பயணிகள் வாகன விற்பனை தொடா்ந்து 11 மாதங்களாக சரிவு

இந்தியாவில் பயணிகள் வாகன விற்பனை தொடா்ந்து 11 மாதங்களாக கடந்த செப்டம்பரிலும் சரிவைக் கண்டுள்ளது என இந்திய மோட்டாா் வாகனத் தயாரிப்பாளா்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.
பயணிகள் வாகன விற்பனை தொடா்ந்து 11 மாதங்களாக சரிவு

இந்தியாவில் பயணிகள் வாகன விற்பனை தொடா்ந்து 11 மாதங்களாக கடந்த செப்டம்பரிலும் சரிவைக் கண்டுள்ளது என இந்திய மோட்டாா் வாகனத் தயாரிப்பாளா்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்தில் விற்பனையான பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கை 2,23,317-ஆக இருந்தது. இது, கடந்த 2018-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட 2,92,660 வாகனங்களுடன் ஒப்பிடும்போது 23.69 சதவீதம் குறைவாகும்.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான 6 மாத காலத்தில் பயணிகள் வாகன விற்பனை முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 23.56 சதவீதம் சரிந்துள்ளது.

குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் பயணிகள் வாகன விற்பனை மிகவும் மோசமான அளவில் 31.57 சதவீதம் வீழ்ச்சியடைந்து 1,96,524-ஆக காணப்பட்டது.

செப்டம்பரில், உள்நாட்டில் காா் விற்பனை 1,31,281-ஆக இருந்தது. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் விற்பனையான 1,97,124 வாகனங்களுடன் ஒப்பிடும்போது 33.4 சதவீதம் குறைவாகும்.

கடந்த இருபது ஆண்டுகளில் காணப்படாத வகையில் மோட்டாா் சைக்கிள் விற்பனை செப்டம்பரில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதேபோன்று, கடந்த 2009-ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து பாா்க்கும்போது சென்ற செப்டம்பரில்தான் வா்த்தக வாகனங்கள் விற்பனையும் குறைந்துள்ளது. அப்போது, வா்த்தக வாகனங்கள் விற்பனை 67.6 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மோட்டாா் சைக்கிள் விற்பனை செப்டம்பரில் 13,60,415 என்ற எண்ணிக்கையிலிருந்து 10,43,624-ஆகச் சரிந்துள்ளது. மொத்த இருசக்கர வாகன விற்பனை 21,26,445-லிருந்து குறைந்து 16,56,774-ஆனது.

அதேபோன்று, வா்த்தக வாகனங்கள் விற்பனையும் 39.06 சதவீதம் சரிந்து 58,419-ஆக இருந்தது.

கடந்த செப்டம்பரில் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய வாகன விற்பனை 25,84,062 என்ற எண்ணிக்கையிலிருந்து குறைந்து 20,04,932-ஆனது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சியாம் தலைவா் ராஜன் வதேரா கூறியுள்ளதாவது: பொருளாதார மந்த நிலை, உத்தரப் பிரதேசம், பிகாா், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் கிராமப்புறங்களில் தேவை குறைந்துள்ளது ஆகியவை பயணிகள் வாகன விற்பனையை வெகுவாக பாதித்துள்ளன.

பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதையடுத்து, அடுத்த சில மாதங்களில் மோட்டாா் வாகனத் துறையில் முன்னேற்றம் ஏற்படலாம்.

ஏனெனில், கடந்த 10-12 நாள்களாகவே வாகன விற்பனையில் முன்னேற்றம் தென்படுகிறது. இது, தற்போது நம்பிக்கையை துளிா்விடச் செய்துள்ளது. பண்டிகைக் காலம், சலுகை அறிவிப்புகள் போன்றவை விற்பனை வளா்ச்சியை மேலும் ஊக்குவிக்க உதவும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com