மின்மாற்றிகள் தட்டுப்பாடு: சிறு, குறு தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பாதிப்பு

கோவை மண்டலத்துக்கு உள்பட்ட மின் பகிர்மான கோட்டப் பகுதிகளில் மின் மாற்றிகள் தட்டுப்பாட்டால் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மின்மாற்றிகள் தட்டுப்பாடு: சிறு, குறு தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பாதிப்பு

கோவை மண்டலத்துக்கு உள்பட்ட மின் பகிர்மான கோட்டப் பகுதிகளில் மின் மாற்றிகள் தட்டுப்பாட்டால் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மண்டலத்தில் கோவை மாநகர், வடக்கு, தெற்கு, பல்லடம், திருப்பூர், நீலகிரி, உடுமலை, பொள்ளாச்சி உள்பட 30 மின் பகிர்மான கோட்டங்கள் உள்ளன. இதில் கோவை, திருப்பூர், பல்லடம், உடுமலை மின் பகிர்மான கோட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 

விசைத் தறி, டெக்ஸ்டைல்ஸ், வார்படத் தொழில் என பல்வேறு வகையான சிறு, குறு மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் உள்ளன. குறிப்பாக கோவையில் கணபதி, சுந்தராபுரம், கோவை புறநகர்ப் பகுதிகளான சின்னியம்பாளையம், சோமனூர், காரமடை, அரசூர், சூலூர் பகுதிகளிலும், திருப்பூர் மாவட்டத்தின் பல்லடம், குடிமங்கலம், தாராபுரம் ஆகிய பகுதிகளிலும் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள், விசைத்தறிக் கூடங்கள் அதிக அளவில் இயங்கி வருகின்றன.
இந்த நிறுவனங்களுக்கு 111 கிலோ வாட் மின் பளு வரை தாழ்வழுத்த மின் இணைப்பாகவும், 112 கிலோ வாட்டுக்கு மேல் மின் பளு உயரழுத்த மின் இணைப்பாகவும் வழங்கப்படுகிறது. 

பெரிய தொழிற்சாலைகளுக்கு உயர் அழுத்த மின் இணைப்பும், மற்ற தொழில் நிறுவனங்களுக்குத் தாழ்வழுத்த மின் இணைப்பும் அளிக்கப்படுகிறது.
தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப அந்தந்தப் பகுதியில் ஏற்கெனவே உள்ள 100 கிலோ வாட், 250 கிலோ வாட் மற்றும் 500 கிலோ வாட் ஆகிய 3 வகை  மின் மாற்றிகள் மூலம் தேவைப்படும் மின்பளு வழங்கப்படுகிறது. தவிர தொழில் நிறுவனங்கள் கூடுதல் மின் பளு கேட்கும்போது மின்மாற்றியின் மின்திறனைப் பொருத்து கூடுதல் மின் பளு வழங்கப்படும்.

அதிகரித்து வரும் தொழில் நிறுவனங்கள், உற்பத்தியால் மின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கூடுதல் மின்பளு கேட்டு தொழில் நிறுவனத்தினர் தினமும் மின் வாரியத்தை அணுகி வருகின்றனர். கோவை மண்டலத்தில் உள்ள பெரும்பாலான மின் பகிர்மான கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள மின் மாற்றிகள் போதிய திறன் இல்லாமல் காணப்படுவதாகவும், இதனால் கூடுதல் மின் பளு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

கூடுதல் மின் பளு வேண்டி தொழில் நிறுவனங்கள் மாதக்கணக்கில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் புதிய மின்மாற்றிகள் அமைத்தால் மட்டுமே கூடுதல் மின் பளு வழங்க முடியும் என மின்சார வாரியத்தினர் தெரிவித்து வருகின்றனர்.

 இதனால், வளர்ந்து வரும் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டு தொழிலே முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தொழில் துறையினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலாளர் நா.லோகு கூறியதாவது:

கோவை, திருப்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களும் தொழில் துறையில் வேகமாக வளர்ந்து வருகின்றன. இதனால் ஆண்டுதோறும் மின் தேவையும் அதிகரித்துள்ளது. இதற்கேற்ப மின்மாற்றிகளின் திறனை அதிகரிக்கும் வகையில் கூடுதல் மின் திறன் கொண்ட மின்மாற்றிகளை அமைக்க மின்சார வாரியம் திட்டமிடாமல் செயல்பட்டு வருகிறது.

கூடுதல் மின் பளு கேட்டு வரும் நுகர்வோரிடம் மின்மாற்றிகள் தட்டுப்பாடு உள்ளது. இதனால் கூடுதல் மின் பளு வழங்க காலதாமதம் ஏற்படும் எனவும் தெரிவிப்பதில்லை. இதற்கான தொகையை நுகர்வோரிடம் இருந்த பெற்றுக்கொண்ட பிறகுதான் இது தொடர்பாகத் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து நுகர்வோர் வலியுறுத்தும்போது அவர்களது சொந்த செலவில் மின்மாற்றிகளை அமைத்துக் கொள்ளவும், பின்னர் மின் பயன்பாட்டுக் கட்டணத்தில் குறைத்துக்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர். நடைமுறையில் சாத்தியமில்லாத திட்டங்களையே அதிகாரிகள் தெரிவித்து வருவதால் தொழில் நிறுவனங்கள் நெருக்கடிக்கு உள்ளாகின்றன.

எனவே, தொழில் நிறுவனங்களின் நிலைமையைக் கருதி தேவைப்படும் இடங்களில் புதிய மின்மாற்றியும், ஏற்கெனவே உள்ள மின்மாற்றிகளின் மின்திறனை அதிகரிக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புறநகரான அரசூர் பகுதிகளில் பாதுகாப்புத் துறை தளவாடங்கள் உற்பத்தி மையம் அமைப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் மேலும் தொழில் நிறுவனங்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே தொழில் நிறுவனங்கள் அதிகரித்து வரும் பகுதிகளில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கவும் மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தின் செயல்திறன் விதிப்படி,  விண்ணப்பித்த நுகர்வோருக்கு மின்மாற்றி தேவைப்படாதபட்சத்தில் 60 நாள்களுக்குள்ளும், மின்மாற்றி தேவைப்படும்பட்சத்தில் 90 நாள்களுக்குள்ளும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிய காலத்தில் மின்சாரம் வழங்கத் தவறினால், தவறும் ஒவ்வொரு நாளும் ரூ. 1000 வரை அபராதம் விதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

இது குறித்து கோவை மின் பகிர்மான கோட்ட தலைமைப் பொறியாளர் அருள்மொழி கூறியதாவது:

கோவை மண்டலத்துக்கு உள்பட்ட பெரும்பாலான கோட்டங்களில் 250 மின் மாற்றிகள் வரை தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. மேலும், தொழில் நிறுவனங்களின் உற்பத்தி அதிகரித்து வருவதால் மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக 259 கிலோ வாட் மின்மாற்றிகள் பற்றாக்குறை உள்ளது. புதிய மின்மாற்றிகள் வழங்கக்கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com