வீட்டுச் செலவில் சேமிப்பு

இத்தனை ஆண்டுகளாக வேலை பார்த்து என்ன சேமித்து வைத்திருக்கிறாய்...?
வீட்டுச் செலவில் சேமிப்பு

இத்தனை ஆண்டுகளாக வேலை பார்த்து என்ன சேமித்து வைத்திருக்கிறாய்...? இது பெரியவர்கள் இளம் தலைமுறையைப் பார்த்துக் கேட்கும் வழக்கமான கேள்வி... வரவுக்கும் செலவுக்குமே சரியாக இருக்கிறது... இதில் எங்கிருந்து சேமிக்க...? இது இளைஞர்களின் வழக்கமான பதில்.

ஆனால் மனம் இருந்தால் சேமிக்க முடியும் என்பதுதான் உண்மை. ஒரு மாதம் ரூ.50 உங்களுக்கு திடீரென சம்பள உயர்வு கிடைக்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்... செலவோடு சேர்த்து அதையும் காலி செய்வீர்கள் என்றால் அது தவறு... அது சேமிக்க வேண்டிய தொகை. காரணம், நமது மாதாந்திர செலவு ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. கூடுதல் வருமானம் கிடைத்தால் அது கட்டாயம் சேமிக்கப்பட வேண்டியது என்ற சிந்தனையை வளர்த்தால்தான் சேமிக்க முடியும். அதேபோல் திடீர் செலவுகளை எதிர்கொள்ளவும் சேமிப்பு தேவை.

இப்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் 100 யூனிட் மின்சாரத்தை அரசு இலவசமாகத் தருகிறது. இந்தத் தொகை குடும்பங்களுக்கு மிச்சம்தான். அதை சேமிக்க வேண்டும். இப்படி சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால் கணிசமாக சேமிக்க முடியும்.

குறிப்பாக மின்சாதனங்களை முறையாக பராமரித்தால் அதன் மின் துய்ப்பைக் குறைக்க முடியும். வீட்டில் உள்ள ஏசி, மின்விசிறி, குளிர்சாதனப் பெட்டி போன்றவற்றை பராமரிப்பதன் மூலம் 15% வரை மின்கட்டணத்தை மிச்சப்படுத்தலாம். குழல் விளக்குகளுக்குப் பதில் எல்இடி விளக்குகளைப் பயன்படுத்தினால் மேலும் 15% வரை மிச்சமாகும்.

சாதாரணமாக குழல் விளக்குகள் 40 வாட்ஸ் மின்சாரத்தை பயன்படுத்தும் என்றாலும் டிரைவிங் கரண்ட் எனப்படும் இயக்கச் செய்யும் மின்சாரம் குறைந்த பட்சம் 10 வாட்ஸ் சேர்ந்து 50 வாட்ஸ் வரை செலவாகிறது. ஒரு குழல் விளக்கு தரும் வெளிச்சத்தைவிட 20 வாட்ஸ் எல்இடி விளக்கு கூடுதல் வெளிச்சம் தரும்.

அடுத்தது வாகனப் பயன்பாடு. அத்தியாவசியப் பயணத்துக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். அருகிலுள்ள இடங்களுக்கு நடந்து சென்றால், வாகன எரிபொருள் மிச்சம், உடலுக்கும் ஆரோக்கியம்.

சமையல் எரிவாயுவைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தினால் 5 நாள்கள் கூடுதலாக சிலிண்டரைப் பயன்படுத்தலாம். குளிர்சாதனப் பெட்டிகளில் இருந்து பால், காய்கறிகள் போன்றவற்றை எடுத்து அப்படியே அடுப்பில் வைப்பது கூடாது. அரை மணி நேரம் முன்னதாக அவற்றை வெளியே எடுத்துவைத்து அதன்பின் அடுப்பில் வைத்தால் எரிவாயு பயன்பாடு கணிசமாகக் குறையும்.

ஒவ்வொரு செலவையும் தேவையா என நினைத்துப் பார்த்து செலவழிக்கத் தொடங்கினால் மிகப்பெரிய அளவில் சேமிக்க முடியும். 6 மாதம் செய்து பார்த்தாலே மிகப்பெரிய சேமிப்பு கையில் இருக்கும். இப்படி மாதம் ஆயிரம் ரூபாய் மிச்சப்படுத்தி, உங்கள் குழந்தைகள் பெயரில் பரஸ்பர நிதியில் மாதாந்திர முதலீட்டுத் திட்டம் (எஸ்ஐபி) போன்றவற்றில் முதலீடு செய்துவைத்தால், பெரியவர்களாகும்போது அவர்களின் கல்விச் செலவு, திருமணச் செலவு போன்றவற்றுக்கு இந்தத் தொகை உதவும்.

இதைச் செயல்படுத்துவதற்கு மிகப் பெரிய தடைக்கல்லாக இருப்பது, "இதிலென்ன பெரிதாக மிச்சம் பிடித்துவிட முடியும்' என்ற எண்ணம்தான். அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு, இதை செய்துதான் பார்ப்போமே என முயற்சியுங்கள். முயற்சிக்கு எந்தச் செலவும் இல்லையே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com