்பாதுகாப்பு என்ற நிலையில் சர்வதேச அமைதியினையும், பாதுகாப்பையும் பேண உடனடி நடவடிக்கை எடுக்க பிரச்னையுடன் தொடர்புடைய அரசுகளுக்கு உரிமையுண்டு. ஐக்கிய நாடுகள் சாசனத்தின் படி அதன் நோக்கம் சர்வதேச பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தி அமைதியைப் பேணுவதாகும். கூட்டுப்பொறுப்புடன் இதனை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் சாதிக்க முயலுவதான் நோக்கம் அமைதி என்பது அச்சுறுத்தப்படுவதனால் அதனை எல்லோரும் இணைந்தே பாதுகாக்க வேண்டும். எல்லோரும் இணைந்து ஆக்கிரமிப்பினை அடக்குதல் அல்லது அமைதியின்மையினை ஏற்படுத்தக்கூடிய ஏனைய அம்சங்களைச் சிதறடித்தல், சர்வதேச முரண்பாடுகளை சமாதானத்திற்குக் கொண்டு வருதல் போன்றவைகளுக்காக உழைக்க வேண்டும். தேசங்களுக்கிடையில் நட்புறவுகளை ஏற்படுத்திச் சர்வதேச சமாதானத்தினைப் பலப்படுத்திக் கொள்ளக்கூடியளவிற்கு ஏனைய அம்சங்களையும் அபிவிருத்தி செய்தல் வேண்டும். சர்வதேச சமூகப் பொருளாதார, மானிடவியல் பிரச்னைகளுக்கான தீர்வினை அடைய வேண்டும். மனித உரிமைகளை கௌரவிக்கவும், வளர்க்கவும் வேண்டும். சமயம், மொழி, பால், வேறுபாடுகளின்றி எல்லோருடைய அடிப்படை உரிமைகளையும் கௌரவிக்கவும், வளர்க்கவும் வேண்டும். இவைகள் எல்லாம் கூட்டுப்பாதுகாப்புடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய மையச் செயற்பாடுகளாகும். கூட்டுப் பொறுப்பு என்பது கூட்டுப்பாதுகாப்பினை உத்தரவாதப் படுத்துவதாகும். எல்லா அரசுகளும் கூட்டுப் பொறுப்புடன் தீர்மானம் எடுக்கும் செயல்முறையில் பங்கு வகித்து அவற்றை நடைமுறைப்படுத்துதல் வேண்டும். 

தேசிய வளம், அரசுகளின் விஸ்தீரணம் என்பன கூட்டுப்பாதுகாப்பில் கவனத்தில் கொள்ளப்படக் கூடாது. பெரிய அரசுகளை விட சிறிய அரசுகளே கூட்டுப்பாதுகாப்புச் செயற்பாட்டில் அதிக நம்பிக்கை வைத்துள்ளன. வல்லரசுகள் ராணுவ, ராஜதந்திர, பொருளாதார ரீதியில் மிகவும் பலம் மிக்க நாடுகளாகும். வல்லரசுகள் தமது தேசிய நலனை உத்தரவாதப்படுத்திச் சர்வதேச ரீதியில் தமது தேசிய நலனை உத்தரவாதப்படுத்துகின்றன. பெரும்பாலான சிறிய அரசுகள் வல்லரசுகளின் அதிகாரப்பிடியிலிருந்து தம்மைவிடுவித்துக் கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினை நாடுகின்றன. இதனால் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் வல்லரசுகளுக்கும், சிறிய அரசுகளுக்கும் இடையில் சமமான பொறுப்புணர்வை வளர்க்கவும், பரஸ்பரம் ஒவ்வொரு அரசுகளும் ஒன்றை ஒன்று மதிக்கச் செய்யவும் தொடர்ந்து போராடுகின்றன. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அனுபவத்தின்படி ஐக்கிய அமெரிக்காவும், ரஷ்யாவும் இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலக அதிகாரத்தினை தம் வசப்படுத்திக் கொள்ளப் போராடி வந்திருக்கின்றன.
    

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தனது அங்கத்துவ நாடுகள் அனைத்தையும் சம இறைமைத் தத்துவத்தின் அடிப்படையில் வழிநடத்துகிறது. சர்வதேச முரண்பாடுகளைச் சமாதானமாகத் தீர்த்தல், படை பலத்தை உபயோகிக்காமை, ஏனைய அரசுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை போன்ற விஷயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எல்லா அரசுகளும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கு உதவி வழங்க வேண்டும். சர்வதேச பாதுகாப்பு, அமைதி என்பவற்றை உத்தரவாதப்படுத்தக் கூடியளவிற்கு ஐக்கிய நாடுகள் தாபனத்தின் செயற்பாடு உருவாக்கப்படுகிறது. சர்வதேச அரசியலில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் இரு முனைப் போராட்டத்தினை நடத்த வேண்டியுள்ளது. ஒன்று சமாதான விரும்பிகள், முற்போக்காளர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் முனை, மற்றயது ஏகாதிபத்தியவாதிகளின் முனை என்பவைகளாகும்.

பிராந்தியக் கூட்டுப் பாதுகாப்பும் பிராந்திய ஒருமைப்பாடும்


பொதுவாக பிராந்தியம் என்ற சொல் புவியியல் அமைப்புடன் தொடர்புடையதாகும். பிராந்தியத்தினை அடிப்படையாகக் கொண்டே பிராந்திய ஒப்பந்தங்கள் செயப்படுகின்றன. ஒரே புவிசார் பிரதேசங்களில் உள்ள அரசுகள் ஒன்றிணைந்து பிராந்தியக் கூட்டமைப்பில் சேர்ந்து கொள்கின்றன. உண்மையில் புவிசார் நிலை என்பதனை விட பெருமளவிற்கு அரசியல் நிலை என்பதே கூட்டுக்களைப் பெருமளவிற்குத் தீர்மானிக்கின்றன. இதனால் புவிசார்மையம் ரீதியில் பயன்படுத்தப்படுகிறது. இது பிராந்திய அரசுகளின் கூட்டில் ஏனைய அரசுகளையும் இணைத்துக்கொள்ள வாய்ப்பாகின்றது. கூட்டுச் சுயபாதுகாப்பு என்பது புவியியல் மையத்தின் தன்மையினைப் பொறுத்து ஏனைய பிராந்திய அரசுகளுடனும் ஐக்கியத்தினை ஏற்படுத்திவிடுகிறது. கூட்டுப் பாதுகாப்பினை உருவாக்குவதில் பின்வரும் இரு பண்புகள் பயன்பட்டு வந்திருந்தது. ஒன்று ஒரே வகையான அரசியல் சித்தாந்தம், மற்றது பொருளாதார நலனில் பரஸ்பரம் ஒருவரில் ஒருவர் தங்கியிருத்தல். இவை இரண்டு பண்புகளையும் அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய அமெரிக்காவுடனும், ரஷ்யாவுடனும் சர்வதேச அரசுகள் கூட்டுப்பாதுகாப்பினை ஏற்படுத்தியிருந்தன. ஐக்கிய அமெரிக்காவுடன் மேற்கு ஐரோப்பிய நாடுகளும், சில பொதுநல நாடுகளும், சில அரேபிய, ஆப்பிரிக்க நாடுகளும் பிராந்தியக் கூட்டுப் பாதுகாப்பினை ஏற்படுத்தியிருந்தன. 

பிராந்திய ஒருமைப்பாடு என்ற பதத்துக்கு மேற்கு ஐரோப்பாவிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களையும், அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு சர்வதேச அரசியலில் விளக்கம் அளிக்கப்படுகிறது. “ஒருமைப்பாடு” என்ற பதம் வெவ்வேறு தேசிய அரசுகளின் எல்லைகளுக்கு அப்பால் சென்று, அரசியல் ஐக்கியத்திற்கான தேவையினை வலியுறுத்தி நிற்கிறது. ஆயினும், 1960-களில் தான் பிராந்திய ஒருமைப்பாடு என்பது ஒரு கற்கை நெறியாகச் சர்வதேச அரசியலுக்குள் வளரத் தொடங்கியது.

ஒருமைப்பாடு என்ற பதத்தினைச் சட்ட ரீதியாகவும், நிறுவன ரீதியாகவும் நிலைநிறுத்த முடியும் என்ற சிந்தனை சமஸ்டி முறை பற்றி ஏற்கனவே நிலைத்திருந்த சிந்தனையூடாக உருவாகியிருந்தது. சமஸ்டி முறையாளர்கள் “ஒருமைப்பாடு” என்பது சர்வதேசச் சமூகத்தின் முன் நோக்கிய பாய்ச்சல் என்பதை விட “தூர இலக்கு” எனக் கூறுகிறார்கள். ஸ்விட்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளின் சமஸ்டி முறையில் இணைந்து கொண்ட சுதந்திரமான பிரதேசங்கள் இணைவுக்குப் பின்னர் தாம் ஏற்கனவே வைத்திருந்த இறைமையினைத் தொடர்ந்தும் எவ்வாறு பாதுகாத்துக் கொண்டனவோ அவ்வாறே உலக நாடுகளுக்கிடையிலான சமஸ்டி முறைமையில் ஒருமைப்பாடு ஏற்படுத்தப்படலாம். அதேநேரம், உலக அளவு, பிராந்திய அளவு, ஆகிய இரண்டையும் கருத்திலெடுத்தே உலக சமஸ்டி முறை பற்றி யோசிக்க முடியும் என்று கூறுகிறார்கள். ஆனால், நடைமுறையில் உலகத்தினை சமஸ்டி முறைக்குள் கொண்டு வருவது சாத்தியமற்றதும், கற்பனையானதுமாகவே இருந்தது.

கார்ல்டச்


ஒருமைப்பாடு தொடர்பாக  அணுகுமுறை ஒன்றினை கார்ல்டச் (Karl W Deusch) முன்வைக்கிறார். உள் குடியேற்றம், கல்விமான்கள் பரிமாற்றம், உல்லாசப் பிராயாணிகள், வர்த்தகம் போன்ற சர்வதேச விவகாரங்கள் மூலம் ஒருமைப்பாட்டுக்கான வழிவகைகளை உருவாக்க முடியும். சமூக, அரசியல் ஒருமைப்பாட்டுக்கு அல்லது பாதுகாப்பான சமுதாய உருவாக்கத்திற்கான ஒருமைப்பாட்டினை டூச் இரண்டாகப் பிரிக்கின்றார். முதலாவது ஒன்றிணைக்கப்பட்ட தன்மை கொண்டது. இரண்டாவது பன்மைத் தன்மை கொண்டதாகும்.

ஒன்றிணைக்கப்பட்ட சமுதாய பாதுகாப்பிற்குச் சிறந்த உதாரணமாக ஐக்கிய அமெரிக்காவைக் கூறலாம். இங்கு சமஸ்டி அரசாங்க முறையின் கீழ் பல அரசுகள் ஒன்று சேர்ந்து இயங்குகின்றன.

பன்மைத் தன்மை வாய்ந்த சமுதாயப் பாதுகாப்பில் மையப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரம் இருக்காது. ஆனால், தேசிய அரசியல் அதிகாரம் இருக்காது. தேசிய அரசியல் பிரதேசங்கள் தமக்கிடையில் உள் குடியேற்றம், கல்விமான்களின் பரிமாற்றம், உல்லாசப் பிரயாணிகள், வர்த்தகம் போன்ற தொடர் பாடல்களைத் தமக்குள் கொண்டிருக்கும். ஆனால், தமது எல்லைப் பிரதேசங்களைப் பலப்படுத் வேண்டும் என்றோ தமக்குள் ஒருவருடன் ஒருவர் சண்டையில் ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. பன்மைத் தன்மை வாய்ந்த சமுதாயப் பாதுகாப்பானது, இயற்கையாக உள்ள பாரிய நிலப்பரப்பை கொண்டதாகவும் இருக்கும். உதாரணமாக அமெரிக்கக் கண்டம், ஐரோப்பிய கண்டம் போன்றவற்றைக் கூறலாம். ஆனால், அரசியல் ஐக்கியத்திற்கான பாதை ஆயுதப்பலத்தினூடாக பெறப்பட்டிருப்பதை வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ள முடிகிறது. தேசிய, பிரதேச அல்லது சர்வதேச மட்டத்தில் அரசியல் நடிகர்களுடைய தோற்றம் சிக்கலானதும், அசாதாரணமானதாகவும் உள்ளது. இந்நிலையில் தொடர் அணுகுமுறையும், சமஸ்டி முறைமையும் ஒருமைப்பாடு பற்றிச் சிந்திக்க வைத்துள்ளது எனலாம்.

ஒருமைப்பாட்டு அணுகுமுறையினை அடிப்படையாகக் கொண்டு, பிராந்தியங்களை வரைவிலக்கணப்படுத்தும் போது பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. பொதுவாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பியா, ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்கள் தகுதியான நிலப்பரப்பினைக் கொண்டு பிராந்தியங்களாக வரை விலக்கணப்படுத்தப்படுகின்றன. துரதிருஷ்டவசமாகப் பிராந்தியம் ஒன்றை வரைவிலக்கணப்படுத்தும் போது அப்பிராந்திய மக்களுக்கு இருக்க வேண்டிய “பிராந்திய உணர்வு” இங்கு இல்லாமல் இருப்பது பெரும் சிக்கலாக உள்ளது. உதாரணமாக ஐரோப்பியக் கண்டத்தின் கிழக்குப் பகுதி அரசுகள் “சோஷியலிச அரசுகள்” என்று அழைக்கப்பட்டன. ஆப்பிரிக்க கண்டத்தின் வடக்குப்பகுதி (அரபு மொழி பேசும் இஸ்லாமிய சமய மக்கள் வாழும் பகுதி) மத்திய கிழக்குப் பிராந்தியம் என அழைக்கப்பட்டது. ஆயினும் பிராந்தியங்கள் பின்வரும் வகையில் ஒழுங்கமைக்கப்படுகின்றன.

புவியியல் தன்மை
    

கண்டங்கள், உப கண்டங்கள், தீவுக் கூட்டங்கள் போன்றவற்றின் புவியியல் வதிவிடங்களை அடிப்படையாகக் கொண்டு அரசுகளின் தொகுதி தீர்மானிக்கப்படுகின்றன. உதாரணமாக ஐரோப்பா, ஆசியா, போன்றவற்றைக் கூறலாம்.

ராணுவ, அரசியல் தன்மை
    

ராணுவக் கூட்டுக்கள், சித்தாந்தம், அரசியல் தன்மை போன்றவற்றின் அங்கத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய அரசுகளின் தொகுதி தீர்மானிக்கப்படுகிறது. உதாரணமாக கம்யூனிச முகாம் நாடுகள், முதலாளித்துவ முகாம் நாடுகள், மூன்றாம் மண்டல நாடுகள், நேட்டோ, வோர்சோ போன்றவற்றைக் கூறலாம்.

பொருளாதாரம்
    

தேர்வு செய்யப்பட்ட பொருளாதார உற்பத்தியில் முன்னணி வகிக்கும் தேசிய அரசுகளை உள்ளடக்கிய பிராந்தியம்.

சர்வதேச விவகாரங்கள்
    

உள்குடியேற்றம், உல்லாசப் பிரயாணம், வர்த்தகம் போன்ற மக்களின் பொருட்கள், சேவைகளின் பரிமாற்றத்தின் அளவினை அடிப்படையாகக் கொண்ட தேசிய அரசுகள் உள்ள தொகுதி, உதாரணமாக கிழக்கு ஐரோப்பிய சோவியத் யூனியனின் சந்தையாக இருந்தமையினைக் கூறலாம். இவற்றை விட மொழி, சமயம், கலாசாரம், மக்கள் தொகை, காலநிலை போன்ற விஷயங்களும் பிராந்தியங்களை உருவாக்குவதில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

பிராந்திய ஒழுங்கமைப்புப் பற்றிய சிந்தனை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரே அபிவிருத்தியடைந்திருந்தது. பிராந்திய ஒழுங்கமைப்புக்கள் பின்வரும் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன.

1. பிராந்திய பாதுகாப்பு ஒழுங்கமைப்புக்கள் - நேட்டோ, வோர்சோ
2. பொருளாதார பிராந்திய ஒழுங்கமைப்புகள் - ஐரோப்பிய சமூகம், பரஸ்பர பொருளாதார உதவிக்கான சங்கங்கள், லத்தீன் அமெரிக்க சுதந்திர வர்த்தக நிலையம்.
3. பல்நோக்குச் செயற்பாடு கொண்ட பிராந்திய ஒழுங்கமைப்புக்கள்.
4. கலாசார, ராணுவ, பொருளாதார, அரசியல் விஷயங்கள் முதன்மையாகக் கொண்டு இவைகள் உருவாக்கப்படுகின்றன - 
ஐக்கிய அமெரிக்க ஒழுங்கமைப்பு, அரபு லீக், பொதுநலவாயநாடுகள்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான கெடுபிடி யுத்த சூழ்நிலையும், உலக கூட்டுப்பாதுகாப்பிற்கான கனவில் சிதைவும் பிராந்தியப் பாதுகாப்பு ஒழுங்கமைப்பு அபிவிருத்தியடைந்து வந்தமைக்கு முதன்மையான காரணிகளாகும். ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யும் மனோபாவத்தின் வளர்ச்சியினால் 1940 மற்றும் 1950-களிலும் அநேக பிராந்தியப் பாதுகாப்பு ஒழுங்கமைப்புக்கள், உருவாக்கப்பட்டன. இதற்கு உதாணமாக நிறுவனமயப்படுத்தப்பட்டு 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நேட்டோ ஒழுங்கமைப்பையும், 1952 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வோர்சோ ஒழுங்கமைப்பையும், 1952 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அன்சஸ் (ANZUS) (ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஐக்கிய அமெரிக்கா) ஒழுங்கமைப்பையும், 1954 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சீட்ரோ ஒழுங்கமைப்பு கொள்ள முடியும். இவ்வமைப்புகள் அனைத்தும் நகரும் உலக அதிகாரம் என வர்ணிக்கப்படக் கூடியளவுக்கு தென்கிழக்காசியா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, போன்ற பிரதேசங்களில் ஐக்கிய அமெரிக்காவால் தனது பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டவை ஆகும். இவற்றை விட 1955 ஆம் ஆண்டு பிரிட்டீஷ் தலைமையில் உருவாக்கப்பட்டுப் பாக்தாத் என அழைக்கப்பட்டதுடன், 1959 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சென்டோ என அழைக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஐக்கிய அமெரிக்கா மறைமுகமாக இணைந்து கொண்டது. அதேபோல சோவியத் யூனியன் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டத்துக்கு அவசியமான பிராந்தியப் பாதுகாப்பினை வோர்சோ என்ற பெயரில் 1955 இல் நிறுவிக் கொண்டது.

உலகம் முழுவதையும் ராணுவக் கூட்டுக்குள்ளாக்கியது போன்று உருவாக்கப்பட்ட கூட்டுக்களைப் பிராந்தியப் பாதுகாப்புக்கான ஒழுங்கமைப்புக்கள் என வேறுபட்ட பரிமாணங்களில் வகைப்படுத்திக் கூறுவது உண்மைக்குப் புறம்பானதாகும். உதாரணமாக இப்போது இருக்கும் சீட்ரோ அமைப்பில் பங்கேற்றிருந்த தேசிய அரசுகளின் தலைநகரங்களுக்கு இடையிலாகக் கூடுதலாக 11,500 மைல்கள் இடைவெளி காணப்பட்டிருந்தன. அதேபோல நேட்டோ அமைப்பில் பங்கேற்றிருந்த தேசிய அரசுகளின் தலைநகரங்களுக்கிடையே ஆகக்கூடுதலாக 5,500 மைல் இடைவெளி காணப்பட்டிருந்தன. அமெரிக்க அரசுகளின் ஒழுங்கமைப்பில் பங்கேற்றிருந்த அரசுகளுக்கிடையே ஆகக்கூடுதலாக 5,300 மைல்கள் இடைவெளி காணப்பட்டிருந்தன. வோர்சோ அமைப்பில் பங்கேற்றிருந்த தேசிய அரசுகளின் தலைநகரங்களுக்கிடையே ஆகக் கூடுதலாக 3,900 மைல்கள் இடைவெளி காணப்பட்டிருந்தன. ஈரானியப் புரட்சியைத் தொடர்ந்து 1979ஆம் ஆண்டில் செயலிழந்த சென்ரோ அமைப்பில் பங்கேற்றிருந்த தேசிய அரசுகளின் தலைநகரங்களுக்கிடையே ஆகக்கூடுதலாக 3,700 மைல்கள் இடைவெளி காணப்பட்டிருந்தன. பூமியின் மொத்த சுற்றளவு ஏறக்குறைய 25,000 மைல்களாகும். இதில் சீட்ரோ என்ற பிராந்திய ஒழுங்கமைப்பு ஏறக்குறைய அரைப்பங்கினைத் தனக்குள் எடுத்திருந்தது. எவ்வாறாயினும் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் சோவியத் யூனியனின் ராணுவப் பாதுகாப்பினை ஏற்றுக் கொண்டு அவற்றைத் தேடிச் செல்கிற சிறிய தேசிய அரசுகளினதும், தந்திரோபாய நிலையில் பக்கம் சாராத தேசிய அரசுகளினதும் விருப்பத்துடன் இரு துருவ அதிகாரங்களையும், சித்தாந்தங்களையும் பிரதிபலிக்கின்ற நிறுவனமயப்படுத்தப்பட்ட பாதுகாப்பு கூட்டுக்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

பிராந்திய பாதுகாப்பு ஒழுங்கமைப்புக்கள் வல்லரசுகளுக்கு இடையிலான பதட்டத்தினை அல்லது கெடுபிடியை ஒவ்வொரு நிமிடமும் உறுதியாக்கக் கூடிய நிறுனங்களாகவே காணப்பட்டிருந்தன. ஆனாலும் இப்பிராந்திய ஒழுங்கமைப்புக்கள் பரஸ்பர தந்திரோபாய அந்தஸ்தினைப் பேணிக்கொள்வது, வல்லரசுகளுக்கு இடையிலான நேரடி யுத்தத்தினை தவிர்ப்பது போன்ற தமது முதன்மையான நோக்கங்களை அடைந்திருந்தமையினை மறுக்க முடியாது. எடுத்துக்காட்டுக்களாக உலக யுத்தத்துக்குப் பின்னர் கிழக்கு, மேற்கு ஐரோப்பாவைப் பின்னணியாகக்  கொண்ட கொரியா, வியட்நாம், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்ட முரண்பாடுகள். மூன்றாம் மண்டல நாடுகளில் ஏற்பட்ட அரபு-இஸ்ரேல், இந்திய-பாகிஸ்தான், இந்திய-சீன முரண்பாடுகள் ஆகியன தந்திரோபாய செயற்பாடுகளாலும், அணுகுண்டின் அச்சுறுத்தலாலும் பெரும் யுத்தங்களாக மாறாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன. அதேபோல காலனித்துவத்திற்கு எதிரான யுத்தம் அல்லது தேசிய விடுதலைப் போராட்டம், உள்நாட்டு யுத்தம், ராணுவப் புரட்சி போன்ற முரண்பாடுகள் தந்திரோபாயச் செயற்பாடுகளால், சிறப்பாக கையாளப்பட்டிருந்தன. ஆயினும், பிராந்தியப் பாதுகாப்பு ஒழுங்கமைப்புக்கள் தம் அங்கத்துவ நாடுகளுக்கு இடையில் ஏற்படும் முரண்பாடுகளால் பாரிய பிரச்னைகளை எதிர் நோக்கியிருந்தன. குறிப்பாக அமெரிக்க அரசுகளின் ஒழுங்கமைப்புக்களில் அங்கத்துவம் வகிக்கும் எல்சல்வடோர், கொண்டுராஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளும், நேட்டோவில் அங்கம் வகிக்கும் கிரேக்கம், துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளும் பிராந்தியப் பாதுகாப்பு ஒழுங்கமைப்புக்குப் பாரிய பிரச்னைகளை ஏற்படுத்தியிருந்தன.

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கிறஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com