இளமையின் இனிமை தொடர...

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ஆம் தேதி உலக முதியோர் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இளமையின் இனிமை தொடர...

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ஆம் தேதி உலக முதியோர் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தத் தினத்தில் முதியோர் தங்களது உடல் நலனில் மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகவும் வலுவான நிலையில் தாங்கள் இருப்பதற்கு உரிய கவனத்தைச் செலுத்த வேண்டும்.
அரசுத் துறை, தனியார் நிறுவனங்கள் உள்பட ஏதாவது ஒன்றில் சுமார் 35 ஆண்டுகள் தொடர்ந்து உழைத்த பிறகு அன்றாடச் செலவுக்கு யாரையும் எதிர்பார்க்காமல் ஓய்வு காலத்தை நிம்மதியாகக் கழிக்க அனைவரும் திட்டமிடுதல் அவசியம். இந்தத் திட்டமிடுதலை இளமைப் பருவத்தில் செய்வது நல்லது.
2004-இல் தொடக்கம்...என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசுப் பணியில் புதிதாகச் சேர்ந்த ஊழியர்களுக்காக 2004-இல் மத்திய அரசு தொடங்கியது. பின்னர், அரசு ஊழியர்கள் மட்டுமின்றி தனியார் நிறுவன ஊழியர்கள் உள்பட இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்பிஎஸ்) முதலீடு செய்து பயன் அடையலாம் என 2009-இல் மத்திய அரசு அறிவித்தது. இந்தத் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் வருமான வரிச் சலுகை, வயது வரம்பு உயர்வு எனத் தொடர்ந்து மக்களுக்குப் பலன் அளிக்கக்கூடிய அறிவிப்புகள் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
தேசிய ஓய்வூதியத் திட்டம் ஏன்? அரசு ஊழியர்களைப் பொருத்தவரை ப ணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, மாதந்தோறும் ஓய்வூதியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தனியார் நிறுவன ஊழியர்களைப் பொருத்தவரை,
ஒரே நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியிருந்தால்தான் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) ஆணையத்திடமிருந்து ஆயுள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும். அதுவும் பணிக் காலத்தில் செய்த பங்களிப்புக்கு ஏற்ப சொற்ப தொகைதான் மாதந்தோறும் ஓய்வூதியமாகக் கிடைக்கும் நிலை உள்ளது. தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்வோருக்கு பி.எஃப் பிடித்தம் பங்களிப்பு இல்லாத நிலையும் உள்ளது. 
அரசு, தனியார் நிறுவனங்களில் அல்லாமல் சுய தொழில் செய்வோர், வியாபாரிகள் உள்பட ஏனையோர் தங்களது ஓய்வு காலத்தில் குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியமாகப் பெறும் நோக்கத்துடன் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது.
வெளிப்படைத்தன்மை: தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் நாடு தழுவிய அளவில் கோடிக்கணக்கில் பெரும் தொகை முதலீடு செய்யப்படுவதால், ""பென்ஷன் ஃபண்ட் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மென்ட் அத்தாரிட்டி'' (பிஎஃப்ஆர்டிஏ) எனப்படும் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஏற்படுத்தப்பட்டு உறுப்பினர்களின் முதலீட்டுத் தொகை திறம்பட நிர்வகிக்கப்படுகிறது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினர்கள் டெபாசிட் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்து பலன் அளிக்க எஸ்பிஐ பென்ஷன் ஃபண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் உள்பட பங்குச் சந்தையுடன் தொடர்புடைய 6 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினராகச் சேர்ந்து முதலீடு செய்யத் தொடங்கும்போதே மேலே குறிப்பிட்ட நிறுவனங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ள லாம். உறுப்பினர் முதலீடு செய்த தொகை குறித்து இணையதளம் மூலம் தினமும் அறியும் வசதி, நாட்டின் எந்த இடத்துக்குச் சென்றாலும் அல்லது பணி காரணமாக இடமாற்றம் ஏற்பட்டாலும் மாறாத தன்மை கொண்ட நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் மற்றும் அடையாள அட்டை என தேசிய ஓய்வூதியத் திட்டம் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுள்ளது.
வயது வரம்பு என்ன? தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் 18 வயது முதல் 65 வயது வரை உள்ளோர் சேர்ந்து பலன் அடையலாம். அதிகபட்ச வயது வரம்பை 60-லிருந்து 65-ஆக பிஎஃப்ஆர்டிஏ அதிகரித்துள்ளது. ஆன்லைன் முறையில் தொடக்கத்தில் ரூ.500 செலுத்தி கணக்கைத் தொடங்கலாம்; ஓர் நிதியாண்டில் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.6,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
இரண்டு வகையான முதலீட்டுத் திட்டங்கள்: தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இரண்டு வகையான முதலீட்டுத் திட்டங்கள் --- "டயர் 1', "டயர் 2' என்ற பெயர்களில் செயல்படுத்தப்படுகின்றன. "டயர் 1' என்பது, பங்குச் சந்தையுடன் இணைந்த, ஓய்வு காலத்தில் தொடர்ந்து மாதந்தோறும் ஓய்வூதியம் அளிக்கும் திட்டமாகும். "டயர் 2' என்பது வங்கி சேமிப்புக் கணக்கைப் போன்று டெபாசிட் செய்த தொகை முழுவதையும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் சேர்த்து திரும்பப் பெறுவதாகும்.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினராகச் சேரும்போது, முதலில் "டயர் 1' பிரிவில் சேருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இத்தகைய நடைமுறையை மத்தி ய அரசு ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆயுள் காலம் முழுவதும் மாத ஓய்வூதியத்தை உறுதி செய்யும் "டயர் 1' திட்டத்தில் (பங்குச் சந்தையுடன் இணைந்த திட்டம்) தொடர்ந்து முதலீடு செய்யப்பட்டு பெருகியுள்ள மொத்தத் தொகையில், முதிர்வு நிலையில் 60 சதவீதத் தொகை மட்டுமே உறுப்பினருக்கு அளிக்கப்படும். மீதமுள்ள 40 சதவீதத் தொகை தொகுப்பு நிதியாகக் கருதப்பட்டு, உறுப்பினரின் ஆயுள் காலம் முழுவதும் மாதந்தோறும் ஓய்வூதியமாக வழங்கப்படும்.
"டயர் 1' திட்டத்தில் சேர்ந்து சில ஆண்டுகள் முதலீடு செய்த பிறகு வங்கி சேமிப்புக் கணக்கைப் போன்ற "டயர் 2' திட்டத்திலும் முதலீடு செய்யலாம். "டயர் 1' திட்டத்தில் முதலீட்டைத் தொடங்கும்போதே "டயர் 2' திட்டத்திலும் முதலீட்டைத் தொடங்கி பயன் அடையலாம்.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர... பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட தேசிய வங்கிகள், தனியார் நிதி அமைப்புகளை பிஎஃப்ஆர்டிஏ அங்கீகரித்துள்ளது. இவற்றை அணுகி தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர முடியும். ஆன்லைன் மூலமாகவும் திட்டத்தில் சேர முடியும். ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்த பிறகு தொடர் நிதி பங்களிப்பை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 
வருமான வரிச் சலுகை: பி.பி.எஃப்., எல்ஐசி பாலிசி பிரீமியம் தொகை உள்ளிட்டவற்றுக்கு வருமான வரிப் பிரிவு 80-சி-இன் கீழ் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் மட்டுமே வருமான வரிச் சலுகை பெற முடியும். தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் ஒரு நிதியாண்டில் முதலீடு செய்யப்படும் தொகையில் வருமான வரிப் பிரிவு 80 சிசிடி (பி) பிரிவின் கீழ் அதிகபட்சம் ரூ.50,000 வரை வரிச் சலுகை பெற முடியும். எனவே, வருமான வரி விதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ள மாத சம்பளதாரர்கள் உள்ளிட்டோர் தேசிய ஓய்வூதியத் திட்டத்திலும் முதலீடு செய்து அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை வருமான வரிச் சலுகையைப் பெற முடியும்.
முதுமையை வெல்ல...பொருள் இல்லார்க்கு இந்த உலக வாழ்க்கை இல்லை என்ற வள்ளுவரின் கூற்றை நினைவில் கொண்டு இளமைப் பருவம் முதல் சேமிப்புப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது சிறந்தது. ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கை முறை, தொடர்ந்து உடல் நலனைப் பராமரிப்பது, நிதி மேலாண்மையில் சிறந்து விளங்கி தேசிய ஓய்வூதியத் திட்டம் போன்றவற்றில் சிறி ய தொகையை தொடர்ந்து முதலீடு செய்வது போன்றவை மூலம் முதுமையை எளிதில் வெல்லலாம்.

தேசிய ஓய்வூதியத் திட்ட இணையதள முகவரிகள்

தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) குறித்து விவரங்களை அறிய
இணையதள முகவரிகள்:
www.npscra.nsdl.co.in 
https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800222080 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com