’கோதான்’: யாரையும் விட்டு வைக்காத பேனா! -ஜெயா அருணாச்சலம்

நம்மைச் சூழ்ந்துள்ள சிக்கல்களை நாம் வாழும் சூழ்நிலையிலேயே படம் பிடித்துக் காட்டும்பாணியில் அமைந்த ஓர் இலக்கிய ஓவியமே பிரேம் சந்தின் ’கோதான்’ (பசுதானம்) என்னும் நவீனம்.
பிரேம்சந்த் / ஜெயா அருணாச்சலம்
பிரேம்சந்த் / ஜெயா அருணாச்சலம்

தமிழ்நாட்டின் எளிய கிராமத்தில் பிறந்து வளந்தவள் நான். எனினும் பள்ளி நாள்களில் இருந்தே வடநாட்டு ஆசிரியர்களான குஷ்வந்த் சிங், பங்கிம் சந்திரர், ரோமேஷ்தத்தா, கன்யாலால் முன்ஷி, முன்ஷி பிரேம்சந்த் போன்ற கதாரிசியர்கள் என் மனதையும் கருத்தையும் ஒருங்கே கவர்ந்தவர்கள்.

நம்மைச் சூழ்ந்துள்ள பிரச்சினைகளை நாம் வாழும் சூழ்நிலையிலேயே படம் பிடித்துக் காட்டும்பாணியில் அமைந்த ஓர் இலக்கிய ஓவியமே பிரேம் சந்தின் ’கோதான்’ (பசுதானம்) என்னும் நவீனம். ஏறக்குறைய 18-ம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியா அரசியல் ரீதியாக அந்நியர் ஆட்சியில் பிடியுண்டதன் காரணமாகக் கிராமங்களும், கிராமியப் பொருளாதாரமும் சீர்கெட்டு, கிராமவாசிகள் பல வழிகளிலும் அல்லலுற்று அமைதி கெட்டு வாழ்ந்த அவலநிலையினைத் தத்ரூபமாக நம் கண் முன்னே கொண்டுவரும் சிறந்த அந்நாவல் ’கோதான்’ என்பதில் ஐயமில்லை. அந்த நூற்றாண்டுக்குரியவை மட்டுமல்ல அப்பிரச்சினைகள், இன்றும் பல மாநிலங்களில் காணப்படும் அன்றாட நிகழ்ச்சிகள் இரண்டு நூற்றாண்டுக்குப் பிறகும் நம் காலத்திற்கும் பொருந்தும், ஒரு சிறந்த தொலைநோக்குடைய கருத்தோவியமாக அமைந்த நாவல்.

சமுதாயச் சீர்திருத்தம் இல்லையேல் நாட்டில் சமதர்ம மறுமலர்ச்சி இல்லை என்பது பிரேம்சந்தின் ஆணித்தரமான கருத்து. நாட்டுப்பற்றின் முதல் படியே சமூகச் சீர்திருத்தம். அதில் ஒன்றில்லையேல் மற்றொன்றும் இல்லை என்பது அவரின் தெளிந்த கோட்பாடு.

அவரது கதைகள் பெரும்பாலும் சமூகச் சீர்கேடுகள், குறிப்பாக மகளிரின் அவலமான அடிமை வாழ்வு, பூசாரிகளின் கபட வேடங்கள், மற்றெந்த உலக இலக்கியங்களிலும் காணாத குறிப்பாக இந்திய கிராமங்களைப் பற்றிய நன்கு அறிந்த தகவல்கள், கருத்துகள் முன்ஷி பிரேம்சந்தின் நாவல்களின் மூலம்தாம் நாம் அறிய வருகின்றன. கிராமங்களின் நியாய பஞ்சாயத்துகளின் ஓரவஞ்சனைகள் அங்கு அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வாழும் ஏழை விவசாயிகளின் நிலை. அவர்களை என்றும் தலைதூக்க விடாமல் தலைவிரித்தாடும் சமூகத் தீமைகள் போன்றவற்றை நன்கு வெளிப்படுத்தும் கருத்துக் கணிப்புகளே அவரின் நாவல்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் ஆகும்.

பிரேம்சந்தின் பேனாமுனை யாரையும் விட்டுவைக்கவில்லை. வட்டிக்காரர்கள், நிலப்பிரபுக்கள், அரசு அதிகாரிகள், ஜாதி மதவாதப் பிரச்சினைகளைத் தூண்டிய கோயில் பூசாரிகள் என எல்லோரையும் பாகுபாடின்றிச் சாடியிருப்பது சக்தி வாய்ந்தது.

நாவலின் பிரதம கதாப்பாத்திரமான ஹோரியை ஆசிரியர் கையாளும் முறை மிகுந்த சிறப்பிற்குரியது. தன் பசுவைக் கொன்ற சகோதரர்களுக்கு உதவி செய்வது, மகனால் கர்ப்பிணியாக்கப்பட்டு அநாதையாய் நிற்பவளும், உள்ளூர் மக்களால் உதறித் தள்ளப்பட்டவளுமான ஒரு பெண்ணுக்கு அடைக்கலம் அளித்ததற்காகப் பஞ்சாயத்தார் விதித்த தீர்வை ஏற்றுத் தன் கடமையைப் பூர்த்தி செய்வது என ஹோரியை மனிதருள் மாணிக்கம் எனத் தீட்டிக் கதையின் உச்சகட்டத்துக்கு நம்மைக் கொண்டு சென்று திகைக்க வைக்கிறார் ஆசிரியர்.

அதிகாரவர்க்கத்திற்கு எதிரான ஒரு சிறந்த வர்க்கப் போராட்டத்தை மிகவும் எளிய முறையில், சாதாரண மக்கள் அனைவரும் புரிந்துகொண்டு விழிப்படைய வேண்டும் எனத் தனது ’கோதான்’ நாவலில் மட்டுமல்லாமல் மற்ற சிறுகதைகள், கட்டுரைகளிலும் ஏழை மக்கள் ஏழைகளாகப் பிறப்பதில்லை, அவர்களின் மீது ஏழ்மையையும், வறுமையையும் திணிக்கும் தீய சக்திகள்தான் என்று நீரூபித்து, அவற்றைக் கடுமைகாகச் சாடிக்கண்டிக்கிறார்.

அவரது எழுத்துகள் எளிய கிராமிய மக்களின் விழிப்புணர்ச்சியைத் தூண்டுகிறது. மீண்டும் ஒருமுறை அத்தகைய நவீனங்களைப் படிக்கும்பொழுது இன்னும் பல அரிய கருத்துகள் நமக்கே புலப்படுகின்றன. இன்றும் நமக்கு உதவக் கூடிய துணிச்சலான கருத்துகளைக் கொண்டவை அவரது எழுத்துகள் என்பதை உணர முடிகிறது.

கதையில் பசுவினால் ஏற்படும் சோகத்தை அவர், ‘’ஒரு விவசாயிக்குப் பசுமாடு பெரும் செல்வம், வரப்பிரசாதம்,’’ என்றும், ‘’உயிர் வாழும்போது தனது குடும்பத்தாருக்கு ஜீவநாடியாக விளங்கும் இப்பிராணி பரிதாபத்திற்குரியது; அது இறந்த பின்பும் அதன் தோலையும், எலும்புகளையும் கூட மனிதன் விட்டுவைப்பதில்லை’’ என்றும் அவர் கூறுவது இன்றும் பொருந்தும் அல்லவா!

இத்தகைய வேகம் மிகுந்த எழுத்துகளை, 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ரஷ்யப் புரட்சிக்கு முன்னோடியாகப் பல நவீனங்களையும், கட்டுரைகளையும் வரைந்த மாக்ஸிம் கார்க்கியுடன்தான் ஒப்பிட முடியும்.

’கோதான்’ தமிழிலும் வெளிவந்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். இல்லையேல் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் பிராபல்யம் பெற்ற இந்த நாவலைத் தமிழர்களுக்கு மொழிபெயர்த்து வெளியிடும் பொறுப்பினைப் பாரதிய வித்யா பவன் போன்ற இந்திய கலாசார மையங்கள் எடுத்துக்கொண்டால், பிறமொழி நல்லறிஞர்களின் நூல்கள் தமிழிக்குச் சொந்தமாகலாம்.

          (தினமணி கதிரில் 08.07.2001 அன்றி வெளியானது)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com