60 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்ய ஹோண்டா இலக்கு

நடப்பு நிதி ஆண்டில் 60 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்ய ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அதன் தலைவர் மினோரு காட்டோ
ஹோண்டாவின் புதிய கிளிக் ஸ்கூட்டரை சென்னையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யும் அந்நிறுவனத்தின் தலைவர் மினோரு காட்டோ, விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் யத்வீந்தர் சிங் குலேரியா.
ஹோண்டாவின் புதிய கிளிக் ஸ்கூட்டரை சென்னையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யும் அந்நிறுவனத்தின் தலைவர் மினோரு காட்டோ, விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் யத்வீந்தர் சிங் குலேரியா.

நடப்பு நிதி ஆண்டில் 60 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்ய ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அதன் தலைவர் மினோரு காட்டோ கூறினார்.
சென்னையில் அந்நிறுவனத்தின் புதிய 'கிளிக்' ஸ்கூட்டர் மாடலை திங்கள்கிழமை அறிமுகம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கர்நாடக மாநிலம் நர்சபுராவில் உள்ள ஹோண்டா ஆலையில் கூடுதலாக 6 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யும் விதத்தில் விரிவாக்கம் செய்துள்ளோம். இது ஒட்டுமொத்த விற்பனையை அதிகரிக்கச் செய்ய உதவும். விற்பனையானது ஆண்டு விகிதத்தில் 20 சதவீத வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த 2016-2017 நிதி ஆண்டில் மொத்தம் 50,08,230 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்தோம். கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி 42 சதவீதம் அதிகரித்தது. ஏற்றுமதியான இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 2.83 லட்சமாகும். நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் - ஜூலை கால அளவில் 1.14 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளோம் . தமிழ்நாடு, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் ஸ்கூட்டர் விற்பனை கூடுதலாக உள்ளது. ஒட்டுமொத்த விற்பனை வளர்ச்சி விகிதத்தில் இந்த மூன்று மாநிலங்களின் பங்களிப்புதான் அதிகம். கர்நாடகம், கேரளம், தெலங்கானாவில் இரு சக்கர வாகனங்கள் விற்பனையில் ஹோண்டா முதலிடத்தில் உள்ளது.
நாட்டின் இரு சக்கர வாகன சந்தையைப் பொருத்தவரையில், தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்கள் 28 சதவீத சந்தைப் பங்களிப்பைக் கொண்டுள்ளன. இதில் ஹோண்டா 35 சதவீத சந்தைப் பங்களிப்பைக் கொண்டிருக்கிறது.
வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் அனைத்து வாகனங்களும் மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது என்றார் அவர். புதிதாக அறிமுகமான கிளிக் மாடல் ஸ்கூட்டரின் சென்னை விற்பனையக விலை ரூ. 44,524. இதன் என்ஜின் திறன் 110 சிசி. அதிகபட்சமாக மணிக்கு 83 கி.மீ. வேகத்தில் செல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com