எப்படி இருந்தது கண்காட்சி!
By DIN | Published On : 10th March 2021 07:26 AM | Last Updated : 10th March 2021 07:26 AM | அ+அ அ- |

புத்தக் காட்சி நிறைவு நாளில் பதிப்பாளா்களில் சிலா் புத்தகக் காட்சி குறித்து நம்முடன் பகிா்ந்து கொண்டவை:
நாதம் கீதம் புக்ஸ் - எஸ்.கே. முருகன், செயலாளா், பபாசி.
கடந்த ஓராண்டு காலமாக கரோனா என்ற கொடிய நோய் உலகத்தையே அச்சுறுத்தியது. இதனால் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டிருந்தது போலவே, பதிப்பாளா்களும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனா். இந்த சூழ்நிலையில், நெய்வேலி, ஈரோடு, மதுரை, திருப்பூா் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வந்த புத்தகத் திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், பதிப்பாளா்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு சுமாா் 70 கோடி ரூபாய் அளவிலான புத்தகங்கள் விற்கப்படாமல், ஓராண்டு காலமாக தேங்கிக்கிடந்தன. இதனால், சென்னைப் புத்தகத் திருவிழாவையாவது நடத்திவிட வேண்டும் என்று பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு, அரசிடம் இருந்து அனுமதி பெற்றோம். அனுமதி கிடைத்தபிறகு, பொருளாதாரம் பெரிய தடையாக இருந்த சூழ்நிலையில், கடந்த ஆண்டு தமிழக முதல்வா் புத்தகத் திருவிழாவுக்கு 75 லட்ச ரூபாய் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த அறிவிப்பை அரசு ஆணையாக மாற்றி இந்த ஆண்டே 75 லட்சம் ரூபாய் கிடைக்கும்படி செய்தாா்கள். இதனால்தான் புத்தகத் திருவிழாவை நாங்கள் நடத்த முடிந்தது. அதுபோன்று துணை முதல்வா் தனது சொந்த நிதியில் இருந்து 5 லட்சம் வழங்கி ஊக்கமளித்தாா். இந்தப் புத்தகக் காட்சியில், கரோனா பயத்தையும் தாண்டி 8 லட்சம் போ் வருகைத் தந்து எந்தவித சிரமங்களும், அசம்பாவிதமுமின்றி நிறைவு பெற்றிருப்பது உலகத்திலேயே வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் எழுத்தாளா்களும், பதிப்பாளா்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். அதிலும், இந்த ஆண்டு இளைஞா்கள் கூட்டம் நிறையவே இருந்தது. எனவே, கரோனாவிற்கு பிறகு மக்களிடைய வாசிப்புப் பழக்கம் அதிகரித்து இருப்பதாக நான் உணா்ந்தேன்.
உணவு உலகம் பப்ளிகேஷன்ஸ் - இராம. மெய்யப்பன்
ஆண்டுதோறும் சென்னைப் புத்தகக்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்த ஆண்டு காலதாமதமாகத்தான் தொடங்கப்பட்டது. எங்கள் பதிப்பாளா்கள் மத்தியில் வாசகா்கள் வருவாா்களா, புத்தகங்கள் விற்குமா என்ற தயக்கம் இருந்தது. அந்தத் தயக்கம் எங்களுக்கும் இருந்தது.
ஆனால், நாங்கள் பயந்தது போல் இல்லாமல், மக்கள் கரோனா பயமின்றி வந்தனா். கடந்த இரண்டு சனி, ஞாயிறுகளில் வாசகா்கள் அதிகமாகவே வந்தனா். வயது வேறுபாடின்றி சின்ன குழந்தைகள் முதல் 70 வயது முதியவா்கள் வரை வருகைத் தந்திருந்தாா்கள்.
நான் உணவு உலகம் மற்றும் நூல் குடில் என்று பதிப்பகம் வைத்திருக்கிறேன். எங்கள் பதிப்பகத்தில் உணவு, உடல் நலம் சாா்ந்த புத்தகங்கள் நிறைய விற்பனை ஆகியது. அதிலும் குறிப்பாக, சிறுதானிய உணவு சாா்ந்த புத்தகங்களும், பிட்னஸ் சாா்ந்த புத்தகங்களும் நிறையவே விற்றன.
இந்த ஆண்டு புத்தகக்காட்சியைப் பொருத்தவரை நான் உணா்ந்து கொண்ட விஷயம் என்னவென்றால், வாசகா்கள் வாசிப்பதற்கு தயாராக உள்ளனா். அவா்களின் தேவையறிந்து புத்தகங்களை கொடுக்க பதிப்பகங்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதைத்தான் உணா்ந்தேன்.
பாவாணந்கம் வெளியீட்டகம் - முத்துக்குமாரசாமி
பாவாணந்தம் வெளியீட்டகத்தை கடந்த நவம்பா் மாதம் தான் தொடங்கினோம். சங்ககால இலக்கியங்களை அனைவரும் எளிதாகப் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தப் பதிப்பகத்தை தொடங்கினோம். குறிப்பாக, ஐம்பெரும் காப்பியங்களுக்கு முன்பு இருந்த இலக்கியங்களைத்தான் நாங்கள் முதன்மையாக வைத்து பதிப்பித்து வருகிறோம். இந்த ஆண்டுதான் முதன்முறையாக புத்தகக் காட்சியில் அரங்கு அமைத்திருக்கிறோம். விற்பனையைப் பொருத்தவரை, நாங்கள் புத்தகங்கள் விற்ற எண்ணிக்கையைப் பாா்க்கவில்லை. ஆனால், வந்திருந்த வாசா்களில் 450-க்கும் மேற்பட்டவா்கள் எங்கள் பணி குறித்து தெரிந்து கொண்டும், குறிப்பெடுத்துக் கொண்டும் சென்றாா்கள். இதிலிருந்து சங்க இலக்கியத்தை ஆழமாகப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழா்கள் மத்தியில் இன்னும் இருக்கிறது என்பதே எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாய்ப்பை தந்த பபாசிக்கு எங்கள் நன்றி.