நலிவடைந்து வரும் முந்திரி வர்த்தகம்

உணவு வகைகளில் சுவை கூட்ட சேர்க்கப்படும் பொருள்களில் முந்திரி முக்கிய இடம் வகிக்கிறது. இந்தியா, வியட்நாம், நைஜீரியா, பிரேசில், இந்தோனேசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முந்திரி அதிகளவில் விளைகிறது.
நலிவடைந்து வரும் முந்திரி வர்த்தகம்


உணவு வகைகளில் சுவை கூட்ட சேர்க்கப்படும் பொருள்களில் முந்திரி முக்கிய இடம் வகிக்கிறது. இந்தியா, வியட்நாம், நைஜீரியா, பிரேசில், இந்தோனேசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முந்திரி அதிகளவில் விளைகிறது. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இங்கு 26 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் முந்திரி பயிரிடப்பட்டு, ஆண்டுக்கு சுமார் 16 ஆயிரம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.

பண்ருட்டியில் முந்திரியை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் பல நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் பற்றாக்குறை காரணமாக ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், வியத்நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் முந்திரிக் கொட்டைகளை இறக்குமதி செய்து அதைப் பதப்படுத்தி அமெரிக்கா, சிங்கப்பூர், அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. இந்தப் பணிகள் குடிசைத் தொழிலாக நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இதில் கிராமப்புற பெண்களின் பங்களிப்பு 85 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. முந்திரி ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.200 கோடி அளவுக்கு அந்நியச் செலாவணி ஈட்டப்படுகிறது. உலகச் சந்தையில் முந்திரிக்கான தேவை அதிகமாக உள்ளது. பல நாடுகளில் முந்திரி தொழில் வளர்ச்சியடைந்து வருகிறது. குறிப்பாக, வியத்நாம் நாடு முந்திரி உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் தொழிலில் சிறந்து விளங்குகிறது. இதற்கு அந்த நாடு அரசு அளித்துவரும் ஊக்கமே காரணம் எனக் கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் வியத்நாம் முந்திரி ஏற்றுமதியாளர்களுடன், இந்திய ஏற்றுமதியாளர்களால் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

பண்ருட்டி பகுதியில் முந்திரி தொழிலை மேம்படுத்த அரசின் ஊக்க நடவடிக்கையும், கடன் வசதியும் தேவைப்படுகிறது. ஆனால், இதற்காக மத்திய, மாநில அரசுகள் கைகொடுக்கவில்லை என்ற கருத்து நிலவுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கச் செயலர் எம்.ராமகிருஷ்ணன் கூறியதாவது: 

இந்தப் பகுதியில் முந்திரி உற்பத்தி குறைந்து வரும் சூழலில் பற்றாக்குறை ஏற்படுவதால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். தற்போது, இயந்திரப் பயன்பாடு காரணமாக ஆப்பிரிகா போன்ற நாடுகளிலும் முந்திரி உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளது. தற்போது, உள்ளூர் முந்திரிக் கொட்டை மூட்டை (80 கிலோ) ரூ.8 ஆயிரம் வரை விலை போகிறது. கடந்த சில ஆண்டுகளாக முந்திரி கொட்டை விலை அதிகரித்து வருகிறது. அதை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியவில்லை. 

முந்திரி ஏற்றுமதியில் அதிக பிரச்னைகள் உள்ளன. இறக்குமதி செய்ய வேண்டுமெனில் முன்கூட்டியே அனுமதிச் சான்று பெற்றால்தான் வரியை தவிர்க்க முடியும். அந்த வகையில் ஏராளமான அனுமதிக் கடிதங்கள் முடிக்கப்படாமல் தேங்கியுள்ளன. இதுகுறித்து அரசிடம் முறையிட்டுள்ளோம். 
வியத்நாமில் இருந்து கால்நடை தீவனம் என்ற பெயரில் சட்டத்துக்கு புறம்பாக முந்திரி பயறுகளை வரி இல்லாமல் தில்லி, மும்பை சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். இதனால், உள்ளூர் சந்தைகளில் முந்திரி விலையில் கடும் வீழ்ச்சி ஏற்படுகிறது. எனவே, இதை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜிஎஸ்டி வரி விதிப்பால் இந்தத் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, ஜிஎஸ்டி மற்றும் ஏற்றுமதிக்கான கெடுபிடிகளை எளிமையாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  முந்திரி தொழிலில் நிலவும் பல்வேறு பிரச்னைகளால் கேரள மாநிலத்தில் இந்தத் தொழிலை சார்ந்திருந்த சுமார் 60 சதவீதம் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. பாரம்பரியத் தொழில் என்பதால் பண்ருட்டியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதே நெருக்கடி நிலை நீடித்தால் முந்திரி தொழிலை மேற்கொள்வது மிகவும் சிரமம் என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com