திரும்புகிறதா ‘2008’..

அமெரிக்க அடமானக் கடன் சந்தையில் ஏற்பட்ட கடும் நெருக்கடியால் 2008-ஆம் ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு  மீண்டும் இப்போது ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் தொற்றிக் கொண்டுள்ளது.
திரும்புகிறதா ‘2008’..


அமெரிக்க அடமானக் கடன் சந்தையில் ஏற்பட்ட கடும் நெருக்கடியால் 2008-ஆம் ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு மீண்டும் இப்போது ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் தொற்றிக் கொண்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள  நிதிச் சந்தைகளில்  "பெரும் புயல்' தாக்கும் அபாயம் உள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள், எச்சரிக்கை விடுத்து வருவதே இதற்குக் காரணமாகும்.

அதிக லாபம் அளிக்கும் கடன் பத்திரங்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதை சில ஆண்டுகளுக்கு முன்பு கூட நாம் கண்டிராத ஒன்று. ஆனால், இப்போது அது நடந்து வருகிறது.  ஐரோப்பிய யூனியனில் உள்ள 14 கம்பெனிகளின் கடன் பத்திரங்கள் எதிர்மறை  விளைவைத் தந்து வருவதாக வால் ஸ்டீர்ட் ஜெர்னல் அண்மையில் தெரிவித்துள்ளது. இந்தப் பத்திரங்கள் அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு எச்சரிக்கையின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இந்நிலையில் இதுபோன்ற எச்சரிக்கை  மேலும் பின்னடைவுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். முதலீட்டாளர்களைப் பொருத்தவரையிலும், வருவாய் ஈட்டுவதைக் காட்டிலும், முதலீட்டைப் பாதுகாப்பதற்கான தீர்வை காண வேண்டிய நேரம் இது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

வல்லரசான அமெரிக்கா, கடந்த 2008-இல் ஏற்பட்ட கடும் பொருளாதார பின்னடைவால் பாதிப்பை உணர்ந்தது. அதைத் தொடர்ந்து எழுச்சி பெற்றாலும், அதன் பொருளாதாரம் வலுவுள்ளதாகக் கருத முடியாது. பொருளாதார மந்த நிலையைப் போக்க அண்மையில் அமெரிக்காவின் மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைந்துள்ளது.  பல்வேறு நாடுகளின் கரன்சிகளுக்கு  நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு தற்போது உயர்ந்துள்ளது. இருப்பினும், சீனாவுடனான வர்த்தகப் போர், ஈரான் மீதான பொருளாதாரத் தடை  நடவடிக்கை, சிரியா போர் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் உலக அளவில் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என நம்பப்படுகிறது. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் அதிரடி வர்த்தகப் போர் நடவடிக்கையின் காரணமாக அமெரிக்க டாலர் எந்த நேரத்திலும் வீழ்ச்சிக்கு செல்லும் என்றும்  குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தல் வரவுள்ள நிலையில், இதுபோன்ற நடவடிக்கை பொருளதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும்  நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இவற்றுக்கிடையே, உலக அளவில் சில்லரை முதலீட்டாளர்கள் முதல்  பெரும் முதலீட்டாளர்கள் வரை அனைவரின் முதலீடுகளுக்கும் சொல்லிக் கொள்ளும் அளவில்  லாபம் கிடைக்கவில்லை என்பது பெரும்பாலானோர்களுக்குத் தெரிந்திராத விஷயம்.  ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை, நிதிச் சந்தை உள்ளிட்டவற்றில் செய்யப்பட்டுள்ள  அனைத்து வகையான முதலீடுகளும் இதில் அடங்கும்.

வளர்ந்த நாடுகளில் 1990-இல் 38 சதவீதமாக இருந்த கார்ப்பரேட் வரி  விகிதம் 2018-இல் 22 சதவீதமாகக் குறைந்துள்ளது.  இதன் காரணமாக, குறைந்த வருவாய் ஈட்டும் நாடுகளும் தங்களது வரி விகிதத்தை மேலும் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்த வகையில், குறைந்த வருவாய் ஈட்டும் நாடுகளில் 46 சதவீதமாக இருந்த  கார்ப்பரேட் வரி விகிதம் 28 சதவீதமாகக் குறைந்துவிட்டது.  இது எந்த வகையிலும் பொருளாதாரத்துக்கு வலுச்சேர்க்காது என்பது பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளும் பொருளாதாரப் பின்னடைவு  ஏற்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. பொருளாதார வளர்ச்சியில் முன்னிலையில் இருந்து வந்த  சீனா தற்போது கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தகப் போர் நடவடிக்கை அந்த நாட்டை நிலைகுலையச் செய்துள்ளது.  ஜப்பானின் ஏற்றுமதி  கடந்த ஜூன் வரையிலான நான்கு மாதங்களில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துள்ளது.  கொரியாவின் நிலையும் இதுதான்.  சிங்ப்பூர் நாட்டின் பொருளாதாரமும் நெருக்கடியான கட்டத்தில்தான் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தோனேசியாவின் ஏற்றுமதியும் கடந்த ஜூன் வரையிலான காலத்தில் தொடர்ந்து 8 மாதங்களாக இறங்குமுகத்தில்தான் உள்ளது. அதே சமயம், மலேசியாவின் ஏற்றுமதி சிங்கப்பூர், இந்தோனேசியா நாடுகளைவிட சற்று பரவாயில்லை என்ற நிலையில் உள்ளது.

உலகளாவிய அரசியல் நிலப்பரப்பின் (Global political landscape) ஆய்வுகளும்  பொருளாதார வளர்ச்சிக்கு  சாதகமானதாக இல்லை. பல்வேறு நாடுகளில் அரசியலுக்குள் நுழையும் தலைவர்களும் முழுமையான சவால்களை எதிர்கொள்ளும் அளவுக்கு தகுதி வாய்ந்தவர்களாக இல்லை என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது ஒரு கசப்பான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. மேலும், பெரும்பாலான நாடுகளில் நிலவும் அரசியல் மோதல், அதிகார மோதல் ஆகியவை பொருளாதாரத்துக்கு கடும் சவாலை விடுத்து வருகிறது. குறிப்பாக 1998-இல் பின்னடைவைச் சந்தித்த தென்கிழக்கு ஆசிய நாடுகள் இன்னும் மீளமுடியாத நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டுகின்றனர் வல்லுநர்கள்.

ஐரோப்பாவை எடுத்துக் கொண்டால் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஏற்கெனவே ஐரோப்பிய யூனியன் நாடுகள்  கடும் பொருளாதார பின்னடைவைச் சந்தித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பல்வேறு உத்வேக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் மீளமுடியாத  நிலைதான் தொடர்கிறது.  ஐரோப்பிய பிராந்தியத்தின் பொருளாதாரம் 6.9 சதவீதத்தில் இருந்து மைனஸ் 10.6 சதவீதமாக உள்ளது.  இதற்கிடையே, பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்றுள்ளார். ஏற்கெனவே பிரெக்ஸிட் ஒப்பந்தம் இரண்டு பிரதமர்களின் பதவியை பறித்துவிட்டது. இந்நிலையில், பிரெக்ஸிட்டிலிருந்து வெளியேறுவதா,  இல்லையா என்று முடிவெடுக்கும் கடும் சவாலுடன் இவர் உள்ளார். பிரெக்ஸிட் விளைவுகள் என்ன என்பதை கணிக்க முடியாத நிலை தான் உள்ளது.  இச்சூழ்நிலையில், பிரிட்டனின் எண்ணெய் கப்பல் ஒன்றை ஈரான் அண்மையில் சிறைப்பிடித்தது. ஈரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதுபோன்ற எதிர்மறை நிகழ்வுகள் பொருளாதாரத்துக்கு வலுச்சேர்க்காது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்தபடியாக பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் உள்ள இந்தியாவில்,  மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தாலும், பொருளாதார வளர்ச்சி மெச்சும்படி இல்லை.  பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி அமலாக்கமும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பொருளாதார வளர்ச்சியும் 6.5-7 சதவீதத்துக்குள்ளாகத்தான் இருந்து வருகிறது. இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் உள்ளன. பங்குச் சந்தைகள், கடன் பத்திரங்கள் செய்யப்பட்ட முதலீடுகள் எதிர்பார்த்த லாபத்தை அளிக்கவில்லை. அண்டை நாடான இலங்கையிலும் பயங்கரவாதம் தலைதூக்கிவிட்டது. 

உலக அளவில் மொத்தத்தில் பொருளாதாரத்துக்கு வலுச்சேர்க்கும் அளவுக்கு எந்த ஒரு தெளிவான பாதையும் கண்ணுக்குத் தெரியாத நிலை தொடர்கிறது. நிதிச் சந்தைகளில் கடும் இடர்பாடுகளைச் சந்தித்து வரும் முதலீட்டாளர்கள், குறைந்த வருமானத்தில் காலம் தள்ளும் ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோர் நஷ்டத்தை சந்திப்பது எந்த நாட்டுக்கும் நல்லதாக அமையாது என்று நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர். எனவே, பொருளாதார வல்லுநர்களும், தர நிர்ணய நிறுவனங்களின் தரவுகளும் தெரிவிப்பது போல 2008-ஆம் ஆண்டு உலகளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு, மீண்டும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்ச உணர்வு  முதலீட்டாளர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரிடமும் தொற்றிக் கொண்டுள்ளது என்பதுதான் நிதர்சனம்...! 

இந்தியாவின் தற்போதைய நிலை என்ன?


உலக அளவில் பொருளாதார பின்னடைவு 2008-ஆம் ஏற்பட்டது போல இப்போதும் வந்துவிடுமோ என்ற அச்சம் தோன்றியுள்ள நிலையில், இந்தியாவின் தற்போதைய நிலை என்ன என்பதைப் பார்ப்பதும் மிகவும் முக்கியமாகும். 2008 -இல் உலகத்தில் பெரும்பாலான நாடுகள் பொருளாதார பின்னடைவைச் சந்தித்த போது, இந்தியாவிலும் அதன் தாக்கம் இருந்தது. பங்குச் சந்தைகள், நிதிச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. அதே சமயம்,  இந்திய மக்களிடம் சேமிப்பு பழக்கம் இருந்து வருவதால் ஓரளவு தாக்குப்பிடித்தது.  

இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்ந்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கடும் சவால்கள்  காத்திருப்பதாகவே தெரிகிறது.  நாடு ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவே பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

இந்தியாவில், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை, 18.94 லட்சமாகும்.  மொத்தம் மூடப்பட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 6.83 லட்சமாகும் (36.07 சதவீதம்) . இவற்றில், தொழில்துறைக்கு பெயர்போன மஹாராஷ்டிரத்தில் மட்டும் 1.42 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தலைநகர் தில்லியில் 1.25 லட்சம் நிறுவனங்கள்,  மேற்கு வங்கத்தில் 67 ஆயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், கடந்த, மூன்று ஆண்டுகளில், 594 நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட, 79 புகார்களை, தீவிர மோசடி விசாரணை அலுவலகம் விசாரித்து வருகிறது.  இத்தகவல்களை அண்மையில் மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிவு செய்துள்ளார்.

இதுபோன்று அடுத்தடுத்து வரும் தகவல்கள் மேலும் சிந்திக்க வைக்கின்றன. கடும் நிதிநெருக்கடியைச் சந்தித்த ஜெட்  ஏர்வேஸ் மூடப்பட்டுவிட்டது. ஏராளமான ஊழியர்கள் பரிதவிப்பில் உள்ளனர். ஏர் இந்தியா பயங்கரமான இழப்பில் உள்ளது. பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் கடும் நெருக்கடியான சூழலில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் (ஹெச்ஏஎல்) நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்குப் தள்ளப்பட்டுள்ளது.  

தொலைத் தொடர்பு நிறுவனங்களான டாடா டோகோமோ, ஏர்செல் ஆகியவை அழிவைச் சந்தித்துள்ளன.  ரியல் எஸ்டேட் உள்பட பல்வேறு நிறுவனங்களை உள்ளடக்கிய ஜேபி குழும நிறுவனங்கள் கடும் நிதிநெருக்கடியில் இருந்து வருகின்றன. அனில் அம்பானியின் நிறுவனங்கள் திவால் நிலையில் உள்ளன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான ஓஎன்ஜிசியின் செயல் திறன் மோசமான நிலையில் உள்ளதாக அறியப்படுகிறது. நாட்டில் பொதுத்துறை, தனியார் வங்கிகளில்  பெரிய தொகையை கடனாகப் பெற்ற பெரும்புள்ளிகளில் 36-க்கும் மேற்பட்டோர் நாட்டை விட்டு ஓடிவிட்டனர். 

இதற்கிடையே, ரூ.35 மில்லியன் கோடி அளவுக்கு பெரிய கடன் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. பிஎன்பி வங்கியில் நடந்த மோசடி பூதாகர விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  உள்நாட்டில் நுகர்வு நிலையில் மந்தநிலை தொடர்கிறது. ஆட்டோ மொபைல் துறை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.  டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸூகி உள்பட பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியை கணிசமான அளவு குறைத்துவிட்டது. இத்துறையில் ஏராளமான ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும், ரூ.60,000 கோடி அளவுக்கு கார்கள் விநியோகஸ்தர்களிடம் விற்காமல் தேங்கிக் கிடக்கின்றன.

ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள் சிலர் கடன் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  கட்டிமுடிக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் விலைபோகாமல் உள்ளன.  இடுபொருள்கள் செலவு உயர்ந்ததன் காரணமாக  ஏராளமான கட்டுமானங்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. டிரம்பின் வர்த்தகப் போர் நடவடிக்கை காரணமாக உலோக நிறுவனங்கள் நெருக்கடியைச் சந்தித்துள்ளன. பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் தங்கம் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. கடன் தொல்லையில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின்எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், "வளர்ச்சி இல்லை என்பதை மத்திய அரசு வேண்டுமானால் மறைக்கலாம். ஆனால், ஐஎம்எஃப், உலக வங்கி ஆகியவற்றின் புள்ளிவிவரங்கள் பொருளாதார மந்த நிலையை தெளிவாகத் தெரிவிக்கின்றன' என்று பஜாஜ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் ராகுல் பஜாஜ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com