'விசாரணை': இந்தப் பெரும் அமைப்பு எதற்காக? -எஸ்.வி.ராஜதுரை

முப்பதாண்டுகளுக்கு முன் ஆங்கில மொழியாக்கத்தில் படித்த ‘விசாரணை’ (The Trial) ஜெர்மன் மூலத்திலிருந்து ஏ.வி.தனுஷ்கோடியால் ஜி.கிருஷ்ணமூர்த்தியின் உதவியுடன் தமிழாக்கம் செய்யப்பட்ட நூல்.
'விசாரணை' / எஸ்.வி.ராஜதுரை
'விசாரணை' / எஸ்.வி.ராஜதுரை

உலக இலக்கியச் சொற்களஞ்சியத்தில் சாகாவரம் பெற்றுள்ளது ‘Kafkasque’. இது எந்தவொரு சமூகவியல், அரசியல், விஞ்ஞானக் கோட்பாட்டாலும் முழுமையாகக் கிரகித்துக்கொள்ள முடியாத கருத்துருவாக்கம்; ஃபிரன்ஸ் காஃப்காவின் படைப்புலகத்தின் சாரம்.

தன்னிச்சையாக, எதேச்சாதிகாரத்துடன் செயல்படும் அரசு அதிகாரம், படிநிலை அதிகாரி வர்க்க அமைப்பு ஆகியவற்றின் மூர்க்கத்தனமான, அபத்தமான விதிமுறைகளின், அவற்றின் இயங்கு கதியின் விளக்கத்தை இச்சொல்லில் அடக்கிவிடலாம்.

அரசின், அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகள் அவற்றுக்கே உரிய ஒரு வக்கிரமான, மானுடத் தன்மையற்ற தர்க்கத்தைக் கொண்டிருக்கின்றன. அவை புதிர் நிறைந்தவை. தீய கனவுகள் போல் பீதியூட்டுபவை. காஃப்காவின் நாவலான ‘விசாரணை’யில் கதாநாயகன் ‘க’ கூறுகிறான்:

‘’எனக்குச் சந்தேகமே இல்லை’’ என்று ஆரம்பித்தான் க. தாழ்ந்த குரலில் ‘’இந்த நீதிமன்றத்தில் எல்லா நடவடிக்கைகளுக்கும் பின்னால் என் விஷயத்தில் என்னைக் கைது செய்தது, இன்று இங்கு நடத்திய விசாரணை – இவற்றுக்குப் பின் ஒரு பெரும் அமைப்பு இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. இந்த அமைப்பு லஞ்சம் வாங்கும் காவலாளிகளையும் விட்டேற்றியாக வேலை செய்யும் மேற்பார்வையாளர்களையும் நிலைமைகள் சாதகமாக இருக்கும்போது பணிவுடனிருக்கும் நீதிபதிகளையும் வேலைக்கு அமர்த்தியிருக்கிறது. அது மட்டுமின்றி, மிக உயர்ந்த மேல்மட்ட நீதிபதிகளையும் அவர்களைச் சார்ந்த, எண்ணிக்கையில் அடங்காத அத்தியாவசியமான ஆதரவாளர்கள், குமாஸ்தாக்கள், காவல்துறையினர், உதவியாளர்கள், ஒரு தூக்கிலிடும் பணியாளன் கூட – இந்த வார்த்தையைச் சொல்ல நான் கூச்சப்படவில்லை - வேலைக்கு அமர்த்திருக்கிறது. இந்தப் பெரும் அமைப்பு எதற்காக! ஒரு குற்றமும் செய்யாதவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மேல் அர்த்தமில்லாதிருக்கும்போது அலுவலகர்களின் மிகவும் மோசமான லஞ்ச ஊழல்களை எப்படுத் தவிர்க்க முடியும்? அது முடியாத காரியம். மிக உயர்மட்ட நீதிபதி கூட சாதிக்க முடியாத காரியம். அதனால்தான் காவலாளிகள், கைது செய்யப்பட்ட வரை உரித்துத்துணிகளைத் திருடுகிறார்கள். அதனால்தான் மேர்பார்வையாளர்கள் எந்த அந்நியர் வீட்டிலும் தாராளமாக நுழைகிறார்கள். அதனால்தான் குற்றமற்றவர்கள் விசாரிக்கப்படுவதற்குப் பதில் குழுமிருக்கும் எல்லோருக்கும் முன்பாக இழிவுபடுத்தப்படுகிறார்கள்…’’

இத்தனைக்கும் காஃப்கா தனது படைப்பில் சித்தரிப்பது ஒரு சர்வாதிபத்திய வன்கொடுமை அரசல்ல. மாறாக நவீன கால ஜனநாயக அரசுதான்.

‘’…மற்ற காவலாளியுடன் தன்னுடைய தலைக்கு மேல் பார்வையாளர்களைப் பரிமாறிக் கொள்கிற முகத்தை க. நிமிர்ந்து பார்த்தான். அவர்கள் எத்தகைய மனிதர்கள்? எதைப் பற்றி பேசினார்கள்? எந்தத் துறையைச் சேர்ந்தவர்கள்? க. இன்னும் ஒரு ஜனநாயக அரசில்தானே வாழ்கிறான். எங்கும் அமைதி நிலவுகிறது. எல்லாச் சங்கடங்களும் நேர்மையாகத்தான் இருக்கின்றன. இருந்தும் அவனுடைய அறையில் அவனைத் திடீரென்று கைது செய்ய யாருக்கு இவ்வளவு தைரியம் வந்தது?’’

இது ’பொய்’, உலக நியதியாக்கப்பட்டுவிட்ட உலகம்’, க. வைச் சிறையில் சந்திக்கும் பாதிரி கூறுகிறார்.

‘’…..உன்னிடமிருந்து நீதிமன்றத்துக்கு எதுவுமே வேண்டியதில்லை. நீ வந்தால் அது ஏற்றுக்கொள்ளும். நீ சென்றால் அது உன்னை அனுப்பிவிடும்’’.

யாராலும் விளக்கப்படவே முடியாத ஒரு காரணத்திற்காக மரண தண்டனை விதிக்கப்படும் க.வைக் குத்திக் கொல்பவன். ‘ஒரு நாயைப் போல’ என்றான் – ‘இந்த இழிவு அவனுக்குப் பின்னும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதைப் போல’

முப்பதாண்டுகளுக்கு முன் நான் ஆங்கில மொழியாக்கத்தில் படித்த ‘விசாரணை’ (The Trial) ஜெர்மன் மூலத்திலிருந்து ஏ.வி.தனுஷ்கோடியால் ஜி.கிருஷ்ணமூர்த்தியின் உதவியுடன் தமிழாக்கம் செய்யப்பட்டு ‘க்ரியா’வால் வெளியிடப்பட்டுள்ளது. நான் படித்துள்ள இலக்கியப் படைப்புகளில் பத்து சிறந்த நூல்களைத் தெரிவு செய்யச் சொன்னால், ‘விசாரணை’ கட்டாயம் இருக்கும்.

அதிகாரி வர்க்கத்தை மேய்த்துக்கொண்டிருந்த மற்றொரு க. தமிழ்நாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்டு தடிமனான ஒரு போலீஸ் அதிகாரியின் இறுக்கமான பிடிப்பில் காலில் செருப்பின்றி கட்டிய லுங்கியுடன் சிறிய உருவமாகக் கொண்டு செல்லப்படும் பிம்பங்களைப் போலீஸ் விடியோவில் பார்த்தபோது ‘விசாரணை’யின் உக்கிரம் பலருக்கு கிலியூட்டியிருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com