மாக்கியவெல்லி அரசியல் சிந்தனைகள்-2: கலப்பு முடியரசுகளும் அதன் அரசியலும்

மாக்கியவெல்லி அரசியல் சிந்தனைகள்-2: கலப்பு முடியரசுகளும் அதன் அரசியலும்

கலப்பு முடியரசுகள் (Mixed State)
    

புதிய ராஜாங்கங்களை நிர்வகிப்பதில் தான் உண்மையான கஷ்டம் இருக்கிறது. அது முற்றிலும் நவீனமாயில்லாமல் கலப்பு ராஜ்யத்தின் அங்கமாக இருந்தாலோ ஒழுங்கீனமும் குழப்பமும் மேலிட்டு விடுகின்றன. இவை புது ராஜ்யங்களை ஆளுவதில் உள்ள இயற்கையான கஷ்டங்கள். ஏனெனில் தங்களுடைய நிலைமை மேம்படும் என்ற எண்ணமுடையவர்களாய் ஜனங்கள் தாமாகவே மன்னர்களை மாற்றத் துணிந்து அவர்களுக்கு விரோதமாய் கிளம்புகிறார்கள். ஆனால் பின்னிட்டு அவர்களுக்குப் பெரும் ஏமாற்றமே கிடைக்கிறது. நாளடைவில் தங்கள் ஸ்திதி மோசத்திலிருந்து படுமோசமாகிவிட்டதை உணர்கிறார்கள்.  இதற்கும் இயற்கையான காரணம் உண்டு.  புதிய ராஜா தங்கள் ராஜ்யத்தைப் பிடிக்கும் போது அவனுடைய போர்வீரர்கள் மூலமாயும் இன்னும் பலவிதமாயும் மக்கள் துன்புறுத்தப்படுவதால் அவர்கள் புதிய ராஜாவை எதிர்க்கிறார்கள். இது ஒரு தடுக்க முடியாத கஷ்டம்.
    

இவ்விதமான அந்த ராஜ்யத்தைக் கைப்பற்றுகையில் பாதிக்கப்பட்ட மக்களால் அரசன் துவேஷிக்கப்படுகிறான். வெற்றிக்கு உதவி புரிந்தவர்களுடைய சிநேகத்தையும் நீடிக்கச் செய்வதரிது,  ஏனெனில் அவர்களுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்வது முடியாத காரியம். அவர்கள் விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பதும் கஷ்டம். ஏனென்றால் அவர்கள் உதவி செய்தவர்களாக இருக்கிறார்கள். என்னதான் சேனாபலம் இருந்தாலும் ஒரு தேசத்தில் அதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கு உள்நாட்டு மக்களுடைய ஆதரவு அவசியம் வேண்டும். அந்த ஆதரவில்லாததால்தான் பிரான்ஸ் மன்னர் பன்னிரண்டாவது லூயி (Loius-XII) மிலனைச் சுலபமாய் ஜயித்தும் உடனே இழக்கும்படியாயிற்று. முதல் தடவை லுடோவிகோ (Ludovico) வின் படைகள் மட்டுமே பிரஞ்சு மன்னனைத் தோற்கடிக்கப் போதுமானவையாயிருந்தன.  ஏனெனில் முதலில் மனப்பூர்வமாக லூயி அரசனுக்குத் தங்கள் கதவுகளைத் திறந்து விட்ட மிலன் வாசிகள், தாங்கள் எதிர்பாத்த நன்மைகள் கிடைக்காமல் தங்கள் ஆடைகளெல்லாம் வீணாகிவிடவே அவனுடைய உபத்திரவத்தைச் சகிக்க முடியாமல் அவனை வெறுத்தனர். லூயிக்கு இவ்வாறு ஜனங்களுடைய சகாயம் கிடைக்காமல் போயிற்று.
    

கலகம் மூண்ட பிரதேசங்களைத் திரும்பப் பிடித்தால் ஒரு அரசன் அதை மீண்டும் எளிதில் கைநழுவவிடமாட்டான்.  கலகம் விளைந்ததின் மூலம் அவன் விழிப்படைந்து விடுகிறபடியால் கலகக்காரர்களைக் கண்டுபிடித்து அவர்களைத் தாட்சண்யமின்றித் தண்டிப்பதுமில்லாமல் தனக்கு எங்கெங்கே பலக்குறை வென்று பார்த்து அவ்விடங்களை யெல்லாம் பலப்படுத்திக் கொண்டுவிடுகிறான்.  ஆகையால்  முதல் முறை லுடோவிக் எல்லைப் புறத்தில் கால் வைத்ததே பிரான்ஸ் மறுமுறை மிலனைப் பிடித்தபின் உலக முழுவதும் எதிர்த்து நின்று பிரஞ்சு சைனியத்தை இத்தாலியை விட்டுத் துரத்திய பின்னரே பிரான்ஸ் மிலன் மீதுள்ள தன் பிடியை விட்டது. முன்கூறிய விஷயங்களே இதற்குக் காரணமாயிருந்தன. ஆனால் இரண்டு தடவைகளும் பிரான்ஸ் தோற்றுதென்னவோ தோற்றதுதான்.  முதல் தரத்து அபஜயத்தின் காரணங்களை சொல்லியாயிற்று. இரண்டாம் முறையும் தோல்வியடைந்ததன் காரணங்கள் எவை, அந்தோல்வியை எப்படித் தடுத்திருக்கலாம், பிரான்ஸ் மன்னன் ஸ்தானத்தில் இன்னொருவன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பான் என்று பார்க்கலாம். ஒரு தேசத்துடன் இணைக்கப்பட்ட மற்ற நாடுகள் அதே ஜாதியினரைக் கொண்டவையாகவோ அதே பாஷை வழங்கப் பெறுபவையாகவோ இருப்பது சந்தேகம் என்பதைக் கவனிக்க வேண்டும்.  ஒரே ஜாதி பாஷையைச் சேர்ந்த குடிகளாயின். அதிலும் சுயேச்சையை அறியாதவர்களாயின் அவர்களை ஆள்வது சுலபம்.  அவர்களைப் பத்திரத்துடன் ஆள்வதற்கு ஏற்கனவே அந்நாடுகளில் அரசாண்டு வந்த ராஜகுடும்பத்தினரை அழித்துவிட்டால் போதும், மற்றபடி தங்கள் பழைய நிலையைக்குக் கேடில்லாமலிருப்பதாலும், அரசனிடம் அடங்கி அமைதியாக வாழத் தொடங்கி விடுகிறார்கள், இதற்கு உதாரணம் இவ்வளவு காலமாகப் பிரான்ஸூடன் இணங்கி வாழும் பர்கண்டி (Burgundy) பிரிட்டனி (Brittany) காஸ்கனி (Gasconi) நார்மண்டி (Normandy) முதலிய மாகாணங்கள்  இருக்கினறன.  பாஷையில் சிறு வேற்றுமை இருந்தாலும் பழக்க வழக்கங்கள் ஒரே மாதிரியானவையாய் இருப்பதால் அவர்கள் ஒத்துப் போக முடிகிறது.  அம்மாதிரியான பிரதேசங்களை வென்று அவற்றை ஆளவிரும்புவோர் இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஒன்று, பழைய ராஜபரம்பரையின பூண்டையே வைக்கக் கூடாது.  

இரண்டாவது, ஏற்கனவே ராஜ்யத்தில் வழங்கும் சட்டங்களையும் வரி விதிகளையும் மாற்றக்கூடாது.  இவ்வாறு நடந்தால் அந்நாடுகள் சீக்கரத்திலே ஒத்துப் போய்ப் பழைய ராஜ்யத்துடன் ஒன்றாகவே ஆகிவிடும்.
    

ஆனால், பாஷை, சட்டம், ஆசார அனுஷ்டானங்கள், முதலியவற்றில் வேறுபட்ட சமஸ்தானங்களாயிந்தால் அதில் எதிர்க்கவேண்டிக்கும் சங்கடங்கள் மிகப் பெரியவையாகும். அவற்றை ஸ்தாபித்துக் கொள்வதற்கு அதிர்ஷ்டம் மாத்திரமின்றி அரிய உழைப்பும் தேவையாக இருக்கிறது. அதற்கு புதிய மன்னன் அந்த சமஸ்தானத்திலேயே வசிப்பது சிறந்ததும் நிச்சயமானதுமான ஒரு வழி. இதனால் அவனுடைய அதிகாரம் பத்திரமாயும் நிலையாகவும் இருக்கும். கிரீஸில் துருக்கிய மன்னன் (Grand Turk) அப்படித்தான் செய்தான். என்னதான் ஜாக்கிரதையாக மற்ற சானங்களைக் கொண்டு பாதுகாத்தாலும் துருக்கிய அரசன் கிரீஸில் போய்க் குடியேறியிராவிட்டால் அந்நாட்டில் அவன் தன் உரிமையைக் காப்பற்றிக் கொணடிருக்கவியலாது. அருகில்  இருந்தால் உள் நாட்டில் நடக்கும் ஒழுங்கீனங்களை உடனுக்குடன் அறிந்து அவற்றை அகற்ற முடியும்.  தூரத்தில் வசித்தால், கலவரங்களைப் பற்றிய செய்தி அரசன் காதில் விழும்முன் நிலைமை கேவலமாகிவிடும். அதுவுமின்றி அரசன் சமீபத்தில் இருந்தால் அவனுடைய உத்தியோகஸ்தர்கள் ராஜ்யத்தைக் கொள்ளையடிக்க அஞ்சுவார்கள்.  தங்கள் அரசனுடன் நேருக்கு நேர் விவகாரம் நடத்த முடிவதால் ஜனங்களுக்கும் திருப்தி. ராஜபக்தி உண்டாவதற்கும் வழி உண்டு, ராஜபக்தி இல்லாதவர்கள் பயப்படுவதற்கும் வழியுண்டு. அரசன் அங்கேயே இருப்பதால் அயலரசர்களும் அந்நாட்டை அணுகத் தயங்குவார்கள். அரசன் அங்கு வசிக்கும் வரையில் அவன் கையிலிருந்து அந்த ராஜ்யத்தைப் பிடுங்குவது கடினம்.  
    

இதைவிடச் சிறந்த மற்றொரு வழியென்னவென்றால் அந்த சமஸ்தானத்தின் முக்கியமான இடங்கள் இரண்டொன்றில் அரசன் தன் சொந்த ஜனங்களைக் குடியேறச் செய்வதுதான்.  இப்படியாவது செய்ய வேண்டும்.  இல்லாவிட்டால் பெரிய பட்டாளங்களையாவது கொண்டு போய் வைக்க வேண்டும்.  

குடியேற்றத்தால் அரசனுக்குப் பணச்செலவு கிடையாது. தன் கைச் செலவின்றியே மக்களைக்குடியேற்றி ஆதரிக்கக்கூடும். யாருடைய நிலங்களையும், வீடு வாசல்களையும் வாங்கிக் குடியேறுகிறவர்களுக்குக் கொடுக்கிறானோ,  அவர்களை மட்டுந்தான் குடியேற்ற ஏற்பாடு பாதிக்கும்.  

அவர்களுடைய தொகை சொற்பமே. கஷ்ட நஷ்டங்களை அடைந்தவர்கள் ஏழைகளாய், இங்கொருவர் அங்கொருவராக இருப்பதால், அவர்களால் அரசனுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. மற்றவர்கள் பாதிக்கப்படாதவர்களாகையால், அவர்களைச் சமாதானப்படுத்துவது சுலபம். தங்களுக்கும் மற்றவர்களுடைய கதி நேர்ந்து தங்கள் சொத்து சுதந்திரங்களும் போயிவிடுமோ  என்ற  பயத்துடன் அவர்கள் ஒழுங்காயிருப்பார்கள்.  முடிவாகச் குடியேற்ற ஏற்பட்டால் செலவு கிடையாது. குடியேற்ற நாடுகள் நம்பகமுள்ளவை. அதிகத் தொந்தரவு கொடுக்காதவை. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தரித்திரர்களாய்ச் சிதுறுண்டிருப்பதால்,  அவர்களால் தீங்கு செய்யவியலாது என்பதைக் கண்டோம். மனிதர்களை நல்லதனப்படுத்தவாவது வேண்டும், அல்லது ஒரேயடியாக ஒழித்துவிட வேண்டும். 
 

சிறு தீமைகளைப் பொறுக்காமல் பழிவாங்கத் துணிபவர்கள் பெரிய தீங்குகளுக்குப் பதிலாக ஒன்றுமே செய்யச் சக்தியற்றவர்களாய் ஆகிவிடுவார்கள்.  ஆகையல் மனிதனுக்குச் செய்யப்படும் கொடுமைகள் அவன் பழிவாங்கக் கூடாதபடி செய்யப்பட வேண்டும். அவனை தலையெடுக்க விடாதபடி அடித்துவிட வேண்டும். குடியேற்றத்துக்குப் பட்டாளத்தை வைத்தால், செலவு அதிகம். ராஜ்யத்தில் கிடைக்கும் வரிப்பணத்தையெல்லாம் பட்டாளம் சாப்பிட்டுவிடும். புதிய நாட்டைப் பிடித்ததில் ராஜாவுக்கு நஷ்டந்தான் உண்டாகும். பட்டாளம் வந்து சேர்திருப்பது எல்லோருக்குமே துன்பமாயும் அசௌகரியமாயும் இருப்பதால்,  ஜனங்கள் மனதில் துவேஷ உணர்ச்சி வளரும்.  

ஓவ்வொருவனும் பகைவனாகி விடுவான். தோற்கடிக்கப்பட்டு வீட்டோடு கிடந்தால் கூட இப்பகைவர்கள் அபாயமானாவர்கள், தீங்கிழைக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள்,  எப்படிப் பார்த்தாலும் குடியேற்ற முறை எவ்வளவுக் கெவ்வளவு லாபகரமானதோ அவ்வளவுக்கவ்வளவு சைனியத்தை வைத்துப் பராமரிப்பது உபயோகமற்றது.
    

இன்னும், இதுபோன்ற சமஸ்தானத்தை ஆளும் அரசன் சுற்றிலுமுள்ள தன்னிலும் பலங் குறைந்தவர்களான அரசர்களுக்குத் தன்னைத் தலைவனாக்கிக்கொண்டு அவர்களுக்குப் பாதுகாப்பளிக்க முன் வரவேண்டும். தன்னைப்பொன்ற வேறொருவன் பலங்குறைந்தவர்களைத் தாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிருப்பதியுடையவர்கள் தங்களுடைய சண்டையில் தலையிடும் படி அவனை வேண்டுவார்கள், இத்தோலியர்கள் (Etolians) கிரீஸில் ரோமர்களை அப்படித்தான் அழைத்தார்கள். ரோமர்கள் ஒவ்வொரு மாகாணத்திலும் அந்தந்த மாகாணத்தவர்களுடைய அழைப்பின் மீதே பிரவேசித்தார்கள். பலசாலியான அயலானொருவன் ஒரு மாகாணத்துக்குள் நுழைந்து விட்டால் ஏற்கனவே ஆளும் வர்க்கத்தார் மீதுள்ள பொறாமையால், சக்தி குறைந்த மக்கள் அவனைப் பின்பற்ற ஆரம்பித்து விடுகின்றனர். அவனுக்கு இவர்களை வசப்படுத்துவதில் கஷ்டமே கிடையாது. தாங்களாகவே அவனுடன் சேர்ந்து விடுகின்றனர்.  அவர்களுடைய அதிகாரமும் பலமும் அளவுக்கு மேல் போய்விடாத படி மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும். அவன் தன் சேனா பலத்தினாலும் இம்மக்களின் ஆதரவாலும் சக்திசாலிகளான எதிரிகளை அடக்கி எல்லா விஷயங்களிலும் அந்நாட்டில் அவன் வைத்தது சட்டமாய் இருக்கலாம். இவ்விதமாகத் தேசத்தை நிர்வகிக்காவிட்டால் கைப்பற்றிய நாட்டை விரைவில் இழக்க நேரும். நாடு கைவசத்தில் ஒரு வேளை இருந்தாலும்,  அதனால் தொல்லைகளும் கஷ்டங்களும் எல்லையின்றி இருந்து கொண்டேயிருக்கும்.
   

ரோமர்கள் தாங்கள் ஜெயித்த நாடுகளில் இவ்வுபாயத்தையே கடைப் பிடித்தார்கள். குடியேற்றங்களை அமைத்து, பலங்குறைந்தவர்களுடைய சக்தியை விருத்தி செய்யாமல் அவர்கள் மனதைக் கலைத்து பலம் மிக்கவர்களை அடக்கி வைத்து, அயல் நாட்டரசர்கள் அவர்களிடையே செல்வாக்குப் பெற முடியாமல் போர் செய்து வந்தனர். இதற்குக் கிரீஸின் திருஷ்டாந்தம் ஒன்றே போதும். ரோமர்கள் அக்கேயர்களோடும் (Achaeans)  இத்தோலியர்களோடும். சிநேகம் செய்து கொண்டு மாஸிடோனியாதேசத்தை வீழ்த்தினர்.  ஆண்டியோகஸ்ஸைக் (Antiochus)  கிரீஸை விட்டுத் துரத்தினர்.  

ஆனால், அக்கேயர்களையும் இத்தோலியர்களையும், ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொள்ளவிடவில்லை. பிலிப் (Philip) மன்னன் எவ்வளவு கேட்டுக் கொண்டும் அவனுடைய செல்வாக்குக் குறையாமலிருக்கையில் அவனுடன் அவர்கள் உறவு கொண்டாட விரும்பவில்லை. ஆண்டியோகஸ் அவ்வளவு பலசாலியாயிருந்தும் கூட அந்த மாகாணத்தின் எந்தப் பாகத்திலும் அதிகாரம் செலுத்தும் உரிமையை அவர்களிடமிருந்து பெற முடியவில்லை. 
    

அறிவாளிகளான அரசர்கள் என்ன செய்ய வேண்டுமோ,  அதைத்தான் ரோமர்கள் செய்தார்கள்.  தற்காலத்தைப் பற்றி மட்டும்  நினைத்துக் கொண்டிருந்துவிடாமல் பின்னிட்டு விளையக்கூடிய சண்டை சச்சரவுகளையும் யோசனை செய்து அதற்குத் தக்கபடி சாமர்த்தியமாக முன்ஜாக்கிரதை செய்து கொண்டார்கள். இன்னது வருமென்பதை முன்னாலேயே தெரிந்து கொண்டால், அதை நிவர்த்திப்பது எளிது.  தீங்கு வருமளவும் காத்திருப்பது  வியாதியை அலட்சியம் செய்வது போன்றது. சரியான சமயத்தில் மருந்து செய்யாமலிருப்பதால் வியாதி முற்றி விடுகிறது. சில வியாதிகளில் ஒன்றைப் போல ஜனங்களுடைய அதிருப்தியை முதலில் கண்டுபிடிப்பது கஷ்டம். ஆனால் நிவர்த்திக்க வழியுண்டு. காலங்கடத்தினால் வியாதியை எல்லோரும் கண்டு கொள்ள முடியும். ஆனால் மருந்து பிடிப்பது அரிது. அரசாங்க விஷங்களிலும் அப்படித்தான். புத்திமான்கள் பின்னால் வரக்கூடிய தீமைகளை அவை உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் போதே தெரிந்து கொண்டு அவற்றை அகற்றும் வழியைப் பார்க்கிறார்கள். தூரதரசிகளான ரோமர்கள் வரப்போகும் இன்னல்களைத் தங்கள் கூரிய புத்தியால் ஊகித்தறிந்து, வெள்ளம் வருமுன் அணைகோலக் கொண்டார்கள்.  யுத்தம் வந்துவிடுமே என்று பயந்து தீமைகளை அவர்கள் ஒருபோதும் வளரவிட்டதில்லை. யுத்தம் வந்தே தீருமென்பது அவர்களுக்குத் தெரியும். அதைத் தள்ளி வைத்துக் கொண்டே போவது எதிரிக்குத் தான் லாபகரம் என்றும் அறிவார்கள்.  ஆகையால் தான் அவர்கள் பிலிப்புடனும் ஆண்டியோகஸுடனும் கிரீஸில் யுத்தம் தொடுத்தார்கள், ஏனெனில் இத்தாலியில் போர் நிகழ்வதைத் தடுக்க விரும்பினார்கள்.  அச்சமயம் போரே விளையாமற் செய்திருக்கலாம். அப்படி அவர்கள் செய்யவில்லை. கால தாமதத்தால் லாபமுண்டு என்று தற்காலத்திய அறிஞர்கள் சொல்கிறார்கள். ஆயினும் அவர்கள் அப்படிச் செய்யாமல் தங்கள் புத்தியையும் சாமர்த்தியத்தையுமே நம்பினார்கள். காலம் எல்லாவற்றையுந்தான் கொண்டு வருகிறது.  நன்மையைத் தருமோ அல்லது தீமையைத் தான் கொடுக்குமோ யாருக்குத் தெரியும்?
    

பிரான்ஸ் இம்மாதிரி ஏதாவது செய்ததா என்று பார்ப்போம்.  சார்லஸைப் (charles) பற்றி நான் ஒன்றும் சொல்லப் போகிறதில்லை. அவனைவிட அதிக நாட்கள் இத்தாலியில் அரசாண்ட லூயின் நடவடிக்கைகளை நாம் இன்னும் தெளிவாகப் பார்க்கக் கூடும். அவன் அன்னிய ராஜ்யத்தில் தன் அதிகாரத்தை நிலையாட்டுவதற்கு ஒரு அரசன் என்ன செய்ய வேண்டுமோ அதற்கெல்லாம் நேர்மாறாக நடந்து கொண்டான். பேராசையுள்ள வெனிஷியர்கள் லூயி அரசனை இத்தாலிக்கு வரும்படி அழைத்தார்கள். அவனுடைய வருகையால் லொம்பார்டி (Lombardy) யில் பாதியைத் தாங்கள் பெறலாமென்பது அவர்களுடைய ஆசை. ஆவர்களுடைய அழைப்புக் கிணங்கி அவன் வந்தது குற்றமன்று.  

இத்தாலியைக் கைப்பற்றுவதற்காக அவன் அந்நாட்டிற்குள் நுழைய இடங்கிடைப்பது அவசியமாக இருந்தது. இத்தாலியில் அவனுக்கு வேண்டியவர்கள் யாரும் இருக்க வில்லை. போதாக் குறைக்கு சார்லஸின் செயல்கள் லூயியை ஜனங்கள் வெறுப்பதற்குக் காரணமாயிந்தன. ஆகையால் கிடைத்த சிநேகிதர்களை அவன் வரவேற்க வேண்டியிருந்தது. மற்ற விஷயங்களில் தவறு செய்யாமலிருந்தால் வெகு சீக்கிரத்தில் அவனுக்கு வெற்றி  கிடைக்திருக்கும்.

லொம்பார்டியைப் பிடித்தவுடன் சார்லஸ் இழந்த நற்பெயரையெல்லாம் லூயி பெற்றான்.  ஜினோவா (Genoa) பணிந்தது, பிளாரன்டின்கள் (Florentines) அவனுடன் உறவாடினர்.  மாண்டுவா பிரபு, (The Marquis of Mantua) பெராரா,  பென்டிவோக்லி சிற்றரசர்கள் (The Dukes of Ferrara and Bentivogli)  போர்லி சீமாட்டி (The Lady of farli) பேன்ஸா (Faenza) பிஸாரோ (Pesaro) ரிமினி (Rimini) காமரினோ (Camerino) பியோம்பினோ (Piombino) முதலிய பிரபுக்கள், லுக்கா (Lucca) ஸீனா (Seina) நகர வாசிகள் எல்லோரும் அவனுடன் சிநோகமாவதற்கு முன் வந்தனர்.  

வெனிஷியர்களுக்குத் தங்கள் பதட்டம் பிறகுதான் தெரிந்திருக்கும். லொம்பார்டியிலுள்ள சில நகரங்களைத் தாங்கள் அடைவதற்காக இத்தாலி தேசத்தின் மூன்றில் இரண்டு பாகங்களுக்கு லூயி அரசனை அதிகாரியாக விட்டுவிட்டனர்.

நான் முன் கூறிய விதிகளை மட்டும் அனுசரித்திருந்து தனக்குத் கிடைத்த அந்தச் சிநேகிதர்களை உறுதியுடன் அடக்கி வைத்திருக்கும் பட்சத்தில் லூயிக்கு இத்தாலியின் தன் கீர்த்தியை நிலை பெறச்செய்வது எவ்வளவு எளிதாக இருந்திருக்கும். அந்த நண்பர்கள் பெருந்தொகையினராயும், சக்தியற்றவர்களாயும் இருந்ததுடன் சர்ச்சினிடமும் வெனிஷியர்களிடமும் அஞ்சியவர்களாயிருந்ததால் அவனுடைய தயவை எப்போதும் வேண்டி, அவன் சாரிபிலேயெ நிற்க வேண்டியர்வர்களாய் இருந்தார்கள். அவர்களுடைய ஒத்தாசையைக் கொண்டு மற்றுமுள்ள மகத்தான எதிரிகளை ஒரு கை பார்த்திருக்க முடியும்.  ஆனால் அவன் மிலனுக்கு வந்தவுடன் இதற்கு நேர் விரோதமான ஒரு காரியத்தைச் செய்தான். ரோமானா (Romagna) வைப் பிடிப்பதற்குக் போப் அலெக்ஸாண்ட (Pope Alexander) ருக்கு உதவி செய்தான்.  

இப்படிச் செய்ததால் தன்னிடம் அடைக்கலம் புகுந்தவர்களுடைய நல்லுறவையிழந்து தன்னைப் பலஹீனப்படுத்திக் கொண்டதுடன்  நில்லாமல் சர்ச்சுக்கு  அதனுடைய ஆத்மீக சக்தியுடன் லௌகீக பலத்தையும் ஏராளமாக அளித்து அதை இவ்வளவு அதிகாரம் வாய்ந்ததாய்ச் செய்து விட்டதை அவன் அறியவில்லை.  முதல் தவறு பல  தவறுகளுக்குக் காரணமாயிற்று. அலெக்ஸாண்டரின் பேராசையை அடக்கவும் அவன் டஸ்கனி (Tuscany) யில் அதிகாரியாவதைத் தடுக்கவும் இத்தாலிக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.  

சர்ச்சின் பலத்தைப் பெருக்கித் தன் நண்பர்களுடைய நல்லெண்ணத்தை இழந்ததும் போதாமல் நேபிள்ஸ் ராஜ்யத்தின் மேல் மோகம் வைத்து, அதை ஸ்பெயின் அரசனுடன் பங்கிட்டுக் கொண்டான்.  இது வரையில் இத்தாலியில் ஏகபோகமாக அரசு செலுத்தி வந்தவன் தன்னுடன் கூட ஒரு துணைவனை அழைத்து வந்து, தன்னிடத்தில் அதிருப்தியடைந்த பேராசைக்காரர்கள் இன்னொருவனுடைய உதவியைக் கோர இடமுண்டாக்கி விட்டான்.  

இத்தாலியில் தனக்குக் கப்பம் கட்டத்தகுந்த ஒரு ராஜாவை விட்டுப் போயிருக்கக் கூடியவன்,  அந்த ராஜாவை விரட்டிவிட்டுப் போயிருக்கக் கூடியவன்,  அந்த ராஜாவை விரட்டிவிட்டுத்  தன்னையே தூரத்தவல்ல  ஒருவனை வரவழைத்தான்.
    

புதிய நாடுகளை ஜெயிக்க வேண்டுமென்கிற ஆவல் இயற்கையானது தான். அதைச் சாதிக்கக் கூடியவர்கள் புகழப்படுகிறார்களேயன்றிக் குறை கூறப்படுவதில்லை. ஆனால் அவ்விதம் செய்து வெற்றியடையும் வல்லமையின்றி வீண் ஆசைப்பட்டு அவ்வேலையில் இறங்குகிறவர்கள் கடுங் குற்றத்துக்கு ஆளாகிறார்கள்.  பிரான்ஸ் தன் சொந்த சேனைகளின் உதவியால் நேபிள்ஸை ஜெயிக்க முடிந்தால் அந்த முயற்சியில்  இறங்கியிருக்க வேண்டும்.

முடியாவிட்டாலே நேபிள்ஸில் பாதி பங்குக்கு ஆசைப்பட்டிருக்கக்கூடாது. லொம்பார்டியைப் பங்கிட்டு கொண்டது மன்னிக்கத் தக்கதே. ஏனெனில் அதன் மூலமாகத் தான் பிரஞ்சு மன்னன் முதலில் இத்தாலியின் கால் வைக்க முடிந்தது.  அவசியம் என்ற சாக்குக் கூட இல்லாமல் இரணடாம் முறை பாசம் செய்து கொண்டதுதான் பெருந்தவறு.

இவ்வாறு லூயி அரசன் ஐந்து பிழைகள் செய்தான், சிறிய சக்திகளை ஒடுக்கினான். இத்தாலியில் பாப்பரசருடைய பலத்தைப் பெருக்கினான். வலிமை மிகுந்த ஒரு அன்னியனை உள்ளே விட்டான்.  தான் அந்நாட்டில் சென்று வசிக்காமலிருந்து விட்டான். குடியேற்ற முறையையும் கைக் கொள்ள வில்லை. இருப்பினுங் கூட வெனிஷியர்களிடமிருந்து ராஜ்யத்தைப் பிடுங்கியதான ஆறாவது பிழையொன்றையும் செய்யாமலிருந்தால் இப்பிழைகள் அவனைப் பாதிக்காமலிருக்கலாம். சர்ச்சை வலுவாக்காமம் ஸ்பானியரை உள்ளே விடாமலுமிருந்திருந்தால் கடைசியிற் செய்த காரியம் சரிதான். அப்போதும் வெனிஷியர்களை மட்டந்தட்டுவது அவசியமும் நியாயாமும் ஆகும். ஆனால் அப்படியெல்லாம் செய்துவிட்ட பிறகு வெனிஷர்களுக்கு நஷ்டம் விளைத்திருக்கவே கூடாது. வெனிஷியர்கள் பலசாலிகளாயிருந்திருந்தால் மற்றவர்கள் லொம்பார்டியை நெருங்கியிருக்க மாட்டார்கள். ஏனென்றால் ஹவெனிஷியர்கள் லொம்பார்டியைத் தங்களுக்கில்லாமல் வேறொருவர் கொண்டு போக விடமாட்டார்கள். அதை பிரான்ஸிடமிருந்து பிடுங்கி வெனிஷியர்களுக்குக் கொடுப்பதில் வேறு ஒருவர்க்கும்  அக்கறையிருக்காது.  பிரான்ஸ்,  வெனிஸ், இரண்டையும் எதிர்க்க அன்னியர் தைரியம் கொண்டிருக்க முடியாது.

பிரான்ஸ் அரசன் ரோமானாவை அலெக்ஸாண்டாருக்கும், நேபிள்ஸை ஸ்பெயின் அரசனுக்கும் விட்டுக் கொடுத்தது யுத்தம் நிகழ்வதைத் தடுப்பத்றகாக என்று எவரேனும் வாதம் புரிவரேல் போரை நிறுத்துவதற்காக ஒழுங்கீனங்களையும் கலவரங்களையும் அனுமதிக்கக் கூடாது என்றே நான் பதில் சொல்வேன்.  இவ்வாறு செய்து கொண்டே போவதால் சண்டை நிற்காது. ஆனால் கொஞ்ச நாள் ஒத்திப்போகும்.  அப்படி ஒத்திப் போவது அரசனுக்குப் பிரதி கூலமானது. போப் தன்னுடைய விவாகத்தை ரத்து செய்ததற்கும் ரோஹனுக்குக் (Rohan) கார்டினல் (cardinal) பதவி கொடுத்ததற்கும் பிரதியாக அலெக்ஸாண்டருக்கு அவன் வாக்களித்திருந்த படி லூயி ரோமானாவைப் பிடிக்கும் முயற்சிக்குத் துணை புரிந்தான் என்றால், அதற்குப் பதில், போவதில் இருக்கிறது.  இவ்வாறு ராஜ்யங்களை ஜெயித்து அவற்றில் அதிகாரத்தை நிலைக்கச் செய்வதற்கு மற்றவர்கள் எந்த நியமங்களைக் கடைப்பிடிப்பார்களோ, அவற்றின் படி நடக்காததால் லூயி லொம்பார்டியை இழந்தான். போப் அலெக்ஸாண்டருடைய குமாரனான வாலென்டின் (Valentine) என்று சாதாரணமாக அழைக்கப்படும்  ஸீஸர் போர்ஜியா Ccesare Borgia) ரோமானாவைப் பிடித்த சமயத்தில் நான் இதைக் குறித்து நான்டிஸ் (Nantes) ஸில் கார்டினல் ரோஹனுடன் பேசிக் கொண்டிருந்தேன். கார்டினல் ரோஹன் என்னிடம் இத்தாலியருக்குச் சண்டையின்னதென்றே தெரியாது என்ற போது நான் பிரஞ்சுக்காரருக்கு ராஜதந்திரமே தெரியாது என்று பதிலளித்தேன். அது தெரிந்தவர்களாயிருந்தால் சர்ச்சின் அதிகாரம் இவ்வளவு தூரம் ஒங்குவதற்கு விட்டிருக்க மாட்டார்களல்லவா? அனுபவத்தின்படி பார்த்தால் இத்தாலியில் சர்ச்சும் ஸ்பெயினும் பலம் பெற்றதற்குப் பிரான்ஸே காரணமாயிருந்தது. சர்ச்சும் ஸ்பெயினும் மிதமிஞ்சிய அதிகாரத்தை அடைந்தால்தான் பிரான்ஸ் வீழ்ச்சியடைந்தது.  இதிலிருந்து ஒரு போதும் தவறாத ஒரு பொதுவான நீதி கிடைக்கிறது. இன்னொருவனுடைய பலத்தைப் பெருக்குகிறவன் தன் நாசத்துக்கு வழி தேடுகிறான்.  தந்திரத்தினாலும்  முரட்டுத்தனத்திலும் அந்தப் பலம் பெருக்கப் படுகிறதாகையால் பலம் பெற்றவன் தன்னைத் தூக்கி விட்டவனுடைய அந்த இரண்டு குணங்களையுமே சந்தேகிக்கிறான். 

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர், 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com