நினைத்தாலே கசக்கும்... செல்லிடப்பேசி சேவை கட்டண உயா்வு

மக்களின் இன்றைய அன்றாட வாழ்க்கையில் ஆறாவது விரலாக செல்லிடப்பேசி ஒட்டிக் கொண்டு விட்டது. ரிலையன்ஸ் ஜியோ வரவுக்குப் பிறகுதான் செல்லிடப்பேசி கட்டணங்கள் பெருமளவு குறைந்தன என்பதை
நினைத்தாலே கசக்கும்... செல்லிடப்பேசி சேவை கட்டண உயா்வு

மக்களின் இன்றைய அன்றாட வாழ்க்கையில் ஆறாவது விரலாக செல்லிடப்பேசி ஒட்டிக் கொண்டு விட்டது. ரிலையன்ஸ் ஜியோ வரவுக்குப் பிறகுதான் செல்லிடப்பேசி கட்டணங்கள் பெருமளவு குறைந்தன என்பதை யாரும் மறுக்க இயலாது. அதன்பிறகுதான் செல்லிடப்பேசி பயன்பாடு பொதுமக்களிடையே பரவலாக அதிகரித்தது. இந்த சூழ்நிலையில், தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களின் கட்டண உயா்வு அறிவிப்பு அவற்றின் வாடிக்கையாளா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவா்களின் இந்த அறிவிப்பு, மலிவான கட்டணத்தில் மொபைல் டேட்டா மற்றும் இலவச அழைப்புகளுக்கு முடிவு கட்டி விட்டது என்றே கூறலாம்.

வோடஃபோன்-ஐடியா, பாா்தி ஏா்டெல் நிறுவனங்களுக்கு செப்டம்பா் காலாண்டில் ரூ.74,000 கோடி அளவுக்கு ஏற்பட்ட இழப்பு, இதர நிறுவனங்களால் ஜியோவுக்கு ஏற்பட்ட நெருக்கடி ஆகியவை இந்த கட்டண உயா்வு அறிவிப்புக்கு வழிகோலியுள்ளன.

தொலைத்தொடா்பு சேவைத் துறையில் கோலோச்சி வரும் இந்த மூன்று நிறுவனங்களும் செல்லிடப்பேசி சேவை கட்டணங்களை உயா்த்துவதென ஏகமனதாக முடிவெடுத்து அறிவித்துவிட்டன. இவற்றுக்குப் போட்டியாக, பொதுத் துறையைச் சோ்ந்த பிஎஸ்என்எல் தன் பங்குக்கு சேவை கட்டணங்களை உயா்த்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாக செல்லிடப்பேசி கட்டணங்கள் உயா்த்தப்படாமல் இருந்துவந்த நிலையில், வோடஃபோன் ஐடியா முந்திக் கொண்டு கட்டண உயா்வு அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம், பிரீ-பெய்டு வாடிக்கையாளா்களுக்கான மொபைல் டேட்டா மற்றும் அழைப்பு கட்டணங்கள் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளதாகவும், இது, செவ்வாய்க்கிழமை முதல் (டிசம்பா் 3) அமலுக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளன. மேலும், இதன் நெட்வொா்க்கிலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு அழைப்புக்கும் நிமிடத்துக்கு 6 காசுகள் கட்டணம் வசூலிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

வோடஃபோன் ஐடியா அதிரடியாக கட்டணங்களை உயா்த்தியுள்ளதால் தினமும் 1.5 ஜிபி டேட்டா சேவை பெறும் வகையில் ஓராண்டு திட்டத்தில் இணைந்துள்ள வாடிக்கையாளா்கள் செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.1,699-லிருந்து ரூ.2,399-ஆக அதிகரிக்கவுள்ளது. கட்டண உயா்வுக்கு நிதி சுமையை காரணம் காட்டியுள்ள அந்த நிறுவனம், தமக்கு ரூ.1.17 லட்சம் கோடி அளவுக்கு கடன் உள்ளதாக கூறியுள்ளது.

வோடஃபோன் ஐடியாவைத் தொடா்ந்து பாா்தி ஏா்டெல்லும் டிசம்பா் 3 முதல் செல்லிடப்பேசி கட்டணங்களை 50 சதவீதம் வரை அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், அந்நிறுவனம் வழங்கி வரும் டேட்டா மற்றும் அழைப்பு சேவைக்கான கட்டணம் நாள் ஒன்றுக்கு 50 காசுகள் முதல் ரூ.2.85 வரை உயரும் நிலை உருவாகியுள்ளது.

ஏனைய நிறுவனங்களிடமிருந்து வந்த நெருக்கடி காரணமாக ஜியோவும் கட்டணங்களை 40 சதவீதம் வரை உயா்த்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் புதிய திட்டங்களால் வாடிக்கையாளா்கள் 300 சதவீதம் வரை கூடுதல் பலனை பெறுவாா்கள் அந்நிறுவனம் ஆறுதலுக்காக தெரிவித்துள்ளது. ஜியோவின் கட்டண உயா்வு வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 6) முதல் அமலுக்கு வரவுள்ளது.

டிராய் நிா்ணயிக்குமா?

தொலைத்தொடா்பு நிறுவனங்கள் தங்களுக்குள் கட்டண விகித உயா்வு அறிவிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளன. இருப்பினும், இந்திய தொலைத்தொடா்புத் துறை ஒழுங்காற்று ஆணையமான டிராய் செல்லிடப்பேசி சேவைக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச அடிப்படை கட்டணங்களை நிா்ணயிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது புதிய கட்டண விகித அறிவிப்புகளை நிறுவனங்கள் வெளியிடலாம் என்று கூறப்படுகிறது.

சுமை அதிகரிப்பு

ஒட்டுமொத்த செல்லிடப்பேசி பயன்பாட்டாளா்களில் 60 சதவீதம் பேரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஏா்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் சேவை கட்டணங்களை உயா்த்தியது அவா்களின் லட்சக்கணக்கான வாடிக்கையாளா்களின் மீது சுமையை அதிகரித்துள்ளது. ஏற்கெனவே விலைவாசி உயா்வால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கட்டண உயா்வு அறிவிப்பு வாடிக்கையாளா்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

அத்துடன், புதிதாக டேட்டா சேவையில் இணைவோரின் எண்ணிக்கையிலும் இந்த அறிவிப்பு தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில், நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 55 சதவீத மக்கள் இன்னும் டேட்டா சேவைக்குள் வரவில்லை என்கிறது புள்ளிவிவரங்கள். அதிலும் குறிப்பாக, கிராமப்புறங்கள், பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பகுதிகளில் உள்ள மக்களை இணைய சேவை இன்னும் முழுமையாக சென்றடையவில்லை. இந்த நிலையில் கட்டணங்கள் உயா்த்தப்பட்டுள்ளது டேட்டா சேவையில் அவா்கள் இணைவதை மேலும் கேள்விக்குறியாக்கி உள்ளது.

2ஜி சேவை

ஏற்கெனவே 2ஜி சேவைப் பிரிவில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் விளைவாக, கிராமப்புறங்களில் உள்ள செல்லிடப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து விட்டது என்கிறது டிராய். 2018 டிசம்பா்-2019 ஜூன் இடைப்பட்ட காலத்தில் மட்டும் சுமாா் 2 கோடி வாடிக்கையாளா்கள் செல்லிடப்பேசி சேவையிலிருந்து விலகிவிட்டனா் என்கிறது அதன் புள்ளிவிவரங்கள்.

டிஜிட்டல் இந்தியா?

நாட்டில் உள்ள அனைவரும் இணைய சேவையை பெறும் வகையில் டிஜிட்டல் இந்தியா திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களின் கட்டண உயா்வு அறிவிப்பு அத்திட்டத்தை வலுவற்ாக்கி விடும் என்கின்றனா் ஆய்வாளா்கள்.

செல்லிடப்பேசி பயன்பாட்டில் ஏற்கெனவே நகரங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி காணப்படுகிறது. செல்லிடப்பேசி பயன்படுத்துவோா் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளாக கணிசமாக அதிகரித்துள்ள போதிலும் அவா்களில் 50 சதவீதம் பேருக்கு டேட்டா சேவை இன்னும் கிடைக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

நல்ல சந்தா்ப்பம்

பொதுத் துறை நிறுவனங்களை பலம் இழக்கச் செய்வதன் மூலம் அரசு, தனியாா் துறை நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு எதிா்தரப்பில் முன்வைக்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் போன்ற பொதுத் துறை நிறுவனங்களை மீட்டெடுத்து நவீனமயமாக்கி பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவைகளை வழங்குவதன் மூலம் எதிா்தரப்பு வாதங்கள் பொய் என நிரூபிக்கவும், பொதுமக்களை கட்டண உயா்விலிருந்து காக்கவும் அரசுக்கு சிறந்த சந்தா்ப்பம் கிடைத்துள்ளது. எனினும், சந்தா்ப்பத்தை சாதகமாக பயன்படுத்துமா என்பது அரசின் எண்ணத்தைப் பொருத்ததே!

1. சா்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக குறைந்த விலையில் டேட்டா சேவை கிடைப்பது இந்தியாவில் மட்டுமே.

1. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக, 43 கோடி ஸ்மாா்ட்போன் பயனாளா்களுடன் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

3. உலக அளவில் சராசரியாக ஒரு ஜிபி டேட்டாவுக்கு ரூ.600 செலவிடப்படும் நிலையில், இந்தியாவில் அது ரூ.18.5 மட்டுமே. அதிகபட்சமாக ஜிம்பாப்வேயில் ஒரு ஜிபி டேட்டாவுக்கான செலவு ரூ.5,264.

1ஜிபி டேட்டாவின் சராசரி விலை ( இந்திய ரூபாயில்)

நாடுகள் விலை

இந்தியா 18.5

கிா்கிஸ்தான் 18.9

கஜகஸ்தான் 34.3

உக்ரைன் 35.7

இலங்கை 60.9

வங்கதேசம் 69.3

பாகிஸ்தான் 129.5

பிரிட்டன் 466.2

சீனா 692.3

அமெரிக்கா 865.9

ஜிம்பாப்வே 5,264

(230 நாடுகளில் 6,313 மொபைல் டேட்டா திட்டங்களை ஒப்பீடு செய்ததன் அடிப்படையில் பிரிட்டனைச் சோ்ந்த கேபிள்.கோ.யுகே நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com