தனிநபர் கடன்... தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்

கடன் என்ற சொல் சிலருக்கு எட்டிக் காயாக கசக்கும் அதே சமயத்தில்தான் பலாப்பழ சுளையாகவும் இனிக்கிறது. தற்போதைய வாழ்க்கை முறை பொருள் சார்ந்து இயங்குவதாக மாறிவிட்டது.
தனிநபர் கடன்... தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்

கடன் என்ற சொல் சிலருக்கு எட்டிக் காயாக கசக்கும் அதே சமயத்தில்தான் பலாப்பழ சுளையாகவும் இனிக்கிறது. தற்போதைய வாழ்க்கை முறை பொருள் சார்ந்து இயங்குவதாக மாறிவிட்டது. இதனால், கடன் என்பது ஏறக்குறைய அனைவரது வீட்டுக்கும் அழையா விருந்தாளியாக ஏதாவதொரு ரூபத்தில் வந்தே விடுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

கடன் வாங்கும் செயலை நியாயப்படுத்த பலர் இலங்கை வேந்தனே கடன்பெற்று வருந்தினான் என்று சொல்வதுண்டு. இன்னும் சொல்லப்போனால் நாடுகளே கடன் வாங்கிய பின்புதான் மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதற்கான வட்டியையும் தனது வரி வருவாயிலிருந்து காலம் தவறாமல் செலுத்தி வருகின்றன. அரசுகளின் நிலையே அவ்வாறு என்றால் சமானியனின் நிலை கேள்விக்குறிதான்.

கல்வி, மருத்துவம், சொத்துகள் வாங்குவது உள்ளிட்ட பல தேவைகளை நிறைவு செய்து கொள்ள கடன் பெறுவதில் சிலர் எந்தவித தயக்கமும் காட்டுவதில்லை. அதற்கு காரணம், கடன் குறித்த புரிதல்தான். எவ்வளவு கடன் வாங்குவது, எங்கு வாங்குவது,  அதனை எவ்வாறு திருப்பி செலுத்தவது, அதற்கான வருவாய் மூலங்கள் என்னென்ன என்பது குறித்து ஒரு சிலர் தெளிவான திட்டமிடலை முன்கூட்டியே செய்து விடுகின்றனர். இதனால், அவர்களுக்கு கடன் பெறுவது என்பது மிகவும் இனிப்பான செயலாகவே உள்ளது.

ஆனால், இன்னும் ஒரு சிலர் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு அதற்காக வருமானத்துக்கு அதிகமாக கடன்பெற்று அதனை திரும்பச் செலுத்த முடியாமல் அழிந்து போனதும் பலர் மனதில் காலத்தால் அழியாத சோகச் சுவடுகள்.

வீட்டில் புத்தாக்க பணிகளை மேற்கொள்ள அல்லது எதிர்பாராத செலவின தேவைகளுக்கு உடனடியாக ஒருவர்  நாடுவது தனிநபர் கடன். இந்த கடன் உடனடி பணத் தேவைக்காக பெறப்படுவதால் அதற்கான வட்டி விகிதமும் அதிகம். எனவே, இதுபோன்ற விஷயங்களில் நாம் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.

தகுதி:

முதலில் நாம் தனிநபர் கடனை பெற தகுதியானவர்தானா என்பது குறித்து வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் அளிக்கும் கால்குலேட்டர் மூலம் தெரிந்து கொள்வது அவசியம். ஏனெனில், எந்தவொரு நிறுவனமும், வங்கியும் கேட்ட உடனேயே கடனை வாரி வழங்கிவிடுவதில்லை. 

அவரது வருவாய், திருப்பிச் செலுத்தும் திறன், கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கணக்கிட்டே கடன் வழங்குகின்றன. உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் மற்றும் இதர காரணிகளை கணக்கில் கொண்டே கடன் அளவு, திருப்பி செலுத்தும் காலம் ஆகியவற்றை நிதி நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.

திருப்பி செலுத்தும் திறன்:

கடன் பெறுவதற்கான ஆதார விஷயங்களில் ஒன்று அதனை திருப்பி செலுத்தும் தகுதி. தகுதிக்கு மீறி கடன்பெற்று விட்டு அதனை செலுத்த முடியாமல் அவதியுறுவது பரிதாப நிலை. எனவே, ஒவ்வொருவரும் கடன் வாங்குவதற்கு முன்பாக உரிய காலத்தில் மாதத் தவணைத் தொகையை திரும்ப செலுத்த முடியுமா என்பதை ஒன்றுக்கு நூறு முறைய யோசனை செய்த பிறகுதான் அந்த செயலை செய்ய வேண்டும்.

முன்கூட்டிய செலுத்தலுக்கு அபராதம்:

கடனை வாங்கிய பின்பு அதனை குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே முடிக்க விரும்பும் தனிநபருக்கு நிறுவனங்கள் அபராத கட்டணங்களையும் வசூலிக்கின்றன. எனவே, முன்கூட்டிய செலுத்தலுக்கு குறைந்த அளவே அபராதம் விதிக்கும் கடன்களை பெறுவதே புத்திசாலித்தனமாகும்.

வட்டி விகிதம்:

தனிநபர் கடனில் அதிக பாதிப்பை ஏற்படுத்தவது வட்டி விகிதம்தான். ஏனெனில், இதர வகை கடன் பிரிவுகளை காட்டிலும் தனிநபர் கடனுக்கு நிதி நிறுவனங்கள் அதிக அளவில் வட்டி வசூலிக்கின்றன. கிரெடிட் ஸ்கோரைப் பொருத்து வட்டி விகிதமானது 15 முதல் 18 சதவீதம் வரை இருக்கும். இதனை உணர்ந்து, 

கடன் பெறுவோர் பல்வேறு நிதி நிறுவனங்கள், வங்கிகளின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்த்து கடன் பெறுவதே சாலச் சிறந்தது.

காலம்:

தனிநபர் கடன் என்பது நிதி நிறுவனங்களைப் பொருத்தவரையில் அதிக பாதுகாப்பில்லாததாகவே கருதப்படுகிறது. எனவேதான் அதற்கு வட்டி விகிதம் அதிகம் என்பது, கடன் செலுத்தும் காலம் மிக குறுகியதாகவும் உள்ளது. வீட்டு கடனைப் போன்று 10 அல்லது 20 ஆண்டு காலம் வரை தனிநபர் கடனை 

இழுக்க முடியாது. வங்கிகள் பொதுவாக தனிநபர் கடனுக்கான திருப்பி செலுத்தும் காலத்தை குறைந்தபட்சம் 1 ஆண்டாகவும் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரையிலும் நிர்ணயித்துள்ளன.

கடன் வாங்கும் நடவடிக்கையில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை முன்கூட்டியே ஆய்ந்தறிந்து அதற்கேற்றபடி திட்டமிட்டு செயல்படுவதே அறிவார்ந்த செயலாகும். அப்படி செய்யும்போது கடனும் ஒரு சுகமான சுமையே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com