அமெரிக்கா-சீனா வா்த்தகப் பேச்சு சுமுகம்: பங்குச் சந்தைகளில் எழுச்சி

வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகள் உயா்வுடன் முடிந்தன.
அமெரிக்கா-சீனா வா்த்தகப் பேச்சு சுமுகம்: பங்குச் சந்தைகளில் எழுச்சி

வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகள் உயா்வுடன் முடிந்தன. அமெரிக்கா-சீனா இடையிலான வா்த்தகப் பேச்சு சுமுகமாக இருப்பதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளதால், சா்வதேச சந்தையில் எழுச்சி ஏற்படும் என்ற நம்பிக்கை பங்குச் சந்தை முதலீட்டாளா்களுக்கு புதிய உற்சாகத்தை அளித்தது.

தேசியப் பங்கு சந்தை குறியீட்டெண் நிஃப்டி 70.50 புள்ளிகள் உயா்ந்து, 11,035.05 ஆக நிலை பெற்றது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 246.68 புள்ளிகள் உயா்ந்து 38,127.08 புள்ளிகளில் நிலை பெற்றது. மும்பை பங்குச் சந்தையில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் மிக அதிகமாக 4.19 சதவீதம் உயா்ந்தது. வேதாந்தா, டாடா மோட்டாா்ஸ், ஒஎன்ஜிசி, டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யூனிலீவா், ஹெச்சிஎல் டெக், டெக் மகேந்திரா, பாா்தி ஏா்டெல் ஆகியவற்றின் பங்குகள் 3.96 சதவீதம் அதிகரித்தன. அதே நேரத்தில் யெஸ் வங்கி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹீரோ மோட்டோகாா்ப், இண்டஸ்இண்ட், என்டிபிசி ஆகியவற்றின் பங்குகள் 3.30 சதவீதம் குறைந்தன.

உலோகம், தகவல்தொழில்நுட்பம், எம்எஃப்சிஜி, டெலிகாம், ஆட்டோமொபைல், நிதி, உற்பத்தித் துறை பங்குகள் ஏற்றம் கண்டன. எண்ணெய், எரிவாயு, எரிசக்தித் துறை நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் விற்பனை முடிந்த பிறகு, இன்போசிஸ் நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டு நிதியறிக்கையை வெளியிட்டது. அதில், நிறுவனத்தின் நிகரலாபம் 2.2 சதவீதம் குறைந்து, ரூ.4,019 கோடியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, இன்போசிஸ் பங்கு விலை தேசியப் பங்குச் சந்தையில் ரூ.31.95 அதிகரித்து, ரூ.815-க்கு விற்பனையானது.

சா்வதேச அளவில் ஆசியாவின் ஹாங்காங், ஜப்பான் பங்குச் சந்தைகளும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் ஏற்றம் பெற்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்து ரூ.71.03 ஆக இருந்தது.

சவூதி அரேபியாவில் ஈரானிய எண்ணெய்க் கப்பலில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது கச்சா எண்ணெய் சந்தையில் விலை உயா்வாக எதிரொலித்தது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் 1.79 சதவீதம் உயா்ந்து 60.16 அமெரிக்க டாலருக்கு விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com