இந்திய தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி சென்ற ஜூன் மாதத்தில் 7 சதவீதமாக அதிகரித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு, மின்சாரம், சுரங்கம் மற்றும் தயாரிப்பு துறை பிரிவுகளின் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்ததே முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம் சென்ற ஜூன் மாதத்தில் 7 சதவீதமாக அதிகரித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. கடந்த மே மாதத்தில் இந்த வளர்ச்சி விகிதம் 3.9 சதவீதமாக மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. முந்தை மதிப்பீட்டில் இது 3.2 சதவீதம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நடப்பாண்டு ஏப்ரல் -ஜூன் வரையிலான மூன்று மாத கால அளவில் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 5.2 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
தொழில் துறை உற்பத்தி குறியீட்டெண்ணை கணக்கிடுவதில் 77.63 சதவீத பங்களிப்பை வழங்கி வரும் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி சென்ற ஜூன் மாதத்தில் 6.9 சதவீதம் என்ற அளவிலான வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில் இத்துறையின் வளர்ச்சி 0.7 சதவீதம் சரிந்து காணப்பட்டது. அதேபோன்று, மின் துறை உற்பத்தி வளர்ச்சி விகிதமும் 2.1 சதவீதத்திலிருந்து அதிகரித்து 8.5 சதவீதமானது. மேலும், சுரங்க துறை உற்பத்தியும் 0.1 சதவீதத்திலிருந்து விறுவிறுப்படைந்து 6.6 சதவீதம் என்ற சாதனை அளவைத் தொட்டது என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.