நெருக்கடியில் பாரம்பரிய ஊத்துக்குளி வெண்ணெய் தொழில்

திருப்பூர் என்றால் பின்னலாடை மையம் என்பது அனைவரது நினைவுக்கு வரும். அதே அளவுக்கு உணவுப் பிரியர்களுக்கு திருப்பூர் என்றால் ஊத்துக்குளி வெண்ணெய் நினைவுக்கு வரும். பாரம்பரியத் தரம் மிக்க ஊத்துக்குளி
நெருக்கடியில் பாரம்பரிய ஊத்துக்குளி வெண்ணெய் தொழில்

திருப்பூர் என்றால் பின்னலாடை மையம் என்பது அனைவரது நினைவுக்கு வரும். அதே அளவுக்கு உணவுப் பிரியர்களுக்கு திருப்பூர் என்றால் ஊத்துக்குளி வெண்ணெய் நினைவுக்கு வரும். பாரம்பரியத் தரம் மிக்க ஊத்துக்குளி வெண்ணெய் மிகவும் பிரசித்தி பெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம் நிறைந்த பகுதியான ஊத்துக்குளியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் குடிசைத் தொழில் போல் தொடங்கப்பட்டது வெண்ணெய் உற்பத்தித் தொழில். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெண்ணெய் உற்பத்தி பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், தரம், சுவை மற்றும் மாறாத மணம் காரணமாக, வெண்ணெய், நெய் என்றாலே ஊத்துக்குளி என்ற பெயர் உண்டாகியுள்ளது.
ஊத்துக்குளியில் இருந்து தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள பல்வேறு நகரங்களுக்கு வெண்ணெய், நெய் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. வாரத்துக்கு 10 டன் முதல் 15 டன் வரை வியாபாரம் நடைபெற்று வந்த இத்தொழில் பல்வேறு காரணங்களால் தற்போது கடும் சரிவை சந்தித்துள்ளது. 
குறிப்பாக, வறட்சியால் பாதிக்கப்பட்ட எருமைப் பால் உற்பத்தி, மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் ஒன்றான ஜி.எஸ்.டி. விதிப்பு போன்றவற்றை முக்கிய காரணங்களாக கூறுகின்றனர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள்.
இந்தியாவில் ஆடம்பரப் பொருள்களின் பட்டியலில் உள்ள வெண்ணெய், நெய் ஆகியவற்றுக்கு 14.5 சதவீதம் விதிக்கப்பட்டிருந்த வரி விதிப்பு ஜி.எஸ்.டி.யில் 12 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் மட்டுமே என்ற அடிப்படையில், இத்தொழிலுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது பூஜ்ய அளவிலிருந்து 12 சதவீதமாக வரி அதிகரித்துள்ளது. இதனால், வெண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு ஒரு கிலோவுக்கு ரூ. 10 லாபம் கிடைக்கும்போது, அரசுக்கு ரூ. 50 வரியாக செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. விலை உயர்வால் பிற மலிவான, தரம் குறைந்த வெண்ணெய், நெய் ஆகியவற்றை மக்கள் தேடத் தொடங்கியுள்ளனர். எனவே விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில் கோகுலாஷ்டமி, ஆயுதபூஜை மற்றும் தீபாவளிக்கான ஆர்டர்கள் 30 சதவீதம் குறைந்து விட்டதாகவும், இதே நிலை தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் இத்தொழில் முற்றிலும் முடங்கி விடும் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

வரி விலக்கு அல்லது வரி குறைப்பு

தொழில் நெருக்கடியை சந்தித்துள்ளது குறித்து ஊத்துக்குளி வெண்ணெய், நெய் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகியும், தொழிலில் ஈடுபட்டுள்ளவருமான கே.சுப்பிரமணியம் கூறியதாவது:
ஊத்துக்குளி வெண்ணெய், நெய் பாரம்பரிய சுவை, மணம் மாறாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் இது முற்றிலும் இயற்கை முறையிலேயே தயார் செய்யப்படுகிறது. இதில், சுவைக்காகவும், நீண்ட நாள்களுக்கு கெடாமல் வைப்பதற்காகவும் பொருள்களை சேர்ப்பதோ, பாலில் இருந்து பாக்டீரியாக்களை நீக்குவதோ கிடையாது. எருமைப் பால் அடர்த்தி அதிகமாகவும், பசும்பால் அடர்த்தி குறைவாகவும் இருக்கும். அதனால் அந்த இரு வகை பால் வெண்ணெய், நெய் சுவையில் வேறுபாடுகள் உண்டு.
எருமைப் பால் தயாரிப்பு விலை அதிகமாகவும், பசும்பால் தயாரிப்பு விலை குறைவாகவும் இருக்கும். ஊத்துக்குளியைப் பொருத்தவரை சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை 30 உற்பத்தி நிறுவனங்கள் இருந்தன. தற்போது வெறும் 15 நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. வறட்சியால் கறவை மாடுகளை பலர் விற்றுவிட்டு, பனியன் தொழிலுக்குச் சென்றுவிட்டனர். தற்போதைய தலைமுறையில் படித்த பிள்ளைகள் விவசாயம், மாடு வளர்ப்பில் கவனம் செலுத்துவதில்லை.
பராமரிக்க ஆள் இல்லாததாலும் கறவை மாடுகள் விற்கப்படுகின்றன. இதனால் பாலில் இருந்து எடுக்கப்படும் மூலப் பொருள் சரியாக கிடைக்காமலும், கூலி உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு இடையில், பெரிய லாபம் இல்லாததாலும் பலர் இத்தொழிலை விட்டுச் சென்று விட்டனர். சமீபத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சியால் பாதிப்பு இன்னும் அதிகமானது.
குறிப்பாக, வெண்ணெய், நெய் உற்பத்தியில் ஒரு கிலோ மூலப் பொருளுக்கு இங்கு ரூ.380 செலவிடப்படுகிறது. ரூ. 10 உற்பத்தி செலவு, ரூ. 10 எங்களுக்கான லாபம் என்ற கணக்கில் வைத்து, இதுவரை வெண்ணெய் கிலோவுக்கு ரூ.400, நெய் ரூ.520}க்கும் அனுப்பி வந்தோம்.
இதற்கிடையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பணப்புழக்கம் குறைந்து தொழில் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதமாக விதிக்கப்பட்டுள்ளதால், வெண்ணெய், நெய் விலையை கிலோவுக்கு ரூ.50, டின்னுக்கு (15 கிலோ) ரூ. 750 உயர்த்தியுள்ளோம். அதற்கு முன் தமிழகத்தில் மட்டும் வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
தொழிலில், எங்களுக்கான லாபம் ரூ. 10 மட்டுமே, ஆனால் அரசுக்கு ரூ.50 வரி செலுத்த வேண்டியுள்ளது. விலை உயர்வால் பால் விலை உயரும் என்றாலும், மக்கள் மலிவு விலை, கலப்பட நெய், வெண்ணெய் ஆகியவற்றைத் தேடிச் செல்லத் தொடங்கி விட்டனர். இதனால் எங்களுக்கான ஆர்டர் குறைந்து விட்டது. வாரத்துக்கு சுமார் 10 டன் முதல் 15 டன் வரை அனுப்பி வந்தவர்கள், தற்போது 5 டன் வரை மட்டுமே அனுப்பி வருகிறோம்.
கடந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் கிடைத்த ஆர்டர்கள் இந்த ஆண்டு வெகுவாக குறைந்துவிட்டது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் முற்றிலுமாக இந்த பாரம்பரியத் தொழில் முடங்கி விடும்.
எனவே, மத்திய, மாநில அரசுகள் சிறப்பு கவனம் செலுத்தி, வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் அல்லது வரியைக் குறைக்க வேண்டும். பால் போன்ற மூலப் பொருளை அளிக்கும் எருமை மற்றும் பசுக்கள் அழியாமல் பார்த்துக் கொள்ள கொள்கை அளவில் திட்டம் வகுக்க வேண்டும். வெண்ணெய், நெய் தொழிலை ஊக்குவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com