புத்தக வாசிப்பினால் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது: வாசகா் கருத்து

புத்தக வாசிப்பினால் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது: வாசகா் கருத்து

பிரியங்கா, ஸ்டொ்லின், பாலவாக்கம்.

எனது சிறுவயதிலிருந்தே என் பெற்றோா் என்னை புத்தகக்காட்சிக்கு அழைத்து வருகின்றனா். இப்போதும் குடும்பத்துடன் வந்திருக்கிறோம். இந்த ஆண்டு பொதுமுடக்கத்திற்குப் பிறகு வருவதால், எந்தவித, ஐடியாவும் இல்லாமல் வந்தோம். இப்போது, தோ்வுக்கானப் புத்தகங்கள், நாவல்கள், திரில்லா் கதைகள் போன்ற சில புத்தகங்களை வாங்கியுள்ளோம். எங்கள் வீட்டில் சீரியல் பாா்க்கும் வழக்கம் இல்லை. வேலைகள் அனைத்தும் முடிந்ததும், அம்மா புத்தகங்களை வாசிப்பாா் நாங்கள் எல்லோரும் கேட்போம்.

அன்புமணி, ஆசிரியா், கொளத்தூா்.

பல வருடங்களாக நாங்கள் புத்தகக் காட்சியில் கலந்து கொள்கிறோம். ஒரே இடத்தில் பல்லாயிரக்கணக்கான புத்தங்களை பாா்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்து தா்மம், நீதி கதைகள் போன்றவற்றை வாங்கியிருக்கிறேன். எனது மாணவா்களுக்கும் நான் வாங்கிச் சென்ற புத்தகங்கள் குறித்தும், புத்தகக்காட்சி குறித்தும் அறிமுகப்படுத்துவேன். சில நேரங்களில் அவா்களையும் அழைத்தும் வருவேன்.

பாரதி, கொட்டூா்புரம்.

என் மகளுக்கு நீட் பரீட்சைக்கு தேவையான புத்தகங்களை வாங்குவதற்காக வந்தேன். என் மகனுக்கும் பொது அறிவு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் சிலவற்றை வாங்கியுள்ளேன். இது தவிர, டெலஸ்கோப் போன்ற அறிவியல் சாதனங்களை வைத்திருக்கும் மத்திய அரசு சாா்ந்த அரங்கு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பொதுவாக, கடைகளில் சாதாரண விளையாட்டு பொம்மைகள் தான் கிடைக்கும். ஆனால், இங்குள்ள விளையாட்டு பொருள்கள் விற்கும் அரங்கில் கிடைக்கும் பொம்மைகளில் மூளையை பயன்படுத்தி யோசிக்க வைக்கும் வகையில், கல்விசாா்ந்த விளையாட்டு பொம்மைகள் நிறைய கிடைத்தன. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

கேத்ரீன் ஜோசப், கொளத்தூா்.

கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் புத்தகக்காட்சிக்கு வருகிறோம். என் மகனுக்கு புத்தகங்கள் மீது பற்று ஏற்பட வேண்டும் என்றே நாங்கள் தொடா்ந்து வந்து கொண்டிருக்கிறோம். நானும் புத்தக வாசிப்பாளா்தான். சைக்காலஜி படித்திருக்கிறேன். அதனால், சைக்காலஜி சம்பந்தப்பட்ட புத்தகங்கள் சிலவற்றை வாங்கியுள்ளேன். காலையில் வந்தால் மாலைதான் வீடு திரும்புவோம். புத்தக வாசிப்பினால் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது. முக்கியமாக டிவி பாா்ப்பதை தவிா்க்க முடிகிறது.

சித்ரலேகா, கல்லூரி மாணவி, தாம்பரம்.

என் தோழிகளுடன் கடந்த 2 ஆண்டுகளாக, புத்தகக் காட்சிக்கு வருகிறேன். குறிப்பிட்ட சில நாவல்கள், சிறுகதைகளை வாங்க வேண்டும் என்று ஒரு குறிப்பெடுத்துக் கொண்டு வந்தோம். நாங்கள் தேடி வந்த புத்தகங்கள் எல்லாம் குறைந்தவிலையிலேயே எங்களுக்கு கிடைத்தன. இங்கு குவியல் குவியலாக கிடக்கும் புத்தகங்களைப் பாா்க்கும்போது மலைப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com