'தஸ் ஸ்போக் ஜரதுஷ்டிரா': ஒட்டகம் பெப்ஸி குடிக்கிறது! -நிர்மலா சுரேஷ்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்படுகிறது நீட்ஷேயின் 'தஸ் ஸ்போக் ஜரதுஷ்டிரா'  (Thus Spoke Zarathustra) என்னும் 'இவ்வாறு சொல்கிறான் ஜரதுஷ்டிரன்'.
'தஸ் ஸ்போக் ஜரதுஷ்டிரா' / நிர்லமா சுரேஷ்
'தஸ் ஸ்போக் ஜரதுஷ்டிரா' / நிர்லமா சுரேஷ்

பொங்கி வருகிற ஆன்மா, கரைபுரண்டோடும் சிந்தனை, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத எதிர்மறைக் கருத்துகள், பட்டை  தீட்டப்பட்ட பயங்கரம் என்று ஒதுக்கப்பட்ட கொள்கை. இவைதான் ஜெர்மானியரான நீட்ஷேயின் படைப்புகள்! கார்ட்டூன்களுக்குக் கருவான அதிமனிதன் (சூப்பர்மேன்) அல்லது மகா மனிதன் கோட்பாட்டைத் தந்தவர் அவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்படுகிறது. அவருடைய Thus Spoke Zarathustra – ’இவ்வாறு சொல்கிறான் ஜரதுஷ்டிரன்’ என்னும் நூல்.

கவிதாப்பூர்வமான தத்துவம் என்பதா, தத்துவார்த்தமான கவிதை என்பதா, உலகிலிருந்து விலகிய தனிமை என்பதா, வாழ்க்கையில் அவநம்பிக்கை கொண்டவனின் புதிய நம்பிக்கைக் குரல் என்பதா? பரிணாம வளர்ச்சி மனிதனோடு நின்றுவிடவில்லை. அது உயர்மனிதனை நோக்கிச் செல்லும். ‘இளவரசன்’ என்னும் தனது புத்தகத்தில் மாக்கியவல்லி, அரசியல் வெற்றிக்காக எதையும் செய்யலாம் என்று கூறியிருப்பதை நினைவுபடுத்துகிற வகையில் மனிதன் மேலும் மேலும் வலிமை பெற்றாக வேண்டும், நன்மை தீமைகளுக்கு அப்பாற்பட்ட வழிகளில் என்று நிலைநாட்ட விரும்பியவர் நீட்ஷே. Survival of the fittest உண்மையைக் கூறிய டார்வின் வாரிசு! சமகால ஐரோப்பாவின் போர்ச்சூழலின் தாக்கத்தால் ‘பிஸ்மார்க்’கின் சகோதரராய் உருவெடுத்தவர்.

ஃபீனிக்ஸ் பறவை சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் என்பதைத்தான் பலரும் குறிப்பிடுவார்கள். அந்தப் பறவையின் சங்கீதக் கூவல்தான் ஜரதுஷ்டிரனைத் தட்டி எழுப்பியது என்கிறார் நீட்ஷே.

லெபனானின் கலீல் ஜிப்ரான், நீட்ஷேயின் நடையழகை, பாணியைப் பின்பற்றித்தான் ‘தீர்க்கதரிசி’ (Prophet) ’பித்தன்’ (The madman) ஆகியவற்றைப் படைத்தார். நீட்ஷேயின் தாக்கம் சாத்தானின் வேதம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. என்றாலும் இதைப் படித்து வியக்காதவர்கள் இல்லை. கலீல் ஜிப்ரான் அத்தகு தர்க்கத்தை உடன்பாட்டு ரீதியாகக் கையாண்டார்.

கனமான, முரண்பாடான, தடைசெய்யப்படுகிற எழுத்துகளில் என்னதான் இருக்கிறது என்று அறியும் ஆவல் எனக்கு! (மனித இச்சைகளைப் பற்றிய நூல் அல்ல) வரலாற்றை, கொள்கைகளைத் திருப்பிப் போடும், புரட்டிக் காட்டும் புத்தகங்களைத் தேடும் இயல்பு என்னால் தவிர்க்க முடியாதது!. டேனிஷ்காரரான கியாக்ககார்ட் எழுதிய Fear and Trembling என்னும் நூலும் அப்படித்தான்! நீட்ஷேயைப் போலன்றி மென்மையாக, உண்மைகளைத் தோலுரித்துக்காட்டும். பிள்ளைக்கறி சமைத்த நாயனாரைப் போல ஆபிரகாம், தன் மகனைப் பலியாகக் கேட்கும் கடவுளுக்குப் பலி கொடுக்க அவனை அழைத்துக்கொண்டு மலையுச்சிக்குச் செல்கிறார். அடிவாரத்திலிருந்து சிகரத்தை அடையும் வரை நிகழும் மனத் தவிப்புதான் முழு நூல்.

சென்ற ஆண்டு எமிரேட்டுகளில் வெளியிடப்பட்ட ’துபாய்க் கதைகள்’ -20 சிறுகதைகள் அடங்கிய தொகுதி. பாலைவனப் பாரம்பரியத்திற்கும், எண்ணெய்ப் பணத்தினால் ஏற்பட்ட நவீன மேனாட்டுத் தாக்கத்துக்கும் இடையே அகப்பட்டு விழிக்கும் அரேபியரின் வாழ்க்கை முறைகளைச் சுவையாகச் சித்தரிக்கிறது, அல்மூர் எழுதிய இந்தக் கதைத் தொகுதி.

பெப்ஸி: விடலைப் பையன்களும் இளைஞர்களும் சேர்ந்து ஒரு குட்டி ஒட்டகத்தை வாங்கி வந்து ஊட்டம் அளிக்கிறார்கள். ஒட்டகப் பந்தயத்தில் அது முதல் பரிசு பெற இராப்பகலாகப் பயிற்சி! பந்தயத்துக்கு முந்திய நாள் காலையில் வேகமாக வரும் மெர்சிடிஸ் பென்ஸ், பெப்ஸி என்னும் பெயர் கொண்ட அந்த ஒட்டகத்தின் மீது மோதிவிட, பெப்ஸியினால் நடக்கக்கூட முடியாதபடி கால் ஒடிந்து விடுகிறது. கண்ணீரோடு மருத்துவம் பார்த்து, சந்தைக்குப் போகும்போது செல்லப்பிராணியாக அதை உடன் அழைத்துப் போகிறார்கள். அது அங்கே பாட்டில் பாட்டிலாய்க் குடிக்கிறது பெப்ஸி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com