2017: "குறைந்த ரொக்கப் பயன்பாடு' ஆண்டு!

நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் 2017-ஆம் ஆண்டை "குறைந்த ரொக்கப் பயன்பாடு' ஆண்டாக அறிவிக்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி)
2017: "குறைந்த ரொக்கப் பயன்பாடு' ஆண்டு!

நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் 2017-ஆம் ஆண்டை "குறைந்த ரொக்கப் பயன்பாடு' ஆண்டாக அறிவிக்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) யோசனை தெரிவித்துள்ளது.
வர்த்தகர்களை டிஜிட்டல் பரிவர்த்தனையைக் கையாள வலியுறுத்தி 60 நாள் தேசிய அளவில் பிரசாரம் மேற்கொள்ள அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது, என்கிறார் அந்தக் கூட்டமைப்பின் செயலாளர் பிரவீண் கண்டேல்வால்.
இப்பிரசார இயக்கம் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி பிப்ரவரி இறுதி வாரத்தில் நிறைவடையும் என்கிறார் அவர்.
அவர் மேலும் கூறகையில், பிரசாரத்தின்போது "டிஜிட்டல் பேமண்ட்' தொடர்பாக மாநில மாநாடுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த மாநாட்டில் வர்த்தகர்கள் சங்கங்களின் முக்கியப் பிரதிநிதிகள் பங்கேற்பர். இத்துடன் நாடு முழுவதும் உள்ளூர் வர்த்தகர் சங்கங்களுடன் இணைந்தும் பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்.
மின்னணு மூலம் பணம் செலுத்தும் முறையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான கடைகள், வணிக வளாகங்களில் சுவரொட்டி மூலமும் பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். சமூக வலைதளங்கள் மூலம் குறும் விடியோக்கள், வாட்ஸ் அப் கிளிப்புகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு டிஜிட்டல் பிரசாரம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவை தவிர நாடு முழுவதும் உள்ள முக்கியச் சந்தைகளில் எதிர்காலத்தில் வணிகத்தில் முக்கிய அம்சமாக இடம்பெறப் போகும் "டிஜிட்டல் பரிவர்த்தனை' குறித்து பிரசாரம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, "குறைந்த ரொக்கப் பயன்பாடு' தொடர்பாக நடைபயணம், வீதி நாடகங்கள் உள்ளிட்ட வித்தியாசமான நிகழ்வுகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
மேலும், வணிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டவர்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்த கருத்தரங்கங்கள், பயிலரங்கங்கள் உள்ளிட்டவை நடத்தப்படும். ஜிஎஸ்டி முறை விரைவில் அறிமுகமாகவுள்ள நிலையில், கடன் அட்டை (கிரெடிட் கார்டு), பற்று அட்டை (டெபிட் கார்டு), என்ஐஎஃப்டி, ஆர்டிஜி ஆகியவற்றைக் கொண்டு ஜிஎஸ்டி வரியைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இதையடுத்து, அனைத்து வர்த்தகர்களும் டிஜிட்டல் பரிவர்த்தனையைப் பின்பற்ற வேண்டும். வரிகளை ரொக்கமில்லாமலும், காசோலை மூலமும் செலுத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. வெவ்வேறு மாநில அரசுகள் பல்வேறு வழிகளில் பெறும் வருவாய் தொகையை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் கையாள்வதற்கு தீவிரமாக சிந்தித்து வருகின்றன. எனவே, இத்தகைய சூழலில் டிஜிட்டல் பரிவர்த்தனையைப் பின்பற்றுவது வர்த்தகர்களுக்குப் பெரும் பயனை அளிக்கும்.
நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், 2017-ஆம் ஆண்டை "குறைந்த ரொக்கப் பயன்பாடு' ஆண்டாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளோம் என்றார்
பிரவீண் கண்டேல்வால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com