இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டில் மாற்றமில்லை: எஸ் அண்டு பி

இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டில் மாற்றமில்லை: எஸ் அண்டு பி

சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்ட் அண்டு புவர், இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டில் மாற்றம் எதையும் செய்யாமல், பழைய நிலையே தொடரும் என்று அறிவித்துள்ளது. 

சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்ட் அண்டு புவர், இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டில் மாற்றம் எதையும் செய்யாமல், பழைய நிலையே தொடரும் என்று அறிவித்துள்ளது. 
எஸ் அண்டு பி நிறுவனத்தின் இந்த அறிவிப்பை மத்திய அரசு நியாயமற்ற நடவடிக்கை என்று விமர்சித்துள்ளது. 
கடன் தகுதி மதிப்பீடு குறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீடு 'பிபிபி-மைனஸ்' நிலையானது என்ற அளவிலேயே தொடர்ந்து நீடிக்கும். குறைந்த தனிநபர் வருமானம், கடன் சுமை அதிகரிப்பு போன்றவை இடர்பாட்டை ஏற்படுத்தும் அம்சங்களாக உள்ளன. அதேசமயம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவான நிலையில் உள்ளது.
சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு மற்றும் நிதி நம்பகத்தன்மை பெரிய அளவில் மேம்பட்டுள்ளது.
உயர்மதிப்பு கரன்ஸி வாபஸ், ஜிஎஸ்டி அமல் ஆகிய நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சியில் திடீர் தடையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், பிரதமர் மோடி அரசு மேற்கொண்டு வரும் சீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்கால வளர்ச்சியை ஊக்குவிக்கும். 
மத்திய அரசின் இடைக்கால நடவடிக்கையான, பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமூலதனம் அளிக்கும் திட்டம் பொருளாதாரத்தில் புதிய கடன் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும். இதனால், அடிப்படை கட்டமைப்பு, சாலை வசதி உள்ளிட்ட துறைகளில் முதலீடு அதிகரித்து பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கி விட வழிவகுக்கும். 2017-2020 இல் இந்தியாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக இருக்கும் என்று எஸ் அண்டு பி தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்திரா கூறியதாவது: எஸ் அண்டு பி நிறுவனம் மிகுந்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் இந்த முடிவை எடுத்துள்ளது. இருப்பினும், மத்திய அரசு மேற்கொண்டு வரும் சீரமைப்பு திட்டங்களின் எதிரொலியால் அடுத்த ஆண்டில் இந்தியாவின் கடன் தகுதியை எஸ் அண்டு பி நிச்சயம் உயர்த்தும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com