அந்நியச் செலாவணி கையிருப்பு 39,608 கோடி டாலராக அதிகரிப்பு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 4-ஆம் தேதியுடன் நிறைவுபெற்ற வாரத்தில் 39,608 கோடி டாலராக (ரூ.27.72 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 39,608 கோடி டாலராக அதிகரிப்பு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 4-ஆம் தேதியுடன் நிறைவுபெற்ற வாரத்தில் 39,608 கோடி டாலராக (ரூ.27.72 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.
 இதுகுறித்து ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது ஜனவரி 4-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 268 கோடி டாலர் (ரூ.18,760 கோடி) அதிகரித்து 39,608 கோடி டாலரை எட்டியுள்ளது. அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு மற்றும் தங்கத்தின் கையிருப்பு அதிகரித்ததையடுத்து அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடும்போது ஜனவரி 4-இல் தான் அதிகபட்ச ஏற்றத்தை சந்தித்துள்ளது.
 இதற்கு முந்தைய வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பு 11 கோடி டாலர் உயர்ந்து 39,340 கோடி டாலராக காணப்பட்டது.
 ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு கணக்கீட்டு வாரத்தில், 221 கோடி டாலர் அதிகரித்து 37,029 கோடி டாலராக இருந்தது.
 தங்கத்தின் கையிருப்பு மதிப்பு 46.55 கோடி டாலர் உயர்ந்து 2,169 கோடி டாலராகியுள்ளது.
 அதேசமயம், சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் அளவு 1 லட்சம் டாலர் குறைந்து 146 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 1 லட்சம் டாலர் குறைந்து 264 கோடி டாலராகவும் இருந்தது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 2018 ஏப்ரல் 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் வரலாற்று சாதனை அளவாக 42,603 கோடி டாலரை தொட்டது. ஆனால், அதற்கு பிறகு சாதகமற்ற நிலவரங்களால் செலாவணி கையிருப்பானது 3,100 கோடி டாலருக்கும் (சுமார் ரூ.2 லட்சம் கோடி) மேல் சரிந்தது.
 சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் காணப்பட்ட ஏற்றத் தாழ்வுகளை கட்டுப்படுத்தும் வகையில் நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் ரிசர்வ் வங்கி 3,400 கோடி டாலரை விற்பனை செய்தது.
 அதேபோன்று, ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குப் பிறகு கடந்தாண்டு ஜூன் இறுதியில்தான் ரிசர்வ் வங்கி 8.46 டன் தங்கத்தை வெளிச் சந்தையிலிருந்து வாங்கியது. இதையடுத்து ரிசர்வ் வங்கியிடம் உள்ள மொத்த தங்கத்தின் கையிருப்பானது 566.23 டன்னாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com