கடன் வாங்குவதற்கான கணக்கு

கடன் வாங்குவதற்கான கணக்கு

நுகர்வுக் கலாசாரம் பெருகியுள்ள இன்றைய நிலையில் கடனில்லாமல் யாருமே இருக்க முடியாது.

நுகர்வுக் கலாசாரம் பெருகியுள்ள இன்றைய நிலையில் கடனில்லாமல் யாருமே இருக்க முடியாது. வங்கிக் கணக்கில் வரும் சம்பளத் தொகையை வைத்தே கடன் வழங்கும் நிறுவனங்கள் நமக்கு வலை வீச தொடங்கிவிடுகின்றன. அக்கம்பக்கம், சுற்றம், உறவுகளை விட நாம் குறைந்துவிடவில்லை என்று காட்டுவதற்காவாவது பொருள்களை வாங்க வேண்டியுள்ளது. நம்மை கடனாளியாக்கும் வரை நிதி நிறுவனங்கள் காட்டும் முகம் வேறு... கடன் வாங்கியபிறகு காண்பிக்கும் முகம் வேறு.

இதைத் தவிர்க்க, நமது சக்திக்கு ஏற்ப கடன் வாங்க வேண்டும். அதற்கும் விதிகள் உள்ளன.

அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

எந்தக் கடனாக இருந்தாலும் நமது மாத வருமானத்தில் 50 சதவீதத்துக்கு மேல் போகக்கூடாது. (வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்கள் இதை அடிப்படை விதியாக வைத்துள்ளன. அதன்படி தான் கடன் தொகை, காலம் போன்றவற்றை முடிவு செய்கின்றன.)

வீட்டுக்கடன் இருந்தால் பிற கடன்களை வாங்கும் முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். வீட்டுக்கடன் வாங்கி சில ஆண்டுகள் ஆகியிருந்தால், மாத வருமானமும் அதிகரித்திருந்தால், அடுத்த கடன்களை வாங்கலாம்.

வாகனக் கடன் என்றால் அதன் மாதத் தவணை, மாத வருமானத்தில் 15 சதவீதத்துக்கு மேல் போகக் கூடாது. தனிநபர் கடன் என்றால் மாதத் தவணை வருமானத்தில் 10 சதவீதமாக இருக்க வேண்டும்.

அடுத்தது, தவணைக் காலம். தவணைக் காலத்தை முடிந்தவரை குறைப்பது நல்லது. இதன் மூலம் பல ஆண்டுகளுக்கு கடனாளியாக காலம் தள்ளுவதை தவிர்க்கலாம். சம்பளத்தில் சிறு உயர்வோ, கூடுதல் தொகைகளோ கிடைத்தால், அதை வைத்து தவணைத் தொகையை அதிகரிப்பது நல்லது.

உதாரணமாக ரூ. 50 லட்சத்தை 10 சதவீத ஆண்டு வட்டிக்கு 20 ஆண்டு காலக் கடனாக ஒருவர் வாங்கியதாக வைத்துக்கொள்வோம். அவரது மாதாந்தர தவணைத் தொகை

ரூ. 48, 251. தனது தவணைத் தொகையை ஆண்டுக்கு 5 சதவீதம் அதிகமாக செலுத்தினால், 12 ஆண்டுகளில் அவரது கடன் முடிந்துவிடும். இதையே 10 சதவீதம் அதிகரித்துக் கட்டினால் வெறும் 9 ஆண்டு, 3 மாதங்களில் கடன் தீர்ந்துவிடும். எனவே கூடுதலாக கிடைக்கும் வருவாயை கடனுக்கு செலுத்துவது சாலச் சிறந்தது.

கடன் வாங்குவது குறித்த சில முக்கிய விதிகள்: வாங்கியுள்ள கடனுக்கான வட்டி விகிதங்களை அவ்வப்போது கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். சில சமயங்களில் நமக்கே தெரியாமல் வட்டி விகிதத்தை உயர்த்தியிருப்பார்கள்.

அதேபோன்று சில வங்கிகள் கடன் வழங்க சலுகைகளை அறிவிப்பார்கள். அப்போது, நாம் வாங்கியுள்ள கடனையும், சலுகையில் வழங்கப்படும் கடனையும் ஒப்பிட்டுப்பார்த்து புதிய கடனுக்கு மாறிக் கொள்ளலாம். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவெனில் பழைய கடனை முடிக்கும் போது அபராதத் தொகை, புதிய கடனுக்கான கட்டணங்களை ஒப்பிட்டுப் பார்த்து கிடைக்கும் பலன்கள் 5 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என்றால் தான் மாற வேண்டும். இல்லையேல் பழைய கடனிலேயே தொடர்வதில் தவறில்லை.

பல இடங்களில் கடன் வாங்கியிருந்தால், ஒரு நிலையில் அனைத்தையும் முடித்து ஒரே இடத்துக்கு கடனுக்கு மாற வேண்டும். குறிப்பாக கூடுதல் வட்டிக்கு வாங்கப்பட்ட கடன்களை விரைவாக முடிக்கப்பட வேண்டும். குறைந்த வட்டிக்கு கடன் கிடைத்தால், அதை வாங்கி கூடுதல் வட்டிக் கடன்களைத் தீர்ப்பதும் நல்ல நிதி நிர்வாகமாகவே கருதப்படும்.

சுருக்கமாகக் கூறினால், கடன் வாங்கும் முன் அது தேவையா என்பதை முதலில் சிந்திக்க வேண்டும். வாங்கியபிறகு அதை அடைக்கும் வழிகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். இவ்விரண்டையும் சரியாகச் செய்தால் வாழ்க்கைச் சக்கரம் சிக்கலின்றி செல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com