பின்னலாடைத் தொழிலுக்கு தனி வாரியம் அமையுமா?

பின்னலாடைத் தொழிலுக்கு தனி வாரியம் அமையுமா?

தமிழகத்துக்கு விரைவில் புதிய ஜவுளிக் கொள்கை வரையறுக்கப்படும் என்ற அறிவிப்பு மாநில அரசுத் தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது.

தமிழகத்துக்கு விரைவில் புதிய ஜவுளிக் கொள்கை வரையறுக்கப்படும் என்ற அறிவிப்பு மாநில அரசுத் தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது. இது பின்னலாடைத் தொழில் துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பை அத்தொழில் துறையினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்துக்கென தனி ஜவுளிக் கொள்கை எதுவும் இதுவரை வரையறை செய்யப்படாத நிலையில், புதிய ஜவுளிக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதற்கேற்ப, புதிய ஜவுளிக் கொள்கையை உருவாக்குவதற்கான முயற்சியில் மாநில அரசு தற்போது ஈடுபட்டுள்ளது. இதற்காக ஜவுளித் துறையினரிடம் கருத்துக் கேட்கப்பட்டு வருகிறது. ஜவுளித் தொழில் அமைப்புகள் சார்பில் ஜவுளிக் கொள்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்த தொகுப்புகளும் அரசிடம் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதில், பின்னலாடைத் தொழில் துறையினர் சார்பிலும் பல்வேறு முக்கியக் கோரிக்கைகள் அரசிடம் முன் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஜவுளித் துறையில் பின்னலாடை உற்பத்தி பிரதானத் தொழிலாக உள்ளது. இதில், திருப்பூரில் இருந்து மட்டும் கடந்த ஆண்டில் ரூ. 25 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதியும், ரூ. 20 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டு வர்த்தகமும் நடைபெற்றுள்ளது.
சுமார் 7 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் மையமாக உள்ளதால், மத்திய, மாநில அளவில் திருப்பூர் பின்னலாடைத் துறை தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது.
இந்நிலையில், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட தொழில் அமைப்புகள் சார்பில் புதிய ஜவுளிக் கொள்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் அடங்கிய தொகுப்பு அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், பின்னலாடைத் துறைக்கென தனி வாரியம், பிற மாநிலங்களால் தொழில் வளர்ச்சிக்கு வழங்கப்படும் சலுகைகள், தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற பகுதிகளுக்கு பின்னலாடைத் தொழிலைக் கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் இத்துறையின் எதிர்கால வளர்ச்சி மற்றும் தேவைகளைக் கருத்தில் கொண்டே வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அடுத்தகட்ட வளர்ச்சிக்கு...
இதுகுறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கச் செயலாளர் டி.ஆர்.விஜயகுமார் கூறியதாவது: தெலங்கானா, ஆந்திரம், குஜராத், மகாராஷ்டிரம், ஒடிஸா மாநில அரசுகள் அவர்களது மாநிலங்களில் தமிழகப் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தொழில் தொடங்க, அதிக அளவிலான முதலீட்டுக்கான மூலதன மானியம், மலிவு விலையில், தொய்வில்லாத மின்சார வசதி, இலவசக் கட்டட வசதி, பற்றாக்குறை இல்லாத தொழிலாளர்கள் வசதி, ஊக்கத் தொகை உள்ளிட்ட சலுகைகளை வழங்க முன் வந்துள்ளனர்.
இதனாலேயே தமிழகத்தில் இருந்து உற்பத்தியாளர்கள் மேற்கூறப்பட்ட மாநிலங்களுக்கு சென்று தொழில் தொடங்குகின்றனர். இது, நமது மாநில வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. அதே சலுகைகள், இடம் ஆகியவற்றை தமிழக அரசு வழங்கினால், தமிழகத்தில் வேலைவாய்ப்பில்லாத மாவட்டங்கள் அனைத்துக்கும் பின்னலாடைத் தொழிலைக் கொண்டு சென்று வளர்ச்சியை எட்ட முடியும். இதற்காக அந்த மாநில அரசுகளின் ஜவுளிக் கொள்கைகளையும் தமிழக அரசிடம் வழங்கியுள்ளோம்.
மேலும், சாய ஆலைகளுக்கு சுத்திகரிப்புக் கட்டமைப்புடன் கூடிய பூங்கா, தொழிலாளர்களுக்கு வீடுகள், தங்கும் விடுதிகள் மற்றும் இலவசக் கல்வி, மருத்துவம், இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள், நகரத்தின் கட்டமைப்பு மேம்பாடு, ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கான 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட அம்சங்களையும் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.
குறிப்பாக, மத்திய, மாநில அரசுகள் சார்பில் பின்னலாடைத் துறைக்கென தனி வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதைத் தீவிரமாக வலியுறுத்தி வருகிறோம்.
தனி வாரியம் இருந்தால் மட்டுமே தொழில் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை அரசிடமிருந்து கேட்டுப் பெற முடியும். தேவைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியும். அமைப்புகள் மூலமாக மட்டுமே கோரிக்கை வைத்து, தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வது எளிதான விஷயமாக இல்லை.
தனி வாரியக் கோரிக்கை மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஒப்புதல் அளிக்கும் நிலையில், மீண்டும் கால தாமதம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, மாநில அரசு விரைவில் வெளியிடவுள்ள ஜவுளிக் கொள்கை அறிவிப்பில் தனி வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜவுளித் தொழிலைக் காக்கும் வகையில் புதிய ஜவுளிக் கொள்கை அமைய வேண்டும். அதற்கேற்ப அரசு திட்டமிட வேண்டும் என்றார்.
 

அனைவரின் வளர்ச்சிக்காகவும்...

பெரிய நிறுவனங்கள் தொடங்கி, சிறிய ஏற்றுமதியாளர்கள் வரை அனைவரது வளர்ச்சிக்கும் உரியதாக மாநில அரசின் புதிய ஜவுளிக் கொள்கை அமைய வேண்டும். அதையே அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்கிறார் இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பின் தென்மண்டலத் தலைவர் ஏ.சக்திவேல்.
ஜவுளித் தொழில் துறையினர் தற்போது சந்தித்து வரும் நெருக்கடியான சூழலில், ஜவுளித் தொழிலைப் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசானது புதிய ஜவுளிக் கொள்கையை, போதிய ஊக்குவிப்பு மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளுடன் விரைவாக வெளியிட வேண்டியது அவசிமாகும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com